விநாயகர் சிலைகள் அமைக்க போலீஸ் அனுமதி...கட்டாயம்!: தீயணைப்பு, மின் துறையிடமிருந்து சான்று அவசியம்| Dinamalar

விநாயகர் சிலைகள் அமைக்க போலீஸ் அனுமதி...கட்டாயம்!: தீயணைப்பு, மின் துறையிடமிருந்து சான்று அவசியம்

Updated : ஆக 25, 2022 | Added : ஆக 25, 2022 | |
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைக்க, காவல் துறையின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். தீயணைப்பு, வருவாய், மின் துறை மற்றும் இடத்தின் உரிமையாளர் ஆகியோரின் தடையில்லா சான்று சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது. இதுவரை 951 பேர் விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 31ம் தேதி
 விநாயகர் சிலைகள் அமைக்க போலீஸ் அனுமதி...கட்டாயம்!: தீயணைப்பு, மின் துறையிடமிருந்து சான்று அவசியம்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் அமைக்க, காவல் துறையின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும். தீயணைப்பு, வருவாய், மின் துறை மற்றும் இடத்தின் உரிமையாளர் ஆகியோரின் தடையில்லா சான்று சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

இதுவரை 951 பேர் விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பக்தர்கள் தங்கள் விரும்பும் வகையில், விநாயகர் சிலைகளை வடிவமைத்து, வீடு, கோவில், மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பிரதிஷ்டை செய்து, வழிபடுவது வழக்கம்.


உத்தரவு


திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளாக, 'கொரோனா' தொற்று காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்து உள்ள நிலையில், இந்த ஆண்டு, வெகு விமரிசையாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பக்தர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.


இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு மற்றும் அனைத்து அரசு துறையினருடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று முன்தினம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், எஸ்.பி.சீபாஸ் கல்யாண், அம்பத்துார் துணை காவல் கண்காணிப்பாளர் மகேஸ், திருவள்ளூர் சப் - கலெக்டர் மகாபாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.


கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, பாதிப்பு ஏற்படாதவாறு நடத்தவும், விநாயகர் சிலைகளை அமைத்து, அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்கவும், நீதிமன்றம் உத்தவிட்டு உள்ளது.இதன்படி, சிலைகளை அமைக்க விரும்புவோர், காவல் துறை, வருவாய் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும்.மேலும், காவல் துறை, மின்சார வாரியம், தீயணைப்பு துறை, நில உரிமையாளர் ஆகியோரிடம் தடையில்லா சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.


ரசாயன சிலைகளுக்கு தடை


விநாயகர் சிலைகள், களிமண் போன்ற எளிதில் கரையும் தன்மையுடன் செய்யப்பட்ட தாகவும், ரசாயனக் கலவையற்றதுமாக இருக்க வேண்டும்.நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்களை உடைய சிலைகளை உபயோகிக்க வேண்டும்.ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளையும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட, 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' கொண்டு விநாயகர் சிலைகள் செய்யக்கூடாது. இதை கடைப்பிடித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அழைக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.

*விநாயகர் சிலைகள், 10 அடிக்கு மேல் நிறுவக் கூடாது


* சிலை அமைக்கும் இடத்தில், எளிதில் தீப்பற்ற கூடியதாக இருத்தல் கூடாது. பக்தர்கள் சென்று, வெளியில் வர தனித்தனி வழி இருக்க வேண்டும்


* இதர மத வழிபாட்டு தலம், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் அமைக்க வேண்டாம்


* விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பிற்காக தன்னார்வலர்களை நிறுத்தி வைக்க வேண்டும்


* எந்த ஒரு அரசியல் மற்றும் மத தலைவர் குறித்த விளம்பர பதாகை விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்தில் இருத்தல் கூடாது பொது இடத்தில் நிறுவப்பட்ட விநாயகர் சிலைகள், 5 தினங்களுக்குள் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் கரைக்கப்பட வேண்டும்


* சிலைகள் கரைக்க, மினி லாரி, டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்த வேண்டும்; மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி, மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்த கூடாது


* பட்டாசு போன்ற வெடி பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கவனத்திற்கு...


951 சிலைக்கு விண்ணப்பம்



திருவள்ளூர் காவல் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ஆகிய காவல் உட்கோட்டங்களில், இதுவரை, 951 விநாயகர் சிலைகள் அமைக்க விண்ணப்பம் பெறப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு, 1,134 சிலைகள் நிறுவப்பட்டன. விநாயகர் சிலைகள் கரைக்கும் ஊர்வலத்திற்காக, 900 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X