வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : தங்களை கண்டுகொள்ளாத தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க, பரந்துார் விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் விவகாரத்தை கையிலெடுக்க, பா.ம.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்துாரில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. புதிய விமான நிலையத்திற்காக 5,௦௦௦ ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுக்க, பரந்துார் விவகாரத்தை கையிலெடுக்க, பா.ம.க., திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
சென்னை -- சேலம் எட்டு வழிச்சாலை, நெய்வேலி என்.எல்.சி., நிறுவன விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதை, பா.ம.க., கடுமையாக எதிர்த்து வருகிறது.தி.மு.க., அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான பரந்துார் விமான நிலையத்திற்கு, அப்பகுதி மக்களிடம் உள்ள எதிர்ப்பை பயன்படுத்தி போராட்டங்களை நடத்த, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் முதல் கட்டமாக, பரந்துார் மக்களிடம், இன்று அன்புமணி கருத்து கேட்க இருக்கிறார். இதற்காக, காஞ்சிபுரத்தில் அரங்க கூட்டத்திற்கு பா.ம.க., ஏற்பாடு செய்துள்ளது.விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை சந்திப்பதால், தி.மு.க., அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு அன்புமணி தயாராகி விட்டதாக, பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.