வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் அப்பீல் வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
கடந்த மாதம் 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த 'அப்பீல்' வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக.,25) நடைபெற்றது. அப்போது பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டதாவது: அதிகாரம் பெற்றவர் பொதுக்குழுவை கூட்டவில்லை என தனிநீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளது தவறு. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவுகளுக்கு எதிராக தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. 2,190 உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று ஜூலை 11 பொதுக்குழு நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
செயல்பட முடியாத நிலை
பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அப்பால் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒற்றை தலைமை வேண்டும் எனக் கோர எந்த புள்ளிவிவரங்களும் இல்லை என்ற தனி நீதிபதி தீர்ப்பு யூகத்தின் அடிப்படையிலானது. 2,539 உறுப்பினர்கள் பழனிசாமி இடைக்கால பொதுச்செயலராக ஆதரவளித்துளளனர். தனி நீதிபதி உத்தரவால் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக.,வால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்சி விவகாரங்களை பொறுத்தவரை பொதுக்குழு முடிவே இறுதியானது. இதை ஏற்றுக் கொள்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக இருக்க முடியும்.

தனி ஒரு நபர் பயனடையும் வகையில் தான் தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது. ஜூன் 23 பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் பங்கேற்றதிலோ, அடுத்த பொதுக்குழு தொடர்பான முடிவு எடுக்கப்பட்டதிலோ எந்த பிரச்னையும் இல்லை. பொதுக்குழு நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை என எந்த பொதுக்குழு உறுப்பினரும் புகார் தெரிவிக்கவில்லை. ஓபிஎஸ் தரப்பினர் குறிப்பிட்டு எதையும் கோரிக்கை விடுக்கப்படாத நிலையில், கோரப்படாத நிவாரணம் வழங்கியது அசாதரணமானது. இவ்வாறு வாதிட்டார்.
பன்னீர்செல்வம் தரப்பு
இதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், 'கட்சி விதியின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். இதனால் இபிஎஸ் தரப்பு அளித்த ஜூலை 11 பொதுக்குழுக் கூட்ட நோட்டீஸ் செல்லாது. கட்சி நிர்வாகிகள் தேர்தலை பதிவு செய்யவே ஜூன் 23ல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் தேர்தல் விதிகள் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக எந்த தீர்மானமும் இல்லை.

மேலும், ஜூன் 23ல் தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை, நிராகரிக்கப்பட்டன. சஸ்பெண்ட் நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் பதவிகள் காலியென கூறலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்கிறார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவி காலியாகிவிடும் என விதி இல்லை' என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரு தரப்பினரின் வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக நாளை (ஆக.,26) மாலை 3 மணிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.