சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
காவடி துாக்குவது இழிவானதா முதல்வரே!க.சரவணன், திருச்சியிலிருந்து எழுதுகிறார்: 'டில்லிக்கு காவடி துாக்கவா போகிறேன்... கைகட்டி வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்... நான், கருணாநிதியின் பிள்ளை' என பேசியிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின். இதன் வாயிலாக, காவடி துாக்குவதை கேவலமானதாக சித்தரிக்க முயற்சித்திருக்கிறார். இது, ஹிந்துக்களின் வழிபாட்டை, இறை நம்பிக்கையை


காவடி துாக்குவது இழிவானதா முதல்வரே!க.சரவணன், திருச்சியிலிருந்து எழுதுகிறார்: 'டில்லிக்கு காவடி துாக்கவா போகிறேன்... கைகட்டி வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்... நான், கருணாநிதியின் பிள்ளை' என பேசியிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின். இதன் வாயிலாக, காவடி துாக்குவதை கேவலமானதாக சித்தரிக்க முயற்சித்திருக்கிறார். இது, ஹிந்துக்களின் வழிபாட்டை, இறை நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல்.
முருகப் பெருமானின் அருளைப் பெற, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாக நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து, பழநி, திருச்செந்துார், திருத்தணிக்கு பாதயாத்திரையாக பல கி.மீ., துாரம் நடந்து செல்வதை, வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
அப்படிப்பட்ட வழிபாட்டு முறையை, கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். அவர் மட்டுமின்றி, ஹிந்துக்களின் இறைவழிபாட்டை, சடங்குகளை, கேலி செய்வது தமிழ் சினிமாவிலும் தொடர்கிறது... அதாவது, காமெடி என்ற பெயரில், ஒருவரின் பணம் பறிபோய் விட்டால், 'கோவிந்தா... கோவிந்தா...' என்பதும், ஒருவனை மற்றொருவன் ஏமாற்றி விட்டால், 'பட்டை நாமம் போட்டு விட்டான்' என்றும், 'அவன் தலையை மொட்டை அடித்து விட்டான்' என்றும், கேலி, கிண்டல் செய்வது நீடிக்கிறது.
இந்த கழிசடை படங்களைத் தயாரித்த இயக்குனர்கள் யார் என, பூர்வீகத்தை ஆராய்ந்தால், ஹிந்து அல்லாத மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர். அதனால் தான், ஹிந்துக்களின் இறை நம்பிக்கையை கேலி செய்கின்றனர்.
அதே போன்ற காரியத்தை, ஹிந்துக்களின் ஓட்டைப் பெற்று ஆட்சிக்கு வந்த முதல்வரே செய்வது நியாயமா... ஹிந்து மத வழிபாட்டை, சடங்குகளை, முதல்வரே கொச்சைப்படுத்தும் விதமாக பேசினால், அது ஹிந்துக்களின் மனதில் ஆழமாக
பதிந்துவிடாதா... உங்களை பார்த்து, கூலிக்கு மாரடிக்கும் டெலிவிஷன்களும், அதே வார்த்தைகளைப் பயன்படுத்துமே...ஹிந்து கடவுள்களை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்; சடங்கு, வழிபாடுகள் பிடிக்காமல் போகலாம்; அதற்காக கேலி கிண்டல் செய்யலாமா... ஹிந்துக்களின் ஓட்டுகளும் வேண்டும் தானே தி.மு.க.,விற்கு?
நானும், தி.மு.க.,வைச் சேர்ந்தவன். ஹிந்து; தீவிர இறை நம்பிக்கையுள்ளவன். இனி மேலாவது, ஹிந்துக்களின் வழிபாட்டை இழிவுபடுத்தாதீர்கள் முதல்வரே!


அபா(யக)ரமான விசுவாசம்!எம்.சுந்தர், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் துணையோடு, குற்றவாளிகள் சிறையிலிருந்து வெளியே வந்து, குற்ற சம்பவங்களை அரங்கேற்றி விட்டு மீண்டும் சிறைக்கு செல்வதை, சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் பார்த்திருப்போம். தற்போது, அது போன்ற காட்சியை, கர்நாடக மாநிலம் பல்லாரி காவல் நிலைய போலீசார் ஐந்து பேர் அரங்கேற்றி, அக மகிழ்ந்துள்ளனர்.கொலை வழக்கில், ௨௦ ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பச்சாகான் என்ற கைதியை, மற்றொரு கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, பல்லாரி சிறையிலிருந்து தார்வாட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், மீண்டும் அவனை சிறையில் அடைக்காமல், லாட்ஜில் காதலியுடன் தங்க அனுமதித்துள்ளனர்.
அது மட்டுமின்றி, ஹோட்டல் பணியாளர்களால், பச்சாகான் மற்றும் அவனது காதலியின் ஏகாந்தத்திற்கு, எந்த விதமான இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அறைக்கு வெளியே ஐந்து போலீசாரும் காவல் காத்துள்ளனர். யார் போட்டுக் கொடுத்தனரோ தெரியவில்லை... பச்சா கானும், அவனது காதலியும், லாட்ஜில் உல்லாசமாக இருக்கும் சமாசாரம், தார்வாட் நகர போலீஸ் கமிஷனருக்கு எட்டியுள்ளது. உடன் அந்த கமிஷனர், அருகிலுள்ள காவல் நிலைய போலீசாரை உஷார்படுத்த, அவர்கள் ஹோட்டலுக்கு சென்று, பச்சா கானையும், போலீசாரையும் கைது செய்திருக்கின்றனர்; அவனது காதலியையும், விசாரணை வளையத்திற்குள்
வைத்திருக்கின்றனர். 'என்னய்யா இது அக்கிரமம்... மதச்சார்பின்மை பேணும் ஒரு நாட்டில், ஒரு குற்றவாளிக்கு, அவனது காதலியுடன் சந்தோஷமாக இருக்கக் கூட உரிமை இல்லையா? அதனால் தானே, அவனை உள்ளே அனுப்பி, நாங்கள் வெளியே காவலுக்கு நிற்கிறோம்' என, 'மாமா' வேலை பார்த்து, காவலுக்கு நின்ற போலீசார் கதறிப் பார்த்திருக்கின்றனர்; ஆனாலும், பலன் இல்லை.
கர்நாடக மாநில பல்லாரி நகர போலீசார், கொலை குற்றவாளியின் ஆசைக்கு அடிபணிந்து, தலை வணங்கி, காட்டியிருக்கும் அந்த 'அபா(யக)ரமான விசுவாசம்' நம்மை அதிர வைக்கிறது; உள்ளத்தை உறைய வைக்கிறது. குற்ற வாளிகள் காட்டும் பணத்தாசைக்கு, போலீசார் எந்த அளவுக்கு சோரம் போகின்றனர் என்பதற்கு, இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.


தெற்கு ரயில்வே கவனிக்குமா?ரா.சேது, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெரிய ரயில் நிலையங்களில், பயணியருக்கு உதவுவதற்காக, விசாரணை மையம் ஒன்று செயல்படும். அங்கு ஒருவர் நியமிக்கப்பட்டு, ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு, நடைமேடை எண் என, பயணியரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிப்பார். அதற்கான பெயர் பலகையில், 'பயணியர் விசாரணை மையம்' என்பது, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் இருக்கும். தற்போது, 'பயணியர் விசாரணை மையம்' என்பதற்கு பதிலாக, 'சஹ்யோக்' என, ஹிந்தி மொழியில் மட்டுமே பெயர் பலகை வைக்க, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியரில், பெரும்பாலானவர்கள் பாமரர்கள் மற்றும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள்.அப்படிபட்ட நிலையில், 'பயணியர் விசாரணை மையம்' என்பதற்கு பதிலாக, 'சஹ்யோக்' என்று பெயரிட்டால் எப்படி புரிந்து கொள்வர். 'சஹ்யோக்' என்ற ஹிந்தி வார்த்தைக்கு தமிழில், 'உதவி' என்று அர்த்தம். இது எல்லாருக்கும் தெரியுமா என்ன?
இந்தப் பெயர் பலகை விஷயத்தில், பயணியர் மத்தியில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு மற்றும் ரயில்வே துறையில் பணியாற்றும் வட மாநில அதிகாரிகள் தான், இது போன்று தேவையில்லாமல் ஹிந்தியை திணித்து, மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகளே அமைதியாக இருக்கும் போது, இவர்களுக்கு ஏன் இந்த வீண் வேலை என்று தெரியவில்லை. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் பெயர் பலகை வைக்கும்படி, தெற்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
ஹிந்தியில் மட்டுமே பெயர் பலகை வைக்கும்படி உத்தரவு ஏதும் பிறப்பித்திருந்தால், அதை உடனே திரும்பப் பெற வேண்டும். ரயில்வே அமைச்சரும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மீண்டும் தமிழில் பெயர் பலகை ஒளிர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rama Lingam - chennai,இந்தியா
26-ஆக-202219:39:38 IST Report Abuse
Rama Lingam எனக்கு காரியம் நடக்க மத்திய அரசிடம் நான் காவடி எடுக்க மாட்டேன் என்று கூறுகிறார் . இதில் என்ன தவறு
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-ஆக-202214:24:03 IST Report Abuse
மலரின் மகள் இந்து மதத்தின் வழிபாட்டு முறைகளை கிண்டல் செய்வோர் தாங்கள் சார்ந்த மதத்தில் அதே போன்றதொரு சடங்குகள் உள்ளன என்பதை அறிந்து கொண்டு பேசவேண்டும். உண்மையில் அவர்கள் இந்துமத நம்பிக்கையை கிண்டல் செய்வதாக சொல்லிக்கொண்டு அவர்கள் மத்தியும் சேர்த்தே கிண்டலாய்க்கிறார்கள் என்பதுதான். இதில் இந்துக்களுக்கு எரிச்சலும் கோபமும் வருவதற்கு முக்கிய காரணம் மற்ற மதத்தினரின் சடங்ககள் நமக்கு தெரியாமல் இருப்பதுவே. இந்துக்கள் திருப்பதிக்கு பழனிக்கு மொட்டை போடுகிறார்கள் என்றால் முஸ்லிம்களும் மக்காவில் மொட்டை போடத்தான் செய்கிறார்கள். மொட்டையை அவர்கள் எத்துணை முறைவேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். என்ன விசா வாங்கி கொண்டு சென்றுதான் மொட்டை போடவேண்டும். இந்து மதத்தில் காசிக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்றால் தென்காசிக்கு செல்லலாம். கங்கை நதிக்கு செல்லவசதி இல்லை என்றால் காவிரியில் நீராடலாம் என்று சவுகரியங்கள் உண்டு. அது மற்ற மதத்தில் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த உடுப்பு உடுத்தி கொண்டும் சென்று மொட்டை போட்டுக் கொள்ளலாம் நாம். ஆனால் மற்றவர்கள் மதத்தில் அப்படி இல்லை. மொட்டை போற்று விட்டு பிரார்த்தனை செய்வதற்கும் சரியான முறைகள் இருக்கின்றன. சபரியின் கல்லிடும் குன்று உண்டு. அதை கிண்டல் செய்வோர், சாத்தானின் மீது கல்லெறியும் சடங்குகளை பற்றி பேசுகாதில்லை. பொன்மன செம்மல் ஒரு கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். நீங்கள் மற்றவர்களை பார்த்து ஒருவிரலை சுட்டி காட்டி குற்றம் கூறினால், மற்ற மூன்று விரல்கள் மடங்கி உங்களையே காட்டி கொண்டிருக்கும் என்று. ஒருவரின் நம்பிக்கையில் குற்றம் கண்டு பிடிக்காதீர். நடுநிலையென்ற பெயரிலும் அனைவரின் பெயரிலும் குற்றம் காண்பிக்கவேண்டாமே.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-ஆக-202206:57:22 IST Report Abuse
D.Ambujavalli மைய அரசிடம் தங்கள் வேலையை முடிக்க இவர்கள் செல்லும் யாத்திரைக்கு காவடி மாட்டிக்கொண்டு தவிக்கிறது அதுதான் சபாநாயகர் திருவாய் மலர்ந்துவிட்டாரே 'கிறித்தவர்களின் ஓட்டுக்களால்தான் அரசு அமைந்தது' என்று. அடுத்த தேர்தலில், எந்த ஹிந்துவும் இவர்களுக்கு ஓட்டுப்போடாமல் சிறுபான்மையினர் தயவில் வர விட்டு விடுவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X