இது உங்கள் இடம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (3) | |
காவடி துாக்குவது இழிவானதா முதல்வரே!க.சரவணன், திருச்சியிலிருந்து எழுதுகிறார்: 'டில்லிக்கு காவடி துாக்கவா போகிறேன்... கைகட்டி வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்... நான், கருணாநிதியின் பிள்ளை' என பேசியிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின். இதன் வாயிலாக, காவடி துாக்குவதை கேவலமானதாக சித்தரிக்க முயற்சித்திருக்கிறார். இது, ஹிந்துக்களின் வழிபாட்டை, இறை நம்பிக்கையை


காவடி துாக்குவது இழிவானதா முதல்வரே!



க.சரவணன், திருச்சியிலிருந்து எழுதுகிறார்: 'டில்லிக்கு காவடி துாக்கவா போகிறேன்... கைகட்டி வாய் பொத்தி உத்தரவு கேட்கவா போகிறேன்... நான், கருணாநிதியின் பிள்ளை' என பேசியிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின். இதன் வாயிலாக, காவடி துாக்குவதை கேவலமானதாக சித்தரிக்க முயற்சித்திருக்கிறார். இது, ஹிந்துக்களின் வழிபாட்டை, இறை நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல்.
முருகப் பெருமானின் அருளைப் பெற, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாக நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து, பழநி, திருச்செந்துார், திருத்தணிக்கு பாதயாத்திரையாக பல கி.மீ., துாரம் நடந்து செல்வதை, வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
அப்படிப்பட்ட வழிபாட்டு முறையை, கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியிருக்கிறார் ஸ்டாலின். அவர் மட்டுமின்றி, ஹிந்துக்களின் இறைவழிபாட்டை, சடங்குகளை, கேலி செய்வது தமிழ் சினிமாவிலும் தொடர்கிறது... அதாவது, காமெடி என்ற பெயரில், ஒருவரின் பணம் பறிபோய் விட்டால், 'கோவிந்தா... கோவிந்தா...' என்பதும், ஒருவனை மற்றொருவன் ஏமாற்றி விட்டால், 'பட்டை நாமம் போட்டு விட்டான்' என்றும், 'அவன் தலையை மொட்டை அடித்து விட்டான்' என்றும், கேலி, கிண்டல் செய்வது நீடிக்கிறது.
இந்த கழிசடை படங்களைத் தயாரித்த இயக்குனர்கள் யார் என, பூர்வீகத்தை ஆராய்ந்தால், ஹிந்து அல்லாத மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பர். அதனால் தான், ஹிந்துக்களின் இறை நம்பிக்கையை கேலி செய்கின்றனர்.
அதே போன்ற காரியத்தை, ஹிந்துக்களின் ஓட்டைப் பெற்று ஆட்சிக்கு வந்த முதல்வரே செய்வது நியாயமா... ஹிந்து மத வழிபாட்டை, சடங்குகளை, முதல்வரே கொச்சைப்படுத்தும் விதமாக பேசினால், அது ஹிந்துக்களின் மனதில் ஆழமாக
பதிந்துவிடாதா... உங்களை பார்த்து, கூலிக்கு மாரடிக்கும் டெலிவிஷன்களும், அதே வார்த்தைகளைப் பயன்படுத்துமே...ஹிந்து கடவுள்களை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்; சடங்கு, வழிபாடுகள் பிடிக்காமல் போகலாம்; அதற்காக கேலி கிண்டல் செய்யலாமா... ஹிந்துக்களின் ஓட்டுகளும் வேண்டும் தானே தி.மு.க.,விற்கு?
நானும், தி.மு.க.,வைச் சேர்ந்தவன். ஹிந்து; தீவிர இறை நம்பிக்கையுள்ளவன். இனி மேலாவது, ஹிந்துக்களின் வழிபாட்டை இழிவுபடுத்தாதீர்கள் முதல்வரே!


அபா(யக)ரமான விசுவாசம்!



எம்.சுந்தர், சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடுகள் துணையோடு, குற்றவாளிகள் சிறையிலிருந்து வெளியே வந்து, குற்ற சம்பவங்களை அரங்கேற்றி விட்டு மீண்டும் சிறைக்கு செல்வதை, சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் பார்த்திருப்போம். தற்போது, அது போன்ற காட்சியை, கர்நாடக மாநிலம் பல்லாரி காவல் நிலைய போலீசார் ஐந்து பேர் அரங்கேற்றி, அக மகிழ்ந்துள்ளனர்.கொலை வழக்கில், ௨௦ ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற பச்சாகான் என்ற கைதியை, மற்றொரு கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக, பல்லாரி சிறையிலிருந்து தார்வாட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், மீண்டும் அவனை சிறையில் அடைக்காமல், லாட்ஜில் காதலியுடன் தங்க அனுமதித்துள்ளனர்.
அது மட்டுமின்றி, ஹோட்டல் பணியாளர்களால், பச்சாகான் மற்றும் அவனது காதலியின் ஏகாந்தத்திற்கு, எந்த விதமான இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அறைக்கு வெளியே ஐந்து போலீசாரும் காவல் காத்துள்ளனர். யார் போட்டுக் கொடுத்தனரோ தெரியவில்லை... பச்சா கானும், அவனது காதலியும், லாட்ஜில் உல்லாசமாக இருக்கும் சமாசாரம், தார்வாட் நகர போலீஸ் கமிஷனருக்கு எட்டியுள்ளது. உடன் அந்த கமிஷனர், அருகிலுள்ள காவல் நிலைய போலீசாரை உஷார்படுத்த, அவர்கள் ஹோட்டலுக்கு சென்று, பச்சா கானையும், போலீசாரையும் கைது செய்திருக்கின்றனர்; அவனது காதலியையும், விசாரணை வளையத்திற்குள்
வைத்திருக்கின்றனர். 'என்னய்யா இது அக்கிரமம்... மதச்சார்பின்மை பேணும் ஒரு நாட்டில், ஒரு குற்றவாளிக்கு, அவனது காதலியுடன் சந்தோஷமாக இருக்கக் கூட உரிமை இல்லையா? அதனால் தானே, அவனை உள்ளே அனுப்பி, நாங்கள் வெளியே காவலுக்கு நிற்கிறோம்' என, 'மாமா' வேலை பார்த்து, காவலுக்கு நின்ற போலீசார் கதறிப் பார்த்திருக்கின்றனர்; ஆனாலும், பலன் இல்லை.
கர்நாடக மாநில பல்லாரி நகர போலீசார், கொலை குற்றவாளியின் ஆசைக்கு அடிபணிந்து, தலை வணங்கி, காட்டியிருக்கும் அந்த 'அபா(யக)ரமான விசுவாசம்' நம்மை அதிர வைக்கிறது; உள்ளத்தை உறைய வைக்கிறது. குற்ற வாளிகள் காட்டும் பணத்தாசைக்கு, போலீசார் எந்த அளவுக்கு சோரம் போகின்றனர் என்பதற்கு, இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது.


தெற்கு ரயில்வே கவனிக்குமா?



ரா.சேது, மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பெரிய ரயில் நிலையங்களில், பயணியருக்கு உதவுவதற்காக, விசாரணை மையம் ஒன்று செயல்படும். அங்கு ஒருவர் நியமிக்கப்பட்டு, ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு, நடைமேடை எண் என, பயணியரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிப்பார். அதற்கான பெயர் பலகையில், 'பயணியர் விசாரணை மையம்' என்பது, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் இருக்கும். தற்போது, 'பயணியர் விசாரணை மையம்' என்பதற்கு பதிலாக, 'சஹ்யோக்' என, ஹிந்தி மொழியில் மட்டுமே பெயர் பலகை வைக்க, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களுக்கு வரும் பயணியரில், பெரும்பாலானவர்கள் பாமரர்கள் மற்றும் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள்.அப்படிபட்ட நிலையில், 'பயணியர் விசாரணை மையம்' என்பதற்கு பதிலாக, 'சஹ்யோக்' என்று பெயரிட்டால் எப்படி புரிந்து கொள்வர். 'சஹ்யோக்' என்ற ஹிந்தி வார்த்தைக்கு தமிழில், 'உதவி' என்று அர்த்தம். இது எல்லாருக்கும் தெரியுமா என்ன?
இந்தப் பெயர் பலகை விஷயத்தில், பயணியர் மத்தியில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசு மற்றும் ரயில்வே துறையில் பணியாற்றும் வட மாநில அதிகாரிகள் தான், இது போன்று தேவையில்லாமல் ஹிந்தியை திணித்து, மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகளே அமைதியாக இருக்கும் போது, இவர்களுக்கு ஏன் இந்த வீண் வேலை என்று தெரியவில்லை. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் பெயர் பலகை வைக்கும்படி, தெற்கு ரயில்வே அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
ஹிந்தியில் மட்டுமே பெயர் பலகை வைக்கும்படி உத்தரவு ஏதும் பிறப்பித்திருந்தால், அதை உடனே திரும்பப் பெற வேண்டும். ரயில்வே அமைச்சரும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, தக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மீண்டும் தமிழில் பெயர் பலகை ஒளிர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X