கோலாகலமாக துவங்கியது கோவையின் 'ஷாப்பிங்' திருவிழா!

Added : ஆக 26, 2022 | |
Advertisement
குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒரு சேர உற்சாகத்தில் மூழ்கடிக்கும் கோவையின் நான்கு நாள் ஷாப்பிங் திருவிழாவான, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி, கோலாகலமாக நேற்று துவங்கியது.'தினமலர்' நாளிதழ் மற்றும் பி.இ.ஏ., இணைந்து நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2022' மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது.
கோலாகலமாக துவங்கியது கோவையின் 'ஷாப்பிங்' திருவிழா!

குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒரு சேர உற்சாகத்தில் மூழ்கடிக்கும் கோவையின் நான்கு நாள் ஷாப்பிங் திருவிழாவான, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி, கோலாகலமாக நேற்று துவங்கியது.'தினமலர்' நாளிதழ் மற்றும் பி.இ.ஏ., இணைந்து நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2022' மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று துவங்கியது. கண்காட்சியை, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் (பி.இ.ஏ.,) நிர்வாக இயக்குனர் ராஜா ரவிச்சந்திரன், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். வுட் ஸ்பார்க் உரிமையாளர் உமேஷ், பி.இ.ஏ., இணை நிர்வாக இயக்குனர் அருண் கார்த்திக் உட்பட பலர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் இக்கண்காட்சியில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்துத் தரப்பினரையும் ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் அளப்பரிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஏ, பி, சி ஆகிய மூன்று ஏ.சி., ஹால்களிலும் சேர்த்து, 250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன், இல்லக்கனவை நனவாக்கும் 'பில்டு எக்ஸ்போ', வாகன வசதியை பூர்த்திசெய்யும் 'ஆட்டோமொபைல்ஸ் எக்ஸ்போ'வும் நடக்கின்றன.


'ஏ டூ இசட்'


ஒரு முறை கண்காட்சி அரங்குக்குள் நுழைந்துவிட்டால், வீட்டுக்கு தேவையான சமையல் பொருட்கள், 'இன்டீரியர்' ரகங்கள், உணவு வகைகள் என 'ஏ டூ இசட்' இடம்பெற்றுள்ளன. அரங்கிற்குள் நுழையும்போதே 'பி.இ.ஏ.' அரங்கம், நம்மை அசரடிக்கிறது. அங்குள்ள அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கும் வழங்கப்படும் சலுகையை, நீங்கள் வேறெங்குமே பார்க்க முடியாது. அதிலும் குறிப்பாக 26 இன்ச் அளவிலிருந்து 85 இன்ச் வரையிலான சோனி 'டிவி'க்களை நம்பவே முடியாத குறைந்த விலையில் இங்கே வாங்கலாம்.நீண்ட இடைவெளிக்குப் பின் கண்காட்சி நடப்பதால், வெளிநாட்டு, வெளிமாநில உற்பத்தியாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பலரும், தங்கள் பொருட்களை 'ஷோரூம்' விலையை காட்டிலும், சலுகை விலைகளில் விற்பனை செய்து வருகின்றனர். அதிலும் இந்த முறை முதல் முதலாக பல புதிய பொருட்கள் வந்து இறங்கியுள்ளன. மெட்டல் கிராப்ட், மெகா போட்டோ பிரேம், அசத்தும் பல மாநில ஆடை வகைகள், அணிகலன்கள் மட்டுமின்றி, வீட்டை அலங்கரிப்பதாக மெகா அலங்காரப் பொருட்களும் 'கலர்புல்' ஆக காட்சியளிக்கின்றன.


'டிரைபுட்ஸ்-ஸ்நாக்ஸ்'


அரங்கில் பார்த்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் 'ஸ்நாக்ஸ்' வகைகள், இனிப்பு, காரம், ஊறுகாய் என ஏராளமான ஸ்டால்கள் மணக்க மணக்க வரவேற்கின்றன. பாதாம், முந்திரி, வால் நட்ஸ் என பல வகையான வடமாநிலங்களின் 'டிரைபுட்ஸ்' வருகையும், பார்வையாளர்கள் பலரையும் பை நிறைய பொருட்களை வாங்கத் துாண்டுகின்றன. திரைச்சீலைகள், விரிப்புகள் பார்க்கப் பார்க்க வியக்கும் வண்ணங்களில் ஈர்க்கின்றன.சமையல் உபகரணங்கள், உணவுப் பொருட்கள் எல்லாமே புதுப்புது அயிட்டங்களாக உள்ளன.


மழையிலும் வந்த மக்கள் கூட்டம்!


நேற்று துவங்கிய கண்காட்சியில் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்தது. மதியம் திடீரென மழை பெய்ய, நனைவதையும் பொருட்படுத்தாது குடை பிடித்துக்கொண்டு குடும்பத்துடன் வருகை புரிந்தனர். காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை என, வரும் 28ம் தேதி வரையிலும், கண்காட்சி நடக்கிறது. இதில், ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கட்டணம். ஒரு நபருக்கு, 50 ரூபாய் நுழைவுக்கட்டணம்.கூட்டமில்லாமல் 'பர்ச்சேஸ்' வாங்க நினைப்போர், வேலை நாளான இன்றே வந்துவிட்டால், இஷ்டம்போல ஹாயாக 'ஷாப்பிங்' செய்யலாம்!

ட்வின்ஸ் ஜக்லர்ஸ்!

கோவை மக்கள் இதுவரை காணாத ஜக்லர்ஸ் ஷோவை இதில் கண்டு களிக்கலாம். பந்து, சிறு உருளைகள், தீப்பொறி பறக்கும் வளையங்கள், தொப்பி, பாட்டில்களை வரிசையாக துாக்கிப்போட்டு வித்தை காட்டும் சாகசமான 'ஜக்லிங்', கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. அதுவும் சாதாரண ஆட்கள் அல்ல.ஆசியாவின் முதல் மற்றும் ஒரே ட்வின்ஸ் ஜக்லர்ஸ் என புகழ்பெற்ற அசோக் ஆனந்த் இரட்டையர்கள் உங்களை மெய்மறக்கச் செய்ய காத்திருக்கின்றனர்.பொதுவாக ஜக்லிங் செய்பவர்கள், ஏதேனும் ஒரு பொருளை மட்டுமே வைத்து வித்தை காட்டுவார்கள். கைதேர்ந்த வெளிநாட்டு நிபுணர்களும் இதில் விதிவிலக்கல்ல. ஆனால், அசோக் ஆனந்த் இரட்டையர்கள், ஜக்லிங் சாகசத்தின் அனைத்து உபகரணங்களிலும் வித்தை காட்டும் வித்தகர்கள். இத்துறையில் டாக்டரேட் வாங்கியவர்கள். அசரடிக்கும் அச்சு அசல் இரட்டையர்.துல்லியமாக அச்சடித்தாற்போல ஒரே மாதிரியான சாகசம் செய்தால், அந்த அனுபவமே தனிதானே! பிரபல 'டிவி' ஷோக்களில் அசத்திய ஜித்தர்களை, நம்ம ஊருக்கு அழைத்து வந்திருக்கிறது தினமலர். தினமும், ஏழு காட்சிகள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இலவசமாக கண்டுகளிக்கலாம். அதுவும் குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட ஷோவை வேறெங்கும் பார்க்க...சான்சே இல்லை!ஒய்யாரமாய் ஒட்டக சவாரி!

பாடப்புத்தகத்தில் மட்டுமே படித்தறிந்த பாலைவனக் கப்பலில் பயணம் செய்யும் வாய்ப்பை குழந்தைகளுக்கு கொடுப்பதற்காகவே, ஒட்டகச் சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெதுவாக அசைந்து, நடமாடும் ஊஞ்சலைப் போல மிகப் பாதுகாப்பான முறையில், ஒட்டகத்தில் உற்சாகமாக உலா வரலாம். சவாரிக்கு புகழ் பெற்ற குதிரைகளுடன் செல்பி எடுத்து மகிழவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆஹா நளபாகம்... அடடா பிரமாதம்!

இத்தனையும் சொன்னீங்களே! பசிக்கும் ருசிக்கும் என்ன இருக்கு என்று கேட்பவர்களுக்காக, 'என்ன இல்லை' என்பதுதான் பதில். சைவப் பிரியரா, அசைவப் பிரியரா யாராக இருப்பினும் வெரைட்டியான உணவுகளில் அசந்து போவது நிச்சயம்.கண்காட்சியில், புட் கோர்ட்டுக்கு மட்டும் தனி அரங்கு. தமிழகத்திலேயே கொங்கு, செட்டிநாடு, மதுரை என ஏரியா வாரியாக கலந்து கட்டி விதவிதமான உணவுகள். தவிர, கேரளா, கர்நாடகா என்று எல்லை தாண்டிய பதார்த்தங்களை, ஒரு கை பார்க்கலாம்.பார்த்தாலே பிய்த்து வாயில் போடத் துாண்டும் மதுரை பன் பரோட்டாவில் இருந்து, ஆயில் பரோட்டா, வாழை இலை பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சிலோன் பரோட்டா, சிலோன் சிக்கன் பரோட்டா என, வெரைட்டியாக வெளுக்க, பரோட்டாக்களின் அனைத்து வகைகளும் கிடைக்கும்.மல்லிகைப்பூ இட்லி-மணக்கும் சட்னி, கேரளத்தின் புட்டு, சுடச்சுட சிற்றுண்டி, சூடு பறக்கும் காபி, சிக்கன் ரைஸ், சிக்கன் நுாடுல்ஸ், போன்லெஸ் சிக்கன், சிக்கன் லெக் பீஸ், சிக்கன் லாலிபாப் என, சிக்கனில் உள்ள அனைத்தையும் ருசிக்கலாம். ஆசை நுாறு வகை என பாடிக்கொண்டே, நுாறு வகை தோசைகளையும் ருசிக்கலாம். ஆம்! நுாற்றுக்கும் மேற்பட்ட தோசை வகைகளை, சைவ, அசைவ காம்பினேஷனில் அள்ளலாம்.சாப்பாடுன்னு வந்த பின்னாடி, பிரியாணி இல்லாமலா? மட்டன், சிக்கன் பிரியாணி வகைகள், மட்டன் கோலா, கரண்டி ஆம்லேட், சில்லி சிக்கன், பெப்பர் சிக்கன், காடை பிரை என, வேணு பிரியாணியின் காரசாரமான ருசிக்கு கேரண்டி.சிற்றுண்டிகளுக்கும் பஞ்சமில்லை. பப்ஸ், சமேசா, தட்டுவடை, பானிபூரி, பேல் பூரி என சாட் வகைகளை அள்ளித் தருகிறது ஆனந்தாஸ்.தவிர, பலுாடா, பஞ்சாபி ஜிகர்தண்டா, குழி பணியாரம், ஒப்புட்டு, பிரட் ஆம்லெட், மூங்கில் அரிசி பாயாசம், பால் அடை பாயாசம், பிரெஞ்ச் பிரைஸ், பர்கர், ஸ்பைரல் பொட்டோட்டோ, அவ்வப்போது கொறிக்க பாப்கார்ன், எப்போதும் சுவைக்க ஐஸ்கிரீம், அருவியாய் உருகி வழியும் சாக்லேட் ஊற்று, பஞ்சு மிட்டாய் கோலா வகைகள் என, கொறிக்கவும் குடிக்கவும் ஏராளமானவை உண்டு. இவையெல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதுதான், சுவையை இன்னும் கொஞ்சம் கூட்டுகிறது.இன்றே வாங்க பாஸ்!

கண்காட்சிக்கு வரும் கார்களுக்கு 'பார்க்கிங்' ஏரியாவில், 5 கே கார் கேர் (5K CAR CARE) நிறுவனங்களின் ஊழியர்கள், தண்ணீர் இல்லாமல் பளிச்சென்று கழுவும் 'எக்கோ வாஷ்' செய்கின்றனர். நீங்கள் அங்கு காரை நிறுத்தியதும் உங்களை அந்நிறுவனத்தினர் அணுகுவார்கள். நீங்கள் அனுமதிக்கும் பட்சத்தில் இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நுரையையும், உபகரணங்களையும் பயன்படுத்தி, பளிச்சென்று புதுசு போல 'வாஷ்' செய்து தருகின்றனர். தினமும், 100 கார்களுக்கு இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது.மேஜிக் ஷோவைபார்க்கப் பார்க்க ஆசை!

இந்த கண்காட்சியின் இன்னொரு ஸ்பெஷல்... மேஜிக் ஷோ. குட்டீஸ்களையும், ஜோடிகளையும் மேடைக்கு ஏற்றி, ஜாலி ஹோலியாய் மேஜிக் செய்து, எல்லோரையும் மெய்மறந்து சிரிக்க வைக்கிறார் மெஜிசியன் பாலா. தமிழகம் மட்டுமின்றி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் மெஜிசியன்களுக்கு இடையே நடந்த போட்டிகளில், சிறந்த 'என்டர்டெய்னர்' என பல்வேறு விருதுகளை பெற்றவர்.பொருட்களே இல்லாத பையில் இருந்து பலவித பொருட்கள் எடுப்பது, வாயில் இருந்து நீண்ட 'சைஸ் பேப்பர்' உருவி எடுப்பது, குட்டி அட்டை பெட்டியில் இருந்து பலவித வண்ணங்களில் காகிதம் எடுப்பது, மேஜையை அந்தரத்தில் பறக்க செய்வது என குட்டீஸ்களை குதியாட்டம் போட வைக்கிறது இவரது மேச்சிங் கேச்சிங் மேஜிக்.கரம் கோர்ப்பவர்கள்!

கோவை 'தினமலர்' நடத்தும் மாபெரும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சியை, பாரத் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன்சஸ் நிறுவனம் இணைந்து நடத்துகிறது. கோ- ஸ்பான்சர்களாக வொண்டர் வுட்ஸ், வுட் ஸ்பார்க், கோவை லட்சுமி மற்றும் அல்ட்ரா நிறுவனங்கள் கரம் கோர்க்கின்றனர். இந்த நிறுவனங்கள் அனைத்தும், தங்களின் பொருட்களுக்கு அதிரடி விலையைக் குறைத்து பார்வையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை வாரி வழங்குகின்றன.குட்டீஸ்களுக்கு குஷி...கிட்ஸ் பிளே ஏரியா பிஸி!

அஞ்சு தீம் பார்க், பத்து ஷாப்பிங் மால் கூப்பிட்டுப் போனாலும், நம்ம வீட்டு வாண்டூஸ்களை அவ்வளவு எளிதில் திருப்திப்படுத்தி விட முடியாது. ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சிக்கு வந்தால், குட்டீஸ்கள் அடையும் சந்தோஷத்தை அளவிடவே முடியாது. அந்தளவுக்கு இந்த ஆண்டு கண்காட்சியில், அவர்களுக்கான 'ஈவெண்ட்'கள் எக்கச்சக்கமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.குதித்துக் குதித்து விளையாடுவதற்கான பலுான் தீம் பார்க் துவங்கி, ஒட்டகச்சவாரி, ஜக்லர்ஸ் ஷோ, மேஜிக் ஷோ, கார்-பைக் சிமுளேட்டிங் கேம், வாட்டர் போட், சிக்குபுக்கு ரயில், ஸ்குயிட் கேம் என போதும் போதுமென்கிற அளவுக்கு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.மிகப் பிரம்மாண்டமான பலுான் பங்களாக்களில், குட்டீஸ்கள் குதித்துக் குதித்துச் சறுக்கி விளையாடும் போது, அவர்கள் முகத்தில் காணப்படும் சந்தோஷத்தை கோடி ரூபாய் கொடுத்தாலும் எங்கும் வாங்க முடியாது. சிக்குபுக்கு ரயிலில், இன்னும் நடக்க ஆரம்பிக்காத மழலை கூட அழகாக அமர்ந்து ஒரு ரவுண்டு வரலாம்.தண்ணீரைக் கண்டால் தாளம் போடும் வாண்டுகளுக்காக இருக்கவே இருக்கிறது வாட்டர் போட். ஆழமற்ற செயற்கை குளத்தில், வாட்டர் போட்டுகளை பெடல் செய்து மகிழலாம். ரேஸ் பிரியர்களுக்காக, கார், பைக் சிமுலேட்டிங் கேம், முப்பரிமாண த்ரில் தரும் வி.ஆர். கேம்கள், கண்களுக்கும் கைகளுக்கும் ஒரு சேர கவனத்தைக் குவிக்கும் நுட்பமான விளையாட்டுகள் என, 25க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இருக்கின்றன.'ஸ்குவிட் கேம்'

நெட்பிளிக்ஸ் தளத்தில் வந்து உலகையே புரட்டிப்போட்ட 'ஸ்குவிட் கேம்' சீ்ரிஸ் போன்றதொரு விளையாட்டு, 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.கோவையில் இதுவரை, வெளியரங்கில் இதுபோன்ற விளையாட்டு நடத்தப்பட்டதே இல்லை. இந்தியாவில் இந்த விளையாட்டை அறிமுகம் செய்த, இ.எஸ்.ஜி., நிறுவனம்தான், இக்கண்காட்சியிலும் இந்த விளையாட்டு அரங்கை நம் வாசகர்களுக்காக அமைத்துள்ளது.சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஸ்குவிட் கேமில் இடம்பெறும் அதே பொம்மை, வெறித்த கண்களுடன் உங்களைப் பார்க்கும். துப்பாக்கி ஏந்திய வீரர்கள் உங்களைக் கண்காணித்தபடி இருப்பார்கள். வன்முறையற்ற இவ்விளையாட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒவ்வொரு டாஸ்க்கையும் முடித்து, இறுதிச் சுற்றுக்கு முன்னேறி, வெற்றி பெறுவது மட்டுமே நம் வேலை.தரை லோக்கலுக்கு இறங்கி விளையாடலாம் என்கிற அளவில், டான்ஸ், கயிறு இழுத்தல், நொண்டி என, கலந்து கட்டி இருக்கிறது இந்த அதிரிபுதிரியான ஸ்குவிட் கேம். முக்கியமான விஷயம்...இந்த விளையாட்டில் பார்வையாளர்கள் அனைவரும் கட்டணமின்றி பங்கேற்கலாம்.குடிச்சிருக்கீங்களா?

ஒரு படத்தில் "எருமைப்பாலில் ஏன் டீ போட்ட...ஒட்டகப் பாலில் போடு" என வடிவேலு சொல்வதுபோல, நீங்களும் கெத்தாக, ஒட்டகப்பால் ஒண்ணு என ஆர்டர் போடலாம். அட, ஆமாங்க!. புதுமை விரும்பிகளுக்காகவே, ஒட்டகப்பாலும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் (fssai) உரிய அங்கீகாரத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. வாங்க ஜாலியா ஒட்டகப்பால் குடிச்சுட்டு, ஒட்டக சவாரி போலாம்!புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X