செய்திகள் சில வரிகளில் தர்மபுரி

Added : ஆக 26, 2022 | |
Advertisement
பருத்தி விதைப்பு பணி தீவிரம்அரூர்: அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, நல்ல மழை பெய்கிறது. இதனால், சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும், பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பருத்தி விதை நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டு, ஒரு குவிண்டால் பருத்தி, 12 ஆயிரம்


பருத்தி விதைப்பு பணி தீவிரம்
அரூர்: அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, நல்ல மழை பெய்கிறது. இதனால், சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும், பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பருத்தி விதை நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டு, ஒரு குவிண்டால் பருத்தி, 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை போனதும், பருத்தி நடவு செய்வதற்கு ஒரு காரணம் என, விவசாயிகள் தெரிவித்தனர்.
ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
அரூர்: அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி தலைமை வகித்தார். இதில் அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார், பி.டி.ஓ., ஜெகதீசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி கட்டடம் கட்ட பூமி பூஜை
போச்சம்பள்ளி: மத்துார் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில், ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நிதியிலிருந்து, 18.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டடம் கட்ட நேற்று பூமி பூஜை போடப்பட்டது. இதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார் (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வம் (ஊத்தங்கரை), ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, மத்துார் பி.டி.ஓ.,க்கள் துரைசாமி, முருகன், பஞ்., தலைவர்கள் பழனியம்மாள் மனோகரன், மீனா சக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குட்கா வைத்திருந்தவர் கைது
ஓசூர்: ஓசூர், டவுன் போலீசார் நேற்று முன்தினம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சந்தேகப்படும் படி நின்றிருந்த ஒருவரின் பையை சோதனை செய்தனர். அதில், 5,800 ரூபாய் மதிப்புள்ள, 11 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. இதையடுத்து, காஞ்சீபுரம் சீனிவாச நகர் பழைய பெருங்களத்துாரை சேர்ந்த சீனிவாசன், 48, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
10ம் வகுப்பு மாணவி கடத்தல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி, 10ம் வகுப்பு படிக்கிறார். இவரை கடந்த, 19 இரவு முதல் காணவில்லை. அவரது பெற்றோர், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில், சூளகிரி கங்கசந்திரத்தை சேர்ந்த போட்டோகிராபர் அமரீஷ், 23, என்பவர் திருமணம் செய்யும் நோக்கத்தில் தன் மகளை கடத்தி சென்று விட்டதாக கூறியுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா, வழக்குப்பதிந்து, அமரீசை தேடி வருகிறார்.
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரூர்: அரூரிலுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை முன், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் கோவிந்தன் தலைமை வகித்தார். இதில் ஒப்பந்த காலத்தை மூன்றாண்டுகளாக தொடர வேண்டும். ஓய்வூதியர் பணப் பலன்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், நிர்வாகிகள் ரகுபதி, குமரிமன்னன், மணிவண்ணன் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.
கூலித்தொழிலாளி டூவீலர் திருட்டு
தர்மபுரி: நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாது, 54; இவர் கடந்த, 23ல், அதியமான்கோட்டை காளியம்மன் கோவில் அருகே தன் டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டை நிறுத்தி சென்றார். திரும்பி வந்தபோது வாகனம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். புகார்படி அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
துணை மேயர் அலுவலகம் திறப்பு
கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சி வளாகத்தில், துணை மேயர் ஆனந்தய்யாவுக்கான அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் அலுவலகத்தை திறந்து வைத்தார். ஓசூர் மாநகர மேயர் சத்யா, மண்டல தலைவர் காந்திமதி கண்ணன், தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் எல்லோரா மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரூரில் தொடர் மழை
அரூர்: அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் சுற்று வட்டாரத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பின், மாலை, 5:00 மணி முதல், அரூர், கம்பைநல்லுார் மற்றும் சுற்று வட்டாரத்தில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
தேனீ வளர்ப்பு செயல்விளக்கம்
அரூர்: அரூர் வட்டார வேளாண் துறை சார்பில், அட்மா திட்டத்தில், பறையப்பட்டி புதுாரில் தேனீ வளர்ப்பு குறித்த செயல்விளக்கம் நேற்று நடந்தது. இதில், முன்னோடி விவசாயி கருணாநிதி என்பவர் தேனீ வகை, வளர்ப்பு முறை, தேன் பெட்டிகள் பராமரிப்பு, தேனீ வளர்ப்பில் சுய தொழில் மூலம் லாபம் பெறுதல் மற்றும் அனுபவங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். உதவி வேளாண் அலுவலர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை கல்லுாரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லுாரி ரத்த வங்கி இணைந்து, நேற்று ரத்த தான முகாமை நடத்தின. கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். முகாமில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முனைவர் சுஜிதா ஒருங்கிணைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் செந்தில்குமார், மருத்துவக்கல்லுாரி மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியா, ஆகியோர் பேசினர்.
அ.தி.மு.க.,
ஆலோசனை கூட்டம்
ஓசூர், ஆக. 26-
கெலமங்கலம், அ.தி.மு.க., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி நிர்வாகிகளை சந்தித்தார். கெலமங்கலம் நகர செயலாளர் மஞ்சுநாத், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சையத் அசேன், டவுன் பஞ்., தலைவர் தேவராஜ், ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் ஜெயபிரகாஷ் உட்பட பலர் உடனிருந்தனர். மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ஊத்தங்கரை, ஆக. 26-
ஊத்தங்கரை அடுத்த, புதுார் புங்கனை கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது.
டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள், நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில், 30 பேருக்கு மாதாந்திர முதியோர் உதவித்தொகை, 3 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை, 20 பேருக்கு என, 152 பயனாளிகளுக்கு, 14 லட்சத்து, 37 ஆயிரத்து, 186 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தாசில்தார் கோவிந்தராஜ், துணை தாசில்தார் குமார், ஒன்றிய சேர்மன் உஷாராணி, தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினிசெல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கிருபானந்த வாரியார்
பிறந்த நாள் விழா
தர்மபுரி, ஆக. 26-
தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை பாரிமுனை நண்பர்கள் மற்றும் வாரியார் அன்னதான அறக்கட்டளை சார்பில், கிருபானந்த வாரியாரின், 116வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் மோகன்குமார் தலைமை வகித்தார். இதையொட்டி, கிருபானந்த வாரியாரின் உருவப்படத்திற்கு பூஜை நடந்தது. பின், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவரின் உருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அறக்கட்டளை செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் முருகவேல், துணைத்தலைவர் கணேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல், குமாரசாமிப்பேட்டை கிருபானந்த வாரியார் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்கள் கிருபானந்த வாரியாரின் உருவப்படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.
8 உரக்கடைகள் மீது நடவடிக்கை
தர்மபுரி, ஆக. 26-
தர்மபுரி மற்றும் பென்னாகரம் வட்டாரத்திலுள்ள, உரக்கடைகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், தர்மபுரி வேளாண் உதவி இயக்குனர் தாம்சன் ஆய்வு செய்தார். அதில், அனுமதி பெறாத உரங்கள் விற்பனை, அரசு நிர்ணயித்த விலைக்கு கூடுதல் விற்பனை, உரங்கள் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய விலைப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் உரங்களுக்கு, உரிய ரசீது வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட தர்மபுரி வட்டாரத்தில், ஐந்தும் பென்னாகரம் வட்டாரத்தில், மூன்று என மொத்தம், எட்டு உரக்கடைகளின் உர விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, சிறப்பு பறக்கும் படை வேளாண் அலுவலர்கள் ருத்ரமேர்த்தி, அன்பரசு, கார்த்திக் மற்றும் தோட்டக்கலை அலுவலர் அசோக் உள்பட பலர் உடனிருந்தனர்.
பட்டுக்கூடுகள் ஏலம்
தர்மபுரி, ஆக. 26-
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், நேற்று விவசாயிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரத்தில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏலத்துக்கு வந்திருந்தனர். பின் வருகை குறைந்து நேற்று முன்தினம், 18 பேரும் நேற்று, 14 விவசாயிகளும் மட்டுமே வந்திருந்தனர். இவர்கள், 18 குவியல்களாக, 609 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 423 முதல், 675 வரை சராசரியாக, 582 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, மூன்று லட்சத்து, 54 ஆயிரத்து, 807 ரூபாய். நேற்றைய ஏலத்தில், 5,322 ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
போக்சோவில் வாலிபர் கைது
காரிமங்கலம், ஆக. 26-
காரிமங்கலம் அடுத்த சிக்கதிம்மனஹள்ளியை சேர்ந்தவர் சேதுமாதவன், 19; இவர், 16 வயது பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, கடத்தி சென்றுள்ளார். மாணவின் பெற்றோர் புகார்படி காரிமங்கலம் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிந்து வாலிபரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் கேரளாவில், அவரை கைது செய்தனர்.
உரூஸ் திருவிழா
கிருஷ்ணகிரி, ஆக. 26-
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள பெத்தசிகரளப்பள்ளி கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை உரூஸ் திருவிழா துவங்கியது. இதையொட்டி கிராமத்திலுள்ள துர்வேஸ் ஹசாம் அலிபீர் தர்காவில் மாலை, 5:00 மணிக்கு இஸ்லாமிய சகோதரர்கள் சந்தன குடத்துடன் தர்காவில் இருந்து ஊர்வலமாக சென்று, பெத்தசிகரளப்பள்ளியிலுள்ள தர்காவில் பூஜை செய்தனர். தொடர்ந்து சந்தனக்குடத்துடன் ஊர்வலமாக சென்று தர்காவில் இஸ்லாமிய முறைப்படி பூஜை செய்து, குடத்திலிருந்த சந்தனத்தை தர்காவில் பூசினர். நிகழ்ச்சியில், தர்கா சாபுதீன் தலைமையில், நிர்வாகிகள் பலர் இஸ்லாமிய பாடல் பாடினர்.
சரக விளையாட்டு போட்டிகள்
பாலக்கோடு, ஆக. 26-
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சரக அளவில் மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளை, மாரண்டஹள்ளி டவுன் பஞ்., தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார். இதில் கைப்பந்து, கோகோ, கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட மகளிர் பிரிவுகளுக்கான போட்டிகள் நடந்தன. இதில், சரக அளவிலான அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவியர் விளையாடினர். இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் முதன்மை நடுவர் ரங்கநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X