மாநிலத்தின் கடன் தொகையை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்: நாஜிம் | Dinamalar

மாநிலத்தின் கடன் தொகையை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்: நாஜிம்

Added : ஆக 27, 2022 | |
புதுச்சேரி : 'மாநிலத்தின் பழைய கடன் தொகை ரூ.2,380 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்' என, எதிர்கட்சி துணைத் தலைவர் நாஜிம் பேசினார்.பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: மற்றவர்கள் போடும் பட்ஜெட்டிற்கும், ரங்கசாமி போடும் பட்ஜெட்டிற்கும் வித்தியாசம் உண்டு. என்.ஆர்., மாடலாக இருந்திருந்தால் சுதந்திர தின பெருவிழா கொண்டாடும் இந்த நேரத்தில்,


புதுச்சேரி : 'மாநிலத்தின் பழைய கடன் தொகை ரூ.2,380 கோடியை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்' என, எதிர்கட்சி துணைத் தலைவர் நாஜிம் பேசினார்.பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: மற்றவர்கள் போடும் பட்ஜெட்டிற்கும், ரங்கசாமி போடும் பட்ஜெட்டிற்கும் வித்தியாசம் உண்டு. என்.ஆர்., மாடலாக இருந்திருந்தால் சுதந்திர தின பெருவிழா கொண்டாடும் இந்த நேரத்தில், தியாகிகள் ஓய்வூதியத்தை முதல்வர் உயர்த்தி கொடுத்திருப்பார்.



தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால் அதனை செய்ய முடியவில்லை என கருதுகிறேன். எனவே, தியாகிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தி கொடுக்க முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.மறந்து போன திட்டங்களை எல்லாம் மீண்டும் கொண்டு வரும் அளவில் என்.ஆர்., பட்ஜெட் போடப்பட்டுள்ளது. ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளீர்கள். இதில் ஒரு சிக்கல் உள்ளது. 10,697 கோடிக்கு பட்ஜெட் போட்டுள்ளீர்கள். இதில் அத்தியாவசிய செலவினம் 9,920 கோடி. மீதி இருப்பது ரூ.776 கோடிதான்.



இதை வைத்துக் கொண்டு அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த முடியுமா என்பதுதான் கேள்வி.எங்களுக்கு உள்ள பயம் எல்லாம், பட்ஜெட்டுக்கு பிறகு புதிதாக வரி போடுவார்களா என்பதுதான். அதுபோன்ற நிலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜி.எஸ்.டி., இழப்பீட்டு தொகைக்கு என்ன செய்ய போகிறீர்கள். கடன் வாங்க போகிறீர்கள். அதில் கவனம் தேவை. 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை மத்திய அரசிடம் பெற்றிட வேண்டும்.இந்த நேரத்தில் பா.ஜ., அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து சிறப்பு கூறு நிதியை பெற்று வர வேண்டும். டில்லி போலீசாருக்கு மத்திய அரசே சம்பளம் வழங்குகிறது. ஓய்வு பெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்தையும் மத்திய அரசே வழங்குகிறது. அதேபோல், புதுச்சேரியிலும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசே நேரடியாக ஓய்வூதியம் வழங்கினால், நமக்கு ஆண்டிற்கு ரூ.1,122 கோடி மிச்சமாகும். மாநிலத்தில், நிதி மேலாண்மைக்குழு அமைத்து நிதி செலவினங்களை கண்காணிக்க வேண்டும்.



கடந்த 2007ல் பொதுக்கணக்கு துவங்கும்போது ரூ.2,380 கோடி நமக்கு கடன் இருந்தது. கோவா யூனியன் பிரதேசமாக மாறும் போது இருந்த கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதுபோன்று, நமது மாநில பழைய கடனையாவது தள்ளுபடி செய்ய முதல்வர் முயற்சிக்க வேண்டும். மேலும், பீகார் மாநிலத்திற்கு வழங்கியது போன்று, நமது மாநில கடன் மற்றும் வட்டி செலுத்துவதில் குறைந்தது 5 ஆண்டிற்காவது விலக்கு பெற வேண்டும்.சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாததால் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாமல் இருக்கிறது.



15 ஆண்டிற்கு முன் உள்ளாட்சி தேர்தல் நடத்திய போது, ஒரு பைசா கூட மானியம் வரவில்லை. இதுகுறித்து கேட்டபோது நிதிக்குழுவில் நாம் உறுப்பினர் இல்லை என்கின்றனர். உள்ளாட்சி தேர்தலை நடத்திதான் ஆக வேண்டும்.பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் உரிய நிதி வந்தால்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தைரியமாக அறிவிக்க வேண்டும். உள்ளாட்சி ஊழியர்களுக்கு, சம்பளத்தை அரசே வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X