பாகூர் : மணப்பட்டு ஏரியில் சேதமடைந்த மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாகூர் -- கன்னியக்கோவில் சாலையில், மணப்பட்டு தாங்கல் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு, அப்பகுதியில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த ஏரி, நீர் காக்கை, நீர் கோழி உள்ளிட்ட ஏராளமான பறவைகளின் வசிப்பிடமாகவும் திகழ்ந்து வந்தது. பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவின் கீழ் உள்ள இந்த ஏரி, பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதனால், ஏரியின் உபரி நீர் வெளியேறும் மதகு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு சேதமாகி உள்ளது. இந்த உடைப்பின் வழியாக, ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் வீணாக வெளியேறி வருவது ஆண்டுதோறும் தொடர் கதையாக உள்ளது. ஆனாலும், இதுவரை மதகுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.எனவே, மணப்பட்டு ஏரியில் சேதமான மதகை, வரும் பருவ மழைக் காலத்திற்குள் சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.