பள்ளிப்பருவத்தில் ரயிலில் டீ விற்ற மோடி, நமது பிரதமர் ஆன வெற்றிக்கதையை அறிவோம். அதே டீ, அதே உழைப்பு ஒரு 20 வயது இளைஞனை 25 வயதில் கோடீஸ்வரன்
ஆக்கியிருக்கும் 'டீக்கதை' இது!
மத்திய பிரதேசத்தில் தார் என்ற கிராமத்தில், விவசாயம் செய்யும் ஏழை பெற்றோருக்கு பிறந்தவர் பிரபுல் பில்லோர். பி.காம்., வரை படிப்பு. சராசரி பட்டதாரி இளைஞனாய் கிடைத்த வேலையில் சமரசமாகி போகாமல், யாரிடமும் கைகட்டி வேலை பார்க்கவும் விருப்பமின்றி வெறும் 8 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சொந்த கிராமத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு டீக்கடையை ஆரம்பித்தார் பிரபுல்.
ஐந்தாண்டுகளுக்கு பிறகு இன்று பல கோடிக்கு வர்த்தகம் செய்யும், நாடு முழுவதும் 150 கிளைகள் கொண்ட 'எம்.பி.ஏ., சாய் வாலா' என்ற 'டீ ஷாப்' அதிபர். எம்.பி.ஏ., படிப்பை பாதியில் நிறுத்திய இவரது வெற்றிக்கதை கேட்க, ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,ல் அலைபாயுது இளைஞர் கூட்டம். இவரது வெற்றியின் ரகசியம் அறிய, தன்னம்பிக்கை தரும் உரை கேட்க இளைஞர்கள், தொழிலதிபர்கள் காத்திருக்கின்றனர். வடமாநில கல்லுாரிக்கூட்டங்களில் இந்த 'டீ வாலா' இன்று ஒரு 'டிவிங்கிள்' ஸ்டார்!
முதல் டீக்கடையில் 'கிளாஸ் கழுவி' ஆரம்பித்து, அற்புத டீ தந்த இவரது உழைப்பும் முயற்சியும் 150 வது கடையாய், இன்று இந்தியாவின் பிரபல 'செயின் பிராண்டாய்' பிரமிப்பாய்
நிற்கும் போது 700 பேர் இவரிடம் பணிபுரிகின்றனர்.
20 வயது இளைஞன் 25 வயதில் 'இந்தியாவின் இள வயது மில்லியனர்' ஆன கதை என்ன? சில நாட்களுக்கு முன்பு மதுரையை சுற்றிபார்க்க வந்த இவரோடு மாலை நேரத்தில் டீ அருந்திக்கொண்டிருந்த போது...
பிரபுல்... இப்படி பிரபலம் ஆக யார் பின்புலம்?
எனது பெற்றோர் தந்த ஊக்கமும், சுய முயற்சியுமே எனக்கு பின்புலம். எனக்கு நானே தான் 'இன்ஸ்பிரேஷன்'. பள்ளிப்பருவத்தில் நான் பேசுவதை, பழகுவதை, நடை, உடை பாவனையை நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். அப்போதே மனதில் ஒரு வைராக்கியம், உத்வேகம் உருவானது. நிறைய சம்பாதிக்க வேண்டும்; மிகப்பெரிய கல்லுாரியில் படிக்க வேண்டும், இந்தியா முழுவதும் சுற்றி வர வேண்டும்; நல்ல பொருட்களை வாங்க வேண்டும். சிறப்பான உணவுகளை உண்ண வேண்டும் என்றெல்லாம் நினைப்பேன். பி.காம்., படிக்கும் போது ஓர் உணவு நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்தேன்.
அந்த அனுபவத்தில் நாமே ஒரு தொழில் முனைவோரானால் என்ன என்று நினைத்தேன். சொந்த ஊரில் சிறிதாய் தெருவோரம் ஒரு டீக்கடை ஆரம்பித்தேன்.
பணம் சம்பாதிப்பதுடன் எனது வாழ்வும் செயலும் பிறருக்கு அடையாளமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அடுத்த டீக்கடையை போபாலில் ஆரம்பித்தேன். அப்படி அடுத்தடுத்து எனது லட்சியம் நோக்கி முன்னேறினேன்.
இந்த வெற்றி எளிதில் எப்படி சாத்தியமானது?
எனக்கு 'ஈகோ' இல்லை. தெரியாததை கேட்டு தெரிந்து கொள்வேன். மக்களிடம், புத்தகங்களிடம் இருந்து நிறைய அறிந்தேன். நாளெல்லாம் உழைத்தேன்.
உங்கள் ஷாப்பில் டீ மட்டும் தான் விற்கிறீர்களா
நாங்கள் 'டீ'யை விற்பதாக சொல்வதில்லை. 'உத்வேகத்தை, தன்னம்பிக்கையை' ஒவ்வொரு டீயிலும் நிரப்பி தருகிறோம். 'எம்.பி.ஏ., சாய் வாலாவில்' வந்தமர்ந்து டீ குடிக்கலாம்; இளைப்பாறலாம். புத்தகம் படிக்கலாம். விளையாடலாம். உங்கள் அனுபவங்களை பரிமாறலாம். டீக்குடித்து செல்லும் போது நாமும் சொந்த காலில் இது போல் தொழில் துவங்கி சாதிக்கலாம் என்ற ஒற்றை வரி தன்னம்பிக்கையை சுமந்து இளைஞர்கள் வெளியே செல்கிறார்கள்.
முதல் கடையில், டீ மட்டும் தான் இருந்தது. இன்று 'சாய் வாலா' என்பது பெயர் தான். டீ, காபி, பிரட், பன், ஸ்னாக்ஸ் என '100 பிளஸ் ஐயிட்டம்' எங்களிடம் கிடைக்கிறது. துபாய், கத்தார், நேபாளிலும் விரைவில் திறக்க உள்ளோம். சென்னையில் எங்கள் ஷாப் பிரபலம். விரைவில் மதுரையிலும் துவங்குவோம். எதிர்காலத்தில் கே.எப்.சி., மெக் டொனால்ட்ஸ் போல் இந்தியாவிற்கான கடையை துவங்குவேன்.
நமது பிரதமர் மோடியும் இளவயதில் டீ விற்றது உங்களுக்கு இந்த துறையில் கால்பதிக்க உத்வேகம் தந்ததா?
பிரதமராக மோடி மிக சிறப்பாக நாட்டிற்காக உழைக்கிறார். அவரோடு ஒப்பிடக்கூடாது. அவரது செயல்கள் நிச்சயமாக எனக்கு உத்வேகம் தருகிறது.
நீங்கள் தரும் வெற்றி மந்திரம்...எது சிறப்பாக தோன்றுகிறதோ அதை படியுங்கள். கனவு காணுங்கள். பெரிதாக சிந்தியுங்கள். சிறிதாக ஆரம்பியுங்கள்.
எதிர்கால திட்டம்...
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உத்வேகம் தர வேண்டும். புதிதுபுதிதாக முயற்சி செய்ய வேண்டும். சுதந்திர இந்தியாவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்ல நாட்டிற்காக உழைக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு சொல்ல விரும்புவது...
டீ போட தெரியாத நான் டீக்கடை ஆரம்பித்தேன். ஆனால் இந்திய மக்கள் அனைவரும் விரும்பும் பானம் டீ என்பதில் நம்பிக்கை வைத்தேன். உழைத்தேன். சாதித்தேன். உங்களால் முடியும் என்றால் நல்ல கல்வியை பெறுங்கள். முடியவில்லை என்றால் மற்றவர்களை ஏமாற்றாதீர்கள். உங்களுக்கு எது இலகுவாக இருக்குமோ அந்த துறையில் சாதியுங்கள். வேலையை அரசே தரும் என்று காத்திருக்க கூடாது. சுய தொழில் செய்யுங்கள். தொழில் முனைவோராக மாறுங்கள். மற்றவர் களுக்கு வேலை தருபவராக இருங்கள். முடியாதவர்கள் நல்ல பணியாளராக இருங்கள்; செய்யும் வேலையில் உண்மையாக இருங்கள். உங்கள் வரலாற்றை நீங்களே எழுத வேண்டும். இவ்வாறு கூறினார்.