சென்னை: தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையில், இ.ஒ., எனப்படும், செயல் அலுவலர் பதவிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 5ம் தேதி பணி நியமன கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையில், சார் நிலை பணிகளில் அடங்கிய, செயல் அலுவலர் நிலை -1 பதவியில் உள்ள காலியிடங்களுக்கு, இந்த ஆண்டு ஏப்., 23ல் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இம்மாதம், 18ம் தேதி நேர்முக தேர்வு நடந்தது.
நேர்முக தேர்வின் முடிவில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங், வரும், 5ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில், பங்கேற்க உள்ளவர்களுக்கான தரவரிசை பட்டியல், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
பட்டியலில் உள்ளவர்கள், தங்களுக்கான கவுன்சிலிங் தேதி, நேரம் ஆகியவற்றுக்கான அழைப்பாணையை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட தேதியில் பங்கேற்காதவர்களுக்கு, மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.