வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தேனி: என்னிடம் இருப்பது தொண்டர்கள் கூட்டம். பழனிசாமியிடம் இருப்பது குண்டர்கள் கூட்டம். ஜெயலலிதா எனக்கு ஒரு பொறுப்பை கொடுத்து, அதை எடுத்ததாக வரலாறு இல்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தனது வீட்டின் முன்பு தனது ஆதரவாளர்கள் மத்தியில் பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் 30 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான். இந்த கட்சியில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை தான். கடந்த ஜூன் 23ம் தேதி பொதுக்குழு எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நான் மைக் பிடித்து பேச ஆரம்பித்த போது, கூச்சல், குழப்பம் செய்தனர். அவர்கள் ரவுடிகளை வைத்து கொண்டு கலவரம் செய்ய ஆரம்பித்தனர். இதில் சி.வி. சண்முகம் உடனே எழுந்து வந்து, நாங்கள் ஏற்கனவே நிகழ்ச்சி நிரலின்படி ஏற்படுத்தி வைத்திருந்த 23 தீர்மானங்களை ரத்து என்று அறிவித்து விட்டு சென்றார்.எந்த விவாதமும் இல்லை. என்னிடமும் கேட்கவில்லை. பொருளாளர் என்ற முறையில் என்னை கணக்கு தாக்கல் செய்ய விட வில்லை. இதுவரையில் ஜெயலலிதா, எனக்கு பொறுப்பு கொடுத்து அந்த பொறுப்பை திருப்பி என்னிடமிருந்து பெற்றுக் கொண்டதாக சரித்திரமே கிடையாது. அந்த அளவிற்கு நான் அவர்களுக்கு விசுவாசமாக இருந்துள்ளேன்.
ஜூலை11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் இரவு முழுவதும் ரவுடிகளை வைத்துக் கொண்டு மது அருந்தி கேலிக்கூத்துகளில் ஈடுபட்டு வந்திருந்தனர். நாங்கள் அந்த பொதுக்குழுவிற்கு செல்ல வேண்டாம் என்று தலைமைக் கழகம் செல்லலாம் என்று முடிவெடுத்து சென்ற நிலையில் நிராயுதபாணியாக சென்ற எங்களை தாக்க ஆரம்பித்தது அவர்கள்தான். இரு மாபெரும் தலைவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் நம் பக்கமும் குண்டர்கள் அவர்கள் பக்கமும் உள்ளனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இதில் பிடிவாதம் காட்டக்கூடாது. நான் முதல்வராக வேண்டும் என கூறவில்லை. இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.