வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை--''சர்வதேச விளையாட்டுகளில் வெற்றி பெறும் வீரர் -- - வீராங்கனையர், நாட்டின் கவுரவத்துக்கு உரியவர்கள்,'' என, கவர்னர் ரவி பேசினார்.
![]()
|
தமிழக கவர்னர் ரவி, தமிழகத்தின் சிறந்த விளையாட்டு வீரர்களை, சென்னை கிண்டி கவர்னர் மாளிகைக்கு அழைத்து, நினைவு பரிசுகள் வழங்கி நேற்று கவுரவித்தார்.நிகழ்வில், உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன், வாள் வீச்சு வீராங்கனை பவானிதேவி, குத்துச் சண்டை வீரர் சதீஷ் குமார், செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த், கார்த்திகேயன் முரளி, டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன், ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனிநபர் போட்டிகள் மட்டுமின்றி கைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு வீரர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். ஒலிம்பிக், பாராலிம்பிக், செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா உள்ளிட்டவற்றில் பங்கேற்ற 65 பேருடன், அவர் நேற்று கலந்துரையாடி ஊக்குவித்தார்.வீரர்களிடம், கவர்னர் ரவி பேசியதாவது:கடந்த 2008ல், சீனாவின் பீஜிங் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியை காண, மத்திய அரசு சார்பில் சென்றிருந்தேன்.
அந்த போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மட்டுமே கிடைத்தது. அது, எனக்கு மிகுந்த வலியாக இருந்தது. அப்போது, இந்திய விளையாட்டுத் துறை வாரிசுகளின் வசம் சிக்கியிருந்தது. அந்த போட்டிக்கு, இரண்டு, மூன்று தலைமுறைகளை சேர்ந்த கூட்டமைப்பினர் பீஜிங்கிற்கு சுற்றுலாவாக வந்திருந்தனர்.
![]()
|
தற்போது, அப்படிப்பட்ட துரதிருஷ்டம் இல்லை. விளையாட்டு துறையில் நம்பிக்கையானவர்களின் வருகை அதிகரித்துள்ளது. நீங்கள் நாட்டுக்காக, என்ன சேவை செய்கிறீர்கள் என்பதை அறிந்திருக்க மாட்டீர்கள். நீங்கள் தான், நாட்டு இளைஞர்களுக்கு உத்வேகத்தை தருகிறீர்கள். உங்கள் வெற்றியால் நாட்டை பெருமைப்படுத்தி கவுரவிக்கிறீர்கள்.
வரும் 2047ல், இந்தியா உலகளவில், விளையாட்டில் சிறந்த நாடாக மாற வேண்டும். அதற்கு, சிறந்த விளையாட்டு மாணவர்களை, துணைவேந்தர்கள் ஊக்கமளித்து சாதனையாளர்களாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தமிழகத்தில், விளையாட்டு வீரர்களுக்கு கவர்னர் விருந்தளித்து, பரிசு வழங்கி பாராட்டுவது இதுவே முதல்முறை.