வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-'சிதிலமடைந்துள்ள, 17 ஆயிரத்து, 500 அடுக்குமாடி குடியிருப்புகளை, 70 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள், விரைவில் துவங்கும்' என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![]()
|
தமிழகத்தில், ஏழை மக்களுக்கு வீட்டுவசதி வழங்குவதற்காக குடிசை மாற்று வாரியம் துவக்கப் பட்டது. இது தற்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என, பெயர் மாற்றப்பட்டுள்ளது.இந்த வாரியம் வாயிலாக, தமிழகம் முழுதும், ஏழை மக்களுக்காக, 1.80 லட்சம் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
இவற்றில் பெரும்பாலானவை முறையான பராமரிப்பின்றி பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிமென்ட் காரை பெயர்ந்து விழுவது, பால்கனி உள்ளிட்ட பகுதிகள் உடைவது, நீர்க் கசிவால் விரிசல் போன்ற பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன. இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுதும் குடியிருப்புகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு நடந்தது.
![]()
|
இதில், 20 ஆண்டுகளை கடந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.அதேநேரம், 15 ஆண்டுகளை கடந்த, 17 ஆயிரத்து 500 அடுக்குமாடி குடியிருப்புகள், பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன. இந்த குடியிருப்புகள், 70 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட உள்ளன. இதன்படி, கட்டடங்களை பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், குடிநீர், கழிவு நீர் இணைப்புகளில் காணப்படும் பிரச்னைகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு ஒப்புதல் கிடைத்துள்ளதால், விரைவில் பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.