வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக, விவசாயிகளிடம் இருந்து தினமும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
![]()
|
இந்தப் பால், கொழுப்பு சத்து அடிப்படையில், மூன்று வகையாக தரம் பிரிக்கப்பட்டு, ஆரஞ்ச், பச்சை, நீலநிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது.சென்னையில் தினமும், 14 லட்சம் லிட்டர்; மற்ற மாவட்டங்களில், 14 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது.எஞ்சிய பாலில் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆரஞ்ச் நிற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட 500 மி.லி., ஆவின் பால் 24 ரூபாய்; பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய், நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு பாக்கெட் பால் விற்பனை செய்வதன் வாயிலாக, டீலர்களுக்கும், பார்லர் உரிமையாளர்களுக்கும், ஒரு ரூபாய் கமிஷன் வழங்கப்படுகிறது. தனியார் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டு, 500 மி.லி., பால் பாக்கெட், 34 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தனியார் பால் விலை உயர்வால் ஆவின் பாலை நோக்கி பொதுமக்கள் படையெடுக்க துவங்கி உள்ளனர்.ஹோட்டல்கள், கேன்டீன்கள், டீ கடைகள் உள்ளிட்டவற்றின் தேவைக்காக, ஆவின் பால் அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.இதனால், ஆவின் பால் விற்பனை, 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் அதிகரித்துள்ளது. விரைவில், ஒரு லட்சம் லிட்டரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
|
இதனிடையே, ஆவின் பாலை, டீலர்கள் மட்டு மின்றி, அவர்களிடம் வாங்கி செல்லும் கடை உரிமையாளர்களும், ஒரு பாக்கெட்டிற்கு மூன்று முதல் ஐந்து ரூபாய் வரை கூடுதல் விலை வைத்து விற்கின்றனர்.இதனால், தி.மு.க., அரசு லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைப்பு செய்தும், அதன் பலனை அனுபவிக்க முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பால் விற்பனையை ஆவின் அதிகாரிகள் கண்காணிக்க துவங்கியுள்ளனர். கூடுதல் விலையில், பால் விற்பனை செய்யும் டீலர்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படவும் உள்ளது.