
துக்கத்துடனும், துாக்க மாத்திரையின் துணையுடனும் தனிமையில் வாழும் தன் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதை விட அவருக்கு இணையான ஒரு துணையை ஏன் தேடித்தரக்கூடாது என்று சிந்தித்து செயல்பட்டவர்தான் திருச்சூர் பிரசீதா
கேரளா மாநிலம் திருச்சூர் கோலாழியைச் சேர்ந்தவர் ரதிமேனன்
தற்போது 59 வயதாகும் இவருக்கு இரண்டு மகள்கள்
மூத்தவர் பிரசீதா, இளையவர் ப்ரீத்தி
இருவருக்குமே திருமணமாகிவிட்டது. பிரசீதா வெளியூரில் வசிக்கிறார். ப்ரீத்தி வெளிநாட்டில் வசிக்கிறார்.
பிள்ளைகளுக்கு திருமணம் செய்து முடித்துவிட்ட நிம்மதியில் இருந்த ரதிக்கு அவரது நிம்மதிக்கு உலைவைக்கும் விதத்தில் கணவர் மேனன் திடீரென மரணமடைந்தார்.
கணவரை இழந்த அம்மாவின் உடனிருந்து சில நாட்கள்தான் மகள்களால் ஆறுதல் கூறமுடிந்தது. அதன்பிறகு குடும்பம், குழந்தைகள், வேலை காரணமாக கூடுதலாக அம்மாவுடன் இருக்க முடியாத சூழ்நிலை.
அம்மாவும் தனிமையில் இருக்க விரும்பியதால் அவரை தங்களுடன் இருக்க வற்புறுத்தவில்லை. ஆனால் அந்த தனிமை அம்மாவிற்கு இனிமையைத் தரவில்லை என்பதை அடுத்து வந்த சில மாதங்களிலேயே பிரசிதா உணர்ந்தார்.
அம்மாவை நேரில் பார்த்தபோது அடையாளமே தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து காணப்பட்டார்.
எப்போதுமே தன்னை இளமையாகவும் இனிமையாகவும் வைத்துக் கொள்ளும் அம்மா இப்போது நேர்மாறாக இருந்தார்.
மருத்துவரிடம் அழைத்துப் போன போது எந்தப்பிரச்னையும் இல்லை. தனிமைதான் பிரச்னை என்ற மருத்துவர் நன்றாக துாங்குவதற்கு சக்தி வாய்ந்த துாக்க மாத்திரையை எழுதிக்கொடுத்தார்.
அதன்பிறகு அம்மா துாங்கினாரா தெரியாது. ஆனால் மகள் பிரசீதாவிற்கு துாக்கம் வரவில்லை.
அம்மாவை என்ன செய்வது என்பதுதான் அவரது முன் நின்ற ஒரே கேள்வியாக இருந்தது.
யாருக்கு பாராமாக இருக்க விரும்பாத அம்மா நிச்சயம் தன்னுடனோ தங்கையுடனோ இருக்க மாட்டார்.
எல்லோரையும் போல அம்மாவை முதியோர் இல்லம் அனுப்பவும் இஷ்டமில்லை.
ஏன் அம்மாவிற்கு கல்யாணம் செய்துவைக்கக்கூடாது என்று யோசித்தார். கணவர் தங்கை மற்றும் அம்மாவின் நலம் விரும்பிகளிடம் ஆலோசித்தார்.
சமூகம் என்ன சொல்லும் என்பதைப் பற்றி யோசிக்காமல் நமது மனதும், எதார்த்தமும் என்ன சொல்கிறதோ அதைச் செய்யலாம் என அனைவருமே கூறினர்.
அம்மாவிடம் விஷயத்தை சொல்ல அதிர்ந்து போகவில்லை. மவுனத்தை பதிலாக தந்தார். பின் அவரிடம் பேசிப்பேசி இன்னும் வாழவேண்டிய வாழ்க்கை எவ்வளவோ இருக்கிறது என்று சொல்லி சொல்லி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கினார். பின்னர் மணமகனை தேடும் படலத்தில் இறங்கினார்.
அதற்கு சிரமமே இல்லாமல் அம்மாவைப் போல இரண்டு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு, மனைவியை நோய்க்கு பறிகொடுத்துவிட்டு, தனிமையில் இருக்கும் அறுபது வயது ஒய்வு பெற்ற அரசு அதிகாரியான திவாகரனின் அறிமுகம் தோழியின் மூலம் கிடைத்தது.
அவரைச் சந்தித்து விஷயத்தை சொல்லி அவருடைய சம்மதத்ததையும் பெற்றாயிற்று.பின் அம்மாவையும் அவரையும் சந்திக்கவைத்து பேசவைத்தார். இருவரும் பல முறை சந்தித்து பேசிய பிறகு இழந்த வாழ்க்கையை தொடரலாம் என்று முடிவு செய்தனர்.

ஒரு நல்ல நாளில் திருச்சூர் திருவம்பாடி கோயிலில் திருமணம் நடந்தது. திருமணத்தில் திவாகரனின் குடும்பத்தினர் மற்றும் ரதியின் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டனர்.
மகள் பிரசீதா தாயின் கையைப்பிடித்து மணமகன் திவாகரினின் கையில் ஒப்படைத்த போது அம்மாவின் முகத்தில் நீண்ட காலத்திற்கு முன் பார்த்த சந்தோஷமும்,சிரிப்பும் எட்டிப்பார்த்தது,
இதைத்தானே பிரசீதா எதிர்பார்த்தார்.
குறிப்பிட்ட வயதுக்கு பின் ஆனோ பெண்ணோ இப்படித்தான் வாழவேண்டும் என்ற சமூகத்தின் மனநிலையில் ஒரு மாற்றம் வேண்டும். அவர்கள் எப்படி வாழவேண்டும் என்று நீங்கள் தீர்மானிப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் ஒரு வார்த்தை கேட்டுப்பாருங்கள். வரக்கூடிய பதில் சமூகத்தில் நிறயை மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் பிரசீதா தீர்க்கமாக..
-எல்.முருகராஜ்