வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
புதுடில்லி: கர்நாடக அரசு, பள்ளி, கல்லுாரிகளில் ஹிஜாப் அணிய விதித்திருந்த தடை உத்தரவை உறுதி செய்த, உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முஸ்லிம் மாணவியர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த, மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை செப்.,5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளி, கல்லுாரிகளில் முஸ்லிம் மாணவியர் 'ஹிஜாப்' எனும் முகம் மற்றும் தலைப்பகுதியை மறைக்கும் வகையில், உடை அணிந்து, வகுப்புகளுக்கு வருவதற்கு, கர்நாடக அரசு தடை விதித்திருந்தது; சீருடையை கட்டாயமாக்கியது. அரசின் உத்தரவை ரத்து செய்ய கோரி, சில முஸ்லிம் மாணவியர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், 'கல்வியில் மதம் நுழையக்கூடாது. சமத்துவத்தை உணர்த்தும் வகையில், சீருடை அணிய வேண்டும் என்ற, அரசின் உத்தரவு சரிதான். அதை மாணவியர் பின்பற்ற வேண்டும்' என, மார்ச் 15ல் தீர்ப்பளித்தது.

இது குறித்து கேள்வியெழுப்பி, உச்சநீதிமன்றத்தில் மாணவியர் குழு, மேல் முறையீடு செய்துள்ளது. இதில் 'கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவியரின் மனதை புரிந்து கொள்வதில் இடறியுள்ளது. சூழ்நிலையின் தீவிரத்தை உணரவில்லை.
இஸ்லாம் மதம் நடைமுறையில், ஹிஜாப் அணிவது அவசியம்' என, கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அமர்வு முன் இன்று நடைபெற்றது. அப்போது, ஹஜாப் அணியத் தடை விதித்தது தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இவ்வழக்கின் விசாரணையை செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Advertisement