கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 274 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.இதில் முதியோர் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவி தொகை, பட்டா மாறுதல் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 274 மனுக்கள் பெறப்பட்டது.முன்னதாக பார்வையற்ற மற்றும் காதுகேளாத 2 மாற்றுத் திறனாளிளுக்கு மொபைல் போன்கள், மாற்றுத் திறனாளியின் மகன் கல்லுாரி பயில உதவி தொகையாக 1,500 ரூபாய் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், கலால் உதவி ஆணையர் ராஜவேல் உட்பட அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.