ரேவா : மத்திய பிரதேசத்தில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி, 2,000க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்தன. இதையடுத்து, மாநிலத்தில் பன்றி இறைச்சி விற்க, வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரேவா நகரில் இரு வாரங்களுக்கு முன், பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள், இறந்த பன்றிகளில் இருந்து மாதிரி எடுத்து, போபால் நகரில் உள்ள தேசிய கால்நடை நோய் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பினர்.
அங்கு நடந்த பரிசோதனையில், பன்றிகள் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சலால் இறந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ரேவா கலெக்டர் மனோஜ் புஷ்ப், ரேவா நகரில் பன்றி இறைச்சி விற்கவும், வாங்கவும் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த ஆப்ரிக்க வகை காய்ச்சலுக்கு ரேவா நகரில் 2,000க்கும் மேற்பட்ட பன்றிகள் பலியாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு 25 ஆயிரம் பன்றிகள் இருக்கின்றன. அவற்றுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.