உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டையில் பஸ் மற்றும் லாரிகளில் பயன்படுத்தப்பட்ட ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
உளுந்துார்பேட்டை பகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகார்களின் பேரில், ஏர் ஹாரன்களை அகற்ற வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் செந்துாரவேல் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜிகுமார், பஸ்களில் இருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை அகற்றி பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் செந்துாரவேல் கூறுகையில், 'பஸ் மற்றும் லாரிகளில் இருந்து அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று (நேற்று) மட்டும் 10 பஸ்கள் மற்றும் 7 லாரிகளில் இருந்து ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டது.மேலும், 10 வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தினால் ஒரு வாகனத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்றார்.