கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் முன்னிறுத்தப் பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில், காங்., தோல்வி அடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். அப்போது முதல், இடைக்கால தலைவராக சோனியா நீடிக்கிறார்.
இருந்தாலும், லோக்சபா தேர்தலை தொடர்ந்து, பல மாநிலங்களில் காங்., தொடர் தோல்வியை சந்தித்து, தற்போது, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.இதனால், அதிருப்தி அடைந்த ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட, ௨௩ அதிருப்தி தலைவர்கள், 'ஜி -23' என்ற பெயரில், 'காங்., கட்சியில் அமைப்பு ரீதியாக பல மாற்றங்களை செய்ய வேண்டும்' என, கட்சியின் தலைவரான சோனியாவுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை, அவர் காதில் வாங்கவில்லை.
'காங்கிரஸ் தலைவராக ராகுல் மீண்டும் வர வேண்டும். அவருக்கான செல்வாக்கு குறையவில்லை' என்று, கட்சியில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தாலும், 'கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; என் குடும்பத்தைச் சேர்ந்த யாரும், கட்சியின் அடுத்த தலைவராக வர மாட்டார்கள்' என்றும், ராகுல் கூறி வருகிறார். ஆனாலும், கட்சியில் தேசிய அளவில் மட்டுமின்றி, மாநிலங்கள் அளவிலும், முக்கிய முடிவுகள் எடுப்பதிலும், நிர்வாகிகள் நியமனங்களிலும், அவர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் தலையீடு தொடர்கிறது. ராகுல் தலைவராக விரும்பவில்லை எனில், அவரின் சகோதரி பிரியங்காவை தலைவராக்கலாம் என, கட்சியில் ஒரு பிரிவினர் வலியுறுத்தினாலும், அதற்கும் ராகுல் மற்றும் சோனியா தரப்பில் சரியான பதில் இல்லை.
இந்தச் சூழ்நிலையில், காங்., தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தல் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. கட்சியில் அனைத்து மட்டத்திலும் உள்ள பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்றாலும், தலைவர் பதவிக்கான தேர்தலே முக்கியத்துவம் பெற்று உள்ளது. ஏனெனில், 2024 லோக்சபா தேர்தலை, அந்த தலைவரின் தலைமையில் தான், காங்., எதிர்கொள்ள வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, 23 தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியிலிருந்து விலகி உள்ளார். இதுதொடர்பாக, அவர் சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'ராகுல் தலைமையில், காங்., இரு லோக்சபா தேர்தல்களிலும், 39 சட்டசபை தேர்தல்களிலும் தோல்வி அடைந்துள்ளது. 'கட்சி முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், காங்., உடனான அரை நுாற்றாண்டு உறவை துண்டித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.அத்துடன், ராகுல் சிறுபிள்ளைத் தனமாக செயல்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் கூறியுள்ளார். இதன் வாயிலாக, காங்கிரஸ் மீள முடியாத நிலைமைக்கு சென்று கொண்டிருப்பதை, அவர் உணர்த்தியுள்ளார்.
இந்த நிலைமையில் மாற்றங்கள் நிகழ வேண்டும் எனில், அசுர பலத்துடன் இருக்கும் பா.ஜ.,வுக்கு எதிராக, பலமான எதிர்க்கட்சியாக காங்., உருவாக வேண்டும் எனில், நடைபெற உள்ள காங்., தலைவர் தேர்தலில், கட்சிக்கு ஒரு நிரந்தரமான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.அதேநேரத்தில், சோனியா குடும்பத்தினர் அல்லாத ஒருவர், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்த தலைவர், ராகுல் உள்ளிட்டவர்களின் கட்டுப்பாட்டில், 'ரிமோட்' கன்ட்ரோலில் இயங்குபவராகவே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இதற்கிடையில், ராகுலே தலைவராக வர வேண்டும் என, அவரின் ஆதரவாளர்களும், கட்சியில் ஒரு பிரிவினரும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அது நடக்குமா என்பது ராகுலின் மனநிலையை பொறுத்தது. பொதுமக்களிடையே காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக, 'பாரத் ஜோடோ' என்ற ஐக்கிய இந்திய யாத்திரையை அடுத்த மாதம், 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து, ராகுல் துவக்க உள்ளார். இதனால், கட்சியும், கட்சித் தொண்டர்களும் புத்துணர்வு பெறலாம்.
அதே நேரத்தில், கட்சிக்கு செயல் திறமிக்க, பலமான தலைவரை தேர்ந்தெடுப்பது அவசியம். அத்துடன் கட்சியில் அமைப்பு ரீதியாக உள்ள பிளவுகளை சரிப்படுத்தி ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். அதைச் செய்யாத வரையில், கட்சியில் குழப்பங்கள் தொடரவே செய்யும். மொத்தத்தில், பாரத் ஜோடோ யாத்திரைக்கு பதிலாக, காங்கிரசில் ஒற்றுமையை, ஒருங்கிணைப்பை உருவாக்க வேண்டும் என்பதே முக்கியமானது.