வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: நீட் தேர்வு மட்டுமின்றி புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடந்தது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 21 துணைவேந்தர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் உயர்கல்வித்துறை செயல்பாடுகள், புதிய கல்விக்கொள்கை, பாடத்திட்டத்ததை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த பின் 19 பல்கலை.,கள் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் பல்கலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உலகளவில் தலைசிறந்த பல்கலைகள் தமிழகத்தில் உள்ளன. நாட்டில் தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பல்கலை, கல்லூரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
உயர்கல்வியால் சமூகத்தில் நன்மதிப்பும் வளமான வாழ்க்கையும் உருவாக்குகிறது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்பது தேசிய சராசரியை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளது. சென்னை பல்கலை முன்மாதிரி பல்கலையாக திகழ்கிறது. மாணவர் எண்ணிக்கை உயரும் போது கல்வி தரம் குறையும் என்ற வாதத்தை ஏற்க மாட்டோம். சென்னை பல்கலையில் 5 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் போது கல்வித்தரம் பாதிக்கவில்லை.

பேராசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படுகிறது. தொழில்நிறுவுனங்களின் பங்களிப்போடு பாடத்திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும்.ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.அறிவியல் சிந்தனை கொண்ட சமூகம், அறிவுப்பூர்வமான மாணவர்களை உருவாக்குவதே இலக்காக உள்ளது.
கல்வித்தரத்தை உயர்த்துவதுடன் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. கல்வியில் இருந்து மாணவர்களை அந்நியப்படுத்துவதை எதிர்க்கிறோம். தமிழகத்தில் கல்வித்துறையில் நாம் மேலும் உயர்ந்து நிற்க வேண்டும்.வெறும் வேலைவாய்ப்பு தருவது மட்டும் உயர்கல்வியின் நோக்கம் அல்ல.
துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அது மாநில உரிமை சார்ந்தது.நீட் தேர்வு மட்டுமின்றி, புதிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம்.தமிழகத்திற்கு என தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.