வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பொய்யிலே பிறந்த புலவரை போல பொய்யிலே பிறந்தவர் பன்னீர்செல்வம். அவர் வசூல்ராஜா பன்னீர்செல்வம் என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பன்னீர்செல்வம் வகித்த அனைத்து பதவிகளுமே பணம் அதிகமாக புழக்கம் இருக்கும் பதவிகள். வீட்டுவசதி, கருவூலம், நிதி என அனைத்து துறைகளுமே கேட்டு வாங்கி கொண்டவர் தான் பன்னீர்செல்வம். உலக கோடீஸ்வரர் வரிசையில் இருப்பது போல பன்னீர்செல்வம் பணம் வைத்திருக்கிறார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., திரைப்படம் போல வசூல்ராஜா பன்னீர்செல்வம். சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார். ஆனால், அந்த உத்தமனை நம்ப மக்கள் தயாராக இல்லை. வாயெல்லாம் பொய்.

பொய்யிலே பிறந்த புலவரை போல பொய்யிலே பிறந்தவர் பன்னீர்செல்வம். அவர் வசூல்ராஜா பன்னீர்செல்வம். அவர் கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர் போல, மக்களை நம்ப வைக்கிறார். ஆனால், அதனை நம்ப மக்கள் தயாராக இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு வராத நிலையில், பன்னீர்செல்வம் வகித்த துறையில் மட்டும் ஊழல் புகார் வந்தது ஏன்?
தொண்டர்கள், நிர்வாகிகள் செல்வாக்கு அவருக்கு கிடையாது. ஊடகங்கள் மற்றும் தி.மு.க.,வை நம்பி அரசியல் செய்கிறார். துரோகம் செய்ததில் பன்னீர்செல்வம் கைதேர்ந்தவர். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்பவர். கட்சியை காட்டிக் கொடுக்க தயங்காதவர்.
அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டது. தற்போது தி.மு.க., ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. பொது மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
தொண்டர்கள் நிராகரிப்பு

அ.தி.மு.க.,வை சேர்ந்த மற்றொரு முன்னாள் அமைச்சர் உதயக்குமார் கூறுகையில், பன்னீர்செல்வத்திடம் என்னென்ன உண்மைகள் இருக்கிறதோ அதை அவர் சொல்லட்டும். அவர் நடத்துவது நாடகம். அவரை தொண்டர்கள் நிராகரித்துவிட்டனர். நாடகத்திற்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பற்கு, அதனை துவக்கிய அவரே வைக்க வேண்டும். நிலைப்பாடு மாற்றம் என்ன என்பதற்கு அவர் தான் பதில் கூற வேண்டும். இவ்வாறு உதயக்குமார் கூறினார்.