சென்னை : அடுத்த ஓராண்டிற்கு கிடங்குகளில் இருப்பாக வைக்கப்பட உள்ள, 27 ஆயிரத்து 970 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பெட்டிகளை, 'டாஸ்மாக்' நிறுவனம் காப்பீடு செய்ய உள்ளது.தீ விபத்துதமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 5,310 சில்லரை கடைகள் வாயிலாக தினமும், 100 கோடி ரூபாய் மதிப்பிலான பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது.
இது, விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது.டாஸ்மாக், 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது. மதுபான தயாரிப்பு ஆலைகளில் இருந்து, லாரிகளில் மதுபான பாட்டில் அடங்கிய பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள, 43 கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகின்றன.அங்கிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, கடைகளுக்கு தினமும் வினியோகம் செய்யப்படுகிறது.
தீ விபத்து, கொள்ளை போன்றவற்றால் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் மதுபான பெட்டிகளுக்கு இழப்பு ஏற்பட்டால், அதை ஈடுசெய்ய, டாஸ்மாக் ஆண்டுதோறும் காப்பீடுசெய்கிறது. அதன்படி, தற்போது செயல்பாட்டில் உள்ள காப்பீட்டு காலம் அக்., இறுதியில் முடிகிறது.
தகுதியான நிறுவனம்எனவே, வரும் நவ., 1 முதல் 2023 அக்., 31 வரை கிடங்குகளில் வைக்கப்பட உள்ள, 27 ஆயிரத்து 970 கோடி ரூபாய் மதிப்பிலான பீர், மது வகைளை காப்பீடு செய்ய டாஸ்மாக் முடிவு செய்து உள்ளது. இதற்காக, தற்போது தகுதியான பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை, தேர்வு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.