கொலை வழக்கில் ரவுடி ராஜாவிற்கு 'ஆயுள்!'
மதுரை : கொலை வழக்கில் ரவுடி கட்டை ராஜாவிற்கு துாக்கு தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவை, ஆயுள் தண்டனையாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை குறைத்தது. பிற இரண்டு பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சென்னியமங்கலம் செந்தில்நாதன், 'டாஸ்மாக் பார்' நடத்தினார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த ரவுடியான கட்டைராஜா, 44, என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது.கட்டைராஜா சிலருடன் சேர்ந்து, 2013ல் செந்தில்நாதனை வெட்டிக் கொலை செய்தார். பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கட்டைராஜாவிற்கு துாக்கு தண்டனை, கும்பகோணம் திப்பிராஜபுரம் ஆறுமுகம், 52, ஆலங்குடி செல்வம், 39, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்., 12ல் உத்தரவிட்டது.கட்டைராஜா மீது பல கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. கீழமை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதிக்கும் பட்சத்தில் அதை பரிசீலித்து இறுதி முடிவெடுக்க, உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது வழக்கம்.
அதன்படி, இந்த வழக்கு உயர்நீதிமன்றக் கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து கட்டைராஜா உட்பட மூன்று பேரும் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியதாவது:கொலை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த வழக்கு அந்த அரிதான வழக்கு வரம்பிற்குள் வராது.எனவே, கட்டைராஜாவிற்கு துாக்கு தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவை மாற்றியமைத்து, ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.அவர், 25 ஆண்டுகளுக்கு தண்டனை குறைப்பிற்கான சலுகையை அரசிடம் உரிமையாக கோர முடியாது. ஆறுமுகம், செல்வத்திற்கு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆசிரியரை மரத்தில் கட்டி வைத்துஉதைத்த அரசு பள்ளி மாணவர்கள்
தும்கா : ஜார்க்கண்டில், மதிப்பெண் குறைவாக வழங்கியதால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள் ஆசிரியர் மற்றும் அலுவலக ஊழியரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.ஜார்க்கண்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள கோபிகந்தர் கிராமத்தில், பழங்குடியினருக்கான அரசு உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது.இங்கு, 200 பேர் தங்கிப் படிக்கின்றனர்.
![]()
|
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.இதில், 11 பேர் தேர்ச்சி அடையவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பள்ளியின் கணித ஆசிரியர் சுமன் குமார் மற்றும் பள்ளி அலுவலர் சோனேராம் சவுரே ஆகிய இருவரையும் பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். அவர்களுடன் சேர்ந்து மற்ற மாணவர்களும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோபிகந்தர் போலீசார் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். ஆனால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதால் புகார் கொடுக்க விரும்பவில்லை என ஆசிரியர் சுமன் குமார் கூறிவிட்டார்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தம்பதியர் மீது ரசாயனம் வீசியவர்களுக்கு வலை
மீஞ்சூர் :மீஞ்சூர் அடுத்த, மெரட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி, 70; விவசாயி. நேற்று முன்தினம் இரவு, மணி அவரது மனைவி கலாவதி, மாமியார் ஜீவம்மா ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.நள்ளிரவு, மர்ம நபர்கள் ஆசிட் போன்ற ரசாயன கலவையை ஜன்னல் வழியாக வீட்டிற்குள் தெளித்து உள்ளனர்.
வீடு, புகை மூட்டமாக மாறியதுடன், உறங்கிக் கொண்டிருந்த மணி மற்றும் கலாவதியின் மீது ரசாயனம் பட்டதில் இருவரும் காயம் அடைந்தனர்.மணியின் அலறல் சத்தத்தை தொடர்ந்து, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இச்சம்பவம் குறித்து நேற்று காலை, மணி தன் உறவினர்களுக்கு தெரியப்படுத்தினார். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மாணவன் இறப்பு: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
செங்கல்பட்டு :நெரும்பூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் இறந்தது தொடர்பாக, ஓர் ஆசிரியர் 'சஸ்பென்ட்' செய்யப்பட்டார். மற்றொரு ஆசிரியை 'டிஸ்மிஸ்' செய்து, கலெக்டர் உத்தர விட்டார்.இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:திருக்கழுக்குன்றம் அடுத்த, நெரும்பூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 16 மாணவர்கள், கிரிக்கெட் விளையாட்டு போட்டிக்காக, அணுபுரம் சென்றனர்.
![]()
|
மேலும், பள்ளி தலைமை யாசிரியை யிடம், இது குறித்து விளக்கம் கோரப்பட்டு உள்ளது.முதல்வரின் நிவாரண நிதி, பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூடுதல் நிவாரணம் வழங்க, ஆதிதிராவிடர் நல இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
'தவறாக சித்தரித்து மிரட்டும் வக்கீல்'பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார்
திருப்பூர் : திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் மோகன் பிரவீன், 52 என்பவர், திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:கடந்த, இரு ஆண்டுகளுக்கு முன்பாக, பல்லடத்தை சேர்ந்த சரவணகுமார் என்ற வக்கீலிடம் டிரைவராக வேலைக்கு சேர்ந்தேன்.
ப.வடுகபாளையத்தில் வீடு வாங்கி இருப்பதாகவும், அதற்கு மின் இணைப்பு செய்ய வேண்டும் என, என்னிடம் கடனாக, 40 ஆயிரம் கேட்டார். கொடுத்தும், தற்போது வரை திருப்பி தரவில்லை.பணம் கேட்டதற்காக, அவருடன் இருக்கும் போது, கோவிலுக்கு சென்று நான் மொட்டையடித்து, அரை நிர்வாணத்துடன் இருக்கும் போட்டோவை, பல வாட்ஸ் அப் குழுக்களுக்கு, தவறாக சித்தரித்து அவதுாறு பரப்பி உள்ளார்.
வக்கீல் சரவணகுமார் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி, அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கி உள்ளார். இதனை அறிந்து கொண்டதால், கொலை மிரட்டல் விடுத்தும், அவதுாறு பரப்பி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட வக்கீல் சரவணக்குமார் கூறுகையில், ''என் மீது மோகன்பிரவீன் அளித்துள்ள புகார் குறித்து எதுவும் தெரியாது. அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. புகாரை நான் பார்த்து கொள்கிறேன்,'' என்றார்.