சென்னை, புறநகரில் விநாயகர் சதுர்த்தி விழா... விமரிசை! வீதிக்கு வீதி சிலை வைத்து சிறப்பு வழிபாடு| Dinamalar

சென்னை, புறநகரில் விநாயகர் சதுர்த்தி விழா... விமரிசை! வீதிக்கு வீதி சிலை வைத்து சிறப்பு வழிபாடு

Added : ஆக 31, 2022 | |
கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், கடந்த இரண்டு ஆண்டுகளாக களையிழந்த விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஹிந்து அமைப்பினர், நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், வீதிக்கு வீதி விதவிதமாக, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.சந்தைகளில் பூஜை பொருட்களின் விற்பனை
 சென்னை, புறநகரில் விநாயகர் சதுர்த்தி விழா... விமரிசை!     வீதிக்கு வீதி சிலை வைத்து சிறப்பு வழிபாடு

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால், கடந்த இரண்டு ஆண்டுகளாக களையிழந்த விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஹிந்து அமைப்பினர், நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள், வீதிக்கு வீதி விதவிதமாக, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர்.சந்தைகளில் பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியது. விநாயகர் சிலைகள் வாங்கவும் பூக்கள், பழங்கள் வாங்கவும் மக்கள் குவிந்தனர்.விநாயகர் என்றால், தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற்கடவுள். 'ஓம்' எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது. அந்த 'ஓம்' எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார்.விநாயகர் சதுர்த்தி என்பது, விநாயகரின் முக்கியமான விழா. ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இது, விநாயகரின் பிறந்த நாளாக கருதப்படுகிறது. குடும்ப விழாவிநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில், குறிப்பாக சென்னை மாநகரில் ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தும் பழக்கம் வந்தது. ஆண்டுதோறும் சென்னை புறநகரில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஆண்டு, மீண்டும் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னை, புறநகரில் ஹிந்து அமைப்பினர், நலச்சங்கத்தினர், பொதுமக்கள் என பல தரப்பினரும், விநாயகர் சிலை வைத்து, நேற்று காலை வழிபாடு நடத்தினர்.சில இடங்களில் வெற்றிலை விநாயகர், விதை விநாயகர், லட்டு விநாயகர், பருப்பு விநாயகர், பழ விநாயகர் உள்ளிட்ட வித்தியாசமாக விநாயகர் சிலைகள் வைத்துள்ளனர். அவற்றை திருவொற்றியூர், நீலாங்கரை உள்ளிட்ட நான்கு இடங்களில் கரைக்க, காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.மேலும், சென்னை நகரில் அனைத்து பகுதிகளிலும் களிமண் விநாயகர் சிலை விற்பனை அபாரமாக நடந்தது. குறைந்த பட்சம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன.மஞ்சள் கிழங்கு, வாழைக்கன்று, அருகம்புல், எருக்கம்பூ மாலை, கம்பு, கரும்பு ஆகியவற்றின் விற்பனையும் சூடுபிடித்தது. இனிப்பகங்களில், விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டைக்கு வரவேற்பு காணப்பட்டது.வடபழநி ஆண்டவர் கோவில்வடபழநி முருகன் கோவில் சார்பில், கோவிலை சுற்றி வசிக்கும் ஏழை, எளிய பக்தர்களுக்கு களிமண் விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டன. சென்னை, புறநகரில் உள்ள பல விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள், பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.அனைவரது வீடுகளிலும் களிமண் விநாயகர் சிலைகள் வைத்து கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள் படையலிட்டு, வழிபாடு நடத்தினர்.1,400 சிலைகள்விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், 1,400 சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பது மற்றும் ஊர்வலம் குறித்த தகவல்கள், இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக உயர் அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.


ஆவடியில் 503!

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் தனிநபர்கள் நேற்று, அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்துள்ளனர். ஆவடி காவல் எல்லைக்கு உட்பட்டு 286 விநாயகர் சிலைகள், ரெட்ஹில்ஸ் காவல் எல்லைக்கு உட்பட்டு 217 விநாயகர் சிலைகள் என, மொத்தம் 503 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 3,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.''சட்டம் - ஒழுங்கிற்கு இடையூறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தரப்பினரும், அரசின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்,'' என, ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.பழங்கள், பூக்கள் விலை உயர்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, படையலுக்கான பழங்களான வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், களாக்காய், கம்பு, கரும்பு துண்டு ஆகியவை கொண்ட தொகுப்பு, 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. ஒரு ஆரஞ்சு பழம், 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.மல்லிகைப்பூ ஒரு முழம் 50 ரூபாய், எருக்கம் பூ 40 ரூபாய், அருகம்புல், மாவிலை, தென்னை தோரணம் 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. விநாயகர் குடை 30 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.தாம்பரத்தில் 600!

தாம்பரம் காவல் ஆணையரக எல்லையில் மொத்தம், 600 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் சேலையூர்- 45, சங்கர் நகர் 40, பல்லாவரம்- 20-, குன்றத்துார்- 15, தாம்பரம்- 58, பீர்க்கன்காரணை- 46, குரோம்பேட்டையில்- 28 ஆகிய சிலைகள் அடங்கும்.இந்த சிலைகளை கோவளம், நீலாங்கரை பல்கலை நகர் ஆகிய இரண்டு இடங்களில், செப்., 3, 4 ஆகிய தேதிகளில் கரைக்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், 10 சதவீத சிலைகள் கோவளத்திலும், 90 சதவீத சிலைகள் நீலாங்கரையிலும் கரைக்க வாய்ப்புள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- -நமது நிருபர் --


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X