ராதையின் கதையை கல்யாணியில் கொடுத்த சாய் விக்னேஷ்| Dinamalar

ராதையின் கதையை கல்யாணியில் கொடுத்த சாய் விக்னேஷ்

Added : ஆக 31, 2022 | |
'ஏர்டெல் சூப்பர் சிங்கர்' இசை நிகழ்ச்சி மூலம் பிரசித்தி பெற்றவர் சாய் விக்னேஷ். கச்சேரிகளில் இவர் எப்படி பரிமளிக்கிறார் என்பதை நேரில் கேட்டு இன்புற, சென்னை வாணி மஹாலில் நடந்த ஸ்ரீ ஜெயந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி, நமக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.கிருஷ்ணனைப் பற்றிய கதை வேண்டுமா? ராதையை விட உகந்தவர் யார் உளர் என்றபடி, 'கதய கதய மாதவம்' என்று கல்யாணியில்
ராதையின் கதையை கல்யாணியில் கொடுத்த சாய் விக்னேஷ்

'ஏர்டெல் சூப்பர் சிங்கர்' இசை நிகழ்ச்சி மூலம் பிரசித்தி பெற்றவர் சாய் விக்னேஷ். கச்சேரிகளில் இவர் எப்படி பரிமளிக்கிறார் என்பதை நேரில் கேட்டு இன்புற, சென்னை வாணி மஹாலில் நடந்த ஸ்ரீ ஜெயந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி, நமக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

கிருஷ்ணனைப் பற்றிய கதை வேண்டுமா? ராதையை விட உகந்தவர் யார் உளர் என்றபடி, 'கதய கதய மாதவம்' என்று கல்யாணியில் பாடியபடி, ராதையிடம் கதை கேட்க இட்டுச் சென்றார் சாய் விக்னேஷ்.சமர்த்தர்நாராயண தீர்த்தரின் இந்த பாடலுக்கு வந்த கல்யாணி ஆலாபனை, ரசிகர்களுக்கு ஆனந்த களிப்பைக் கொடுத்தது.சாய் விக்னேஷ் 'டிவி' நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்; முறையாக சங்கீதமும் கற்றிருக்கிறார். இதனால், குரலின் ஏற்ற இறக்கங்கள் என்பதான 'வாய்ஸ் மாடுலேஷன்' என்பதை தேர்ந்தபடி அளிப்பதில் சமர்த்தராய் இருந்தார்.இவர், ரவை சங்கதிகள் என்பனவற்றையும் தக்க தருணங்களில் அளித்து, அவற்றை தொட்டுச் சென்றது போலத் தோற்றமளிக்க செய்தார்.கதய கதயவுக்கான நெரவல் அதஸகி கதய ஸ்ரீ மதுசூதன எனுமிடத்தில் இருந்தது, நல்ல விஸ்தாரமான நெரவல்; கற்பனை ஸ்வரங்களும் கூடத் தான்.இதற்கு முன்னதாக பாடியது, ஹிந்தோளத்தில் தீட்சிதரின் கோவர்த்தன கிரீஸம் ஸ்மராமி.இதற்குண்டான கற்பனை ஸ்வரங்களை ரவிசசி நயன விலாஸம் எனுமிடத்தில், இவற்றை முறை சார்ந்த கட்டுக்கோப்பின்படி அமைத்துப் பாடியதால், பக்க வாத்தியக்காரர்களுக்கு, முக்கியமாக லய வித்வான்களுக்கு மிகவும் தோதாக இருந்தது. ஒரு சின்ன நெருடலை இங்கே கூறுவது, நம் கடன். சாய் மேற்கொள்ளும் பகீரதப் பிரயத்தனங்கள் காரணமாகவோ என்னவோ, நிறைய சறுக்கல்கள் அங்கங்கே! இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இவரது இசை ஆர்வமும் மேலான திறனும் பரந்து விரிந்திருக்கின்றன.வயதோ இவர் பக்கம். எல்லாம் இப்படி இருக்க, விசாலமான அம்பலத்தேறி ஜெயிக்க வேண்டாமா இவரது இசைப் படைப்புகள்! வாசித்தளிப்புசற்றே கவனம் தேவை நண்பா! இந்த கச்சேரியைப் பற்றிய ஒரு பொதுவான கருத்தும் உண்டு. சப்தம் மிகவும் பலமாக இருப்பதால், ரசிகானுபவம் இல்லையோ என்பது தான் அது. ஏன் இது? 'மைக்'கில் ஏதாவது பிரச்னையா? காரைக்குடி வெங்கட சுப்பிரமணியனின் ஆலாபனைகளிலும், ஸ்வரப் பிரஸ்தாரங்களிலும் குறையொன்றுமில்லை.தனியாவர்தனத்தின் போது மிருதங்கத்தில் அர்ஜுன் கணேஷும், கட வாத்தியத்தில் ராஜாராமனும், பாதை வகுப்பது போல நடையை அமைத்துக் கொண்டு வாசித்தனர்.வெறும் சதுஸ்ரம் என்றில்லாமல், மற்ற கதி மாற்றங்களுடன் வாசித்தளித்தனர். கடைசியில் குறைப்பின் போது என்று மட்டும் இணையாமல், அவ்வப்போது இருவரும் இணைந்தனர்.பாட்டிற்கு வாசிக்கும் போதும், லய வாத்தியங்களிலும் 'மாடுலேஷன்' கொடுக்கப்பட்டது. கீழ்காலம் வாசித்ததை உடனே எந்தவித குழப்பமும் இல்லாமல் மேல்காலம் வாசித்தது, ஒப்பிடுதலுக்கு வசதி கொடுத்தது.ஆனால், காலப்பிரமாணம் ஓடி விட்டது என்பது கண்கூடாகத் தெரிந்தது. கடைசி மோராவிற்கு அடுத்து வந்த கோர்வையை, இருவரும் மிகத் தெளிவுடன் வழங்கினர்.இரண்டு வாரங்கள் விழாவை, பாரம்பரியம் மிக்க இந்த சபாவினர், வெற்றியுடன் நிறைவேற்றி ரசிகர்களின் பெருமதிப்பைப் பெற்றனர்.-எஸ்.சிவகுமார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X