ஆசாதுக்கு தி.மு.க., அர்ச்சனை சிறுபான்மை அமைப்புகள் வேதனை| Dinamalar

ஆசாதுக்கு தி.மு.க., 'அர்ச்சனை' சிறுபான்மை அமைப்புகள் வேதனை

Added : ஆக 31, 2022 | |
முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாதை, 'ஒன்பது மனம் கொண்டவர்' என, தி.மு.க., விமர்சித்திருப்பது, அக்கட்சியை ஆதரிக்கும் சிறுபான்மையின சமுதாய அமைப்புகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வாயிலாக காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி உருவானது.நட்புறவுதமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, நீண்ட காலமாக பணியாற்றியவர் குலாம் நபி ஆசாத். மறைந்த

முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாதை, 'ஒன்பது மனம் கொண்டவர்' என, தி.மு.க., விமர்சித்திருப்பது, அக்கட்சியை ஆதரிக்கும் சிறுபான்மையின சமுதாய அமைப்புகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வாயிலாக காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி உருவானது.



நட்புறவு


தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக, நீண்ட காலமாக பணியாற்றியவர் குலாம் நபி ஆசாத். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பராக திகழ்ந்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு பாலமாக இருந்து வந்தார். கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு விவகாரத்தால், கூட்டணியில் முறிவு ஏற்படும் நிலை ஏற்பட்டது; ஆசாத் சமரச பேச்சு காரணமாக உறவு நீடித்தது.


சென்னைக்கு ஆசாத் வரும் போதெல்லாம், கருணாநிதியை சந்திக்காமல் செல்ல மாட்டார்; அந்த அளவிற்கு இருவருக்கும் நட்புறவு இருந்தது.காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆசாத் விலகியுள்ள நிலையில், 'பிரதமர் மோடி மனிதாபிமானம் மிகுந்தவர்' என, பாராட்டி பேசினார். நாட்டின் பிரதமரை பாராட்டி பேசியதற்காக, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், 'ஒன்பது மனமா குலாம் நபிக்கு?' என்ற தலைப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளார்.


'கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரசில் இருந்து அனைத்தையும் அனுபவித்தவர் ஆசாத். 'ஒருவன் மனது ஒன்பதடா... அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா...' என்ற கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன' என, ஆசாதை விமர்சித்து உள்ளனர். தி.மு.க.,வை ஆதரிக்கும் சிறுபான்மையினர் அமைப்புகளே, இந்த கருத்தை கண்டித்துள்ளன.



தனிப்பட்ட உரிமை


சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவு:கட்சியிலிருந்து விலகிச் செல்வது, அவரவரின் தனிப்பட்ட உரிமை. கருணாநிதிக்கு நெருங்கிய நண்பராகவும், தி.மு.க., மீது பற்றுள்ளவராகவும் இருந்த ஆசாதை விமர்சிப்பது, நாகரிகமான அரசியல் அல்ல. நாட்டின் பிரதமரை பாராட்டுவது, அவரது சொந்த கருத்து; அதை ஏன் தி.மு.க., விமர்சிக்க வேண்டும்?இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X