பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஏரி தண்ணீரின்றி வறண்டு உள்ளது. அங்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி, நேற்று ஆய்வு செய்தார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த இரு மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து கடலுக்கு சென்ற தண்ணீர், 240 டி.எம்.சி., மேட்டூர் அணை உபரிநீரை, சேலம் மாவட்டம் முழுதும் எடுத்துச்செல்ல வேண்டும். அனைத்து ஏரிகளையும் நிரப்ப, 5 டி.எம்.சி., போதும். கடந்த ஆட்சியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, 570 கோடி ரூபாய் மதிப்பில், 100 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை துவக்கி, சரியான முறையில் நடைமுறைப்படுத்தவில்லை.
எங்கள் நோக்கம், 4,000 கோடி ரூபாய் மதிப்பில் ஒட்டுமொத்த சேலம் மாவட்டத்துக்கும் உபரிநீரை எடுத்துச்செல்ல வேண்டும்.அதற்கு முக்கியமாக பனமரத்துப்பட்டி ஏரியில், 1 டி.எம்.சி., நீர் தேக்க துார் வார வேண்டும். இங்கிருந்து அனைத்து மக்களுக்கும் தினமும் குடிநீர் வழங்கலாம்.சமீபத்தில் ஏரியை துார்வார, 97 கோடி ரூபாய் அறிவித்தனர். ஆனால், திட்ட மதிப்பீடுக்கு மட்டும், ஒரு கோடியே, 69 லட்சம் ரூபாய் ஒதுக்கியது ஏன் என தெரியவில்லை.
இருப்பினும், திட்டத்தை அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் பெரிய ஏரி மோசமான நிலையில் உள்ளது. வெள்ளையர் ஆட்சி காலத்தில் உருவாக்கிய நீர் தேக்கம், மக்களாட்சியில் பாதுகாக்க இரு அரசுகளும் தவறியுள்ளன.தமிழகம் முழுதும் இதே நிலை உள்ளது. உடனே இந்த ஏரியை துார்வாரி, ஆழப்படுத்தி, மேட்டூர் - சேலம் உபரிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
![]()
|
எட்டு வழிச்சாலைத் திட்டம் என்பது, விவசாய நிலத்தை ஆக்கிரமித்து, வனத்துக்கும், விவசாயத்துக்கும் எதிரான திட்டமாக பார்க்கிறோம். விவசாயத்தை பாதிக்காமல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் நடந்த கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில், பா.ம.க., தலைவர் அன்புமணி பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தை, 56 ஆண்டு காலம் மாறிமாறி ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள், இதுவரை எந்த திட்டத்தையும் உருப்படியாக செய்யவில்லை. தற்போதைய அரசு, 50 சதவீதம், 'டாஸ்மாக்' வருமானத்தை நம்பியே உள்ளது. இரு திராவிட கட்சிகளும் கொள்ளையடிக்கின்றன. அவர்கள் வாங்கும் கமிஷன் சதவீதத்தில் தான் வித்தியாசம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.