வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-''தேசிய அளவிலான அரசியலில், பா.ஜ.,வுக்கு மாற்று நாங்கள் மட்டுமே. எங்கள் கட்சி நாட்டை ஆள மக்கள் விரும்புகின்றனர்,'' என, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. மதுபான விற்பனை உரிமம் வழங்குவதில் மோசடி நடந்துள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து உள்ளது.இதைத் தொடர்ந்து, தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க பா.ஜ., முயற்சிப்பதாக, ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்தார். இதன் மீது, சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தது.
சட்டசபையில் மொத்தமுள்ள 70 இடங்களில், ஆம் ஆத்மிக்கு 62 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; பா.ஜ.,வுக்கு எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.சட்டசபையில் துணை சபாநாயகர் ராக்கி பிர்லாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பா.ஜ.,வைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து, மற்ற ஐந்து பா.ஜ., உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.அதைத் தொடர்ந்து, குரல் ஓட்டெடுப்பில் நம்பிக்கை கோரும் தீர்மானம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து, அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது:தேசிய கட்சிகளாக தற்போது ஊழல் செய்யும் பா.ஜ., மற்றும் மிகவும் நேர்மையான ஆம் ஆத்மி கட்சி மட்டுமே உள்ளன. பா.ஜ.,வுக்கு சரியான போட்டியை அளிக்கக் கூடியதாக ஆம் ஆத்மி உள்ளது. நாட்டில் எங்கள் கட்சியின் ஆட்சி அமைய மக்கள் விரும்புகின்றனர்.

எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கும் பா.ஜ.,வின் முயற்சி தோல்வி அடைந்தது மற்றும் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களின் நேர்மையை உணர்த்தும் வகையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.மணீஷ் சிசோடியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், குஜராத்தில் எங்கள் கட்சிக்கான ஆதரவு 4 சதவீதம் அதிகரித்து உள்ளது. அவரை கைது செய்தால், அது மேலும் உயரும். இது, பா.ஜ., மற்றும் பிரதமர் மோடி எங்களுக்கு அளித்துள்ள பரிசு.இவ்வாறு அவர் கூறினார்.