சென்னை : அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை அதிரடி தீர்ப்பு வழங்கியது. இன்றைய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்துள்ளது. ஜூலை 11 நடந்த பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் அதிக அளவு பழனிசாமியை ஆதரிப்பதால் கோர்ட் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதன் மூலம் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதாவது எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் அவரது வக்கீல் இன்பதுரை கூறினார். தங்களின் வாதம் ஏற்று கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 'இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில், ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி, பொதுக்குழுவை கூட்ட முடியாது' என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், 'தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்த இயலாது; அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில், நேரடியாக தலையிடுவதாக உள்ளது. 'கட்சி செயல்பாடுகளில் மட்டுமின்றி, பெரும்பான்மையினரின் விருப்பத்திலும் இந்த உத்தரவு குறுக்கிடுகிறது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; விசாரணை முடியும் வரை, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பழனிசாமி தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடினர்.
பன்னீர்செல்வம் தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்; வைரமுத்து சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் வாதாடினர்.
ஒரே நாளில் மேல்முறையீட்டு வழக்கில், மூத்த வழக்கறிஞர்களின் வாதம், 2022 ஆகஸ்ட் 25ல் முடிந்தது. அதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், ஜூலை 11 நடந்த பொதுக்குழு செல்லும் என்றும், தனிநீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் ஏற்பு
தீர்ப்பு தொடர்பாக அதிமுக.,வை சேர்ந்த இன்பதுரை கூறியதாவது: பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கி உள்ளது. அதிமுகவின் நோக்கம், முன்னேற்பாடுகள் நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. இது தொண்டர்களின் விருப்பம். ஒற்றை தலைமை என்ற என்ற நோக்கம் நீதிமன்றம் ஏற்று கொண்டது. பொதுக்குழு உறுப்பினர்களை பழனிசாமி பெற்றுள்ளார். இதனால், பொதுக்குழு செல்லும் என்ற வாதத்தை முன்வைத்தோம். அதனை ஏற்று கொண்டுள்ளது. சட்ட விதிகளின்படி அதிமுக பொதுக்குழு நடந்தது என்பதை நீதிமன்றம் ஏற்று கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொண்டர்கள் கொண்டாட்டம்
உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, பழனிசாமி வீட்டின் முன்பு, அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.