வாணியாறு அணை நீர்மட்டம் உயர்வு
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காட்டில், வாணியாறு அணை உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள அணைக்கு, கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், அதன் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று அணையின் மொத்த கொள்ளளவான, 65.27 அடியில், 54 அடியாக அணை நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 200 கன அடி நீர்வரத்து உள்ளது.
முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. தமிழ்த்துறை உதவி பேராசிரியை சுஜிதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். பெரியார் பல்கலைக்கழக ஆட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் வழங்கி பேசினர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.
டீசல் விற்றவர் சிக்கினார்
காரிமங்கலம்: காரிமங்கலம் எஸ்.ஐ.,கோகுல் மற்றும் போலீசார் பொன்னேரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள பெட்டிக்கடையில் டீசல் பதுக்கி விற்றது தெரியவந்தது. அங்கு டீசல் விற்ற கலைசெல்வன் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 5 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.
அஞ்செட்டி தாசில்தார் பொறுப்பேற்பு
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி தாசில்தாராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி, சூளகிரி சிப்காட் நிலை - 4, அலகு - 1 தனி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, சூளகிரி தாசில்தாராக பணியாற்றிய தேன்மொழி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் அஞ்செட்டி தாசில்தாராக பொறுப்பேற்றதையடுத்து, அவருக்கு தாசில்தார் அலுவலக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க., ஆலோசனை கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், ஆலாபுரம் பஞ்.,க்கு உட்பட்ட, மருக்காலம்பட்டி, நடூர், அம்மாபாளையம், ஜீவா நகர் ஆகிய கிளை கழகங்களின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர் சரவணன், கிளை நிர்வாகிகள் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.
மழையால் பருத்தி செடிகள் அழுகல்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டத்தில், கடத்துார், வேப்பிலைப்பட்டி, சிந்தல்பாடி, தாளநத்தம், கேத்துரெட்டிப்பட்டி, அய்யம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில், பல நுாறு ஏக்கரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் தொடர்மழையால், பருத்தி வயல்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், ஈரப்பதத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், பருத்தி செடிகள் அழுகி வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சாராயம் கடத்தியவர் கைது
அரூர்: அரூர் அடுத்த பையர்நாயக்கன்பட்டியில் இருந்து, மோட்டூர் செல்லும் வழியில் வரட்டாறு பாலம் அருகில், நேற்று கோட்டப்பட்டி எஸ்.ஐ., சேகர் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, டி.வி.எஸ்., ஸ்கூட்டியில் சாராயம் கடத்தி வந்த திருவண்ணாமலை, மோத்தக்கல்லை சேர்ந்த லட்சுமணன், 52, என்பவரை கைது செய்தனர்.
27 வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
அரூர்: அரூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட, 27 வி.ஏ.ஓ.,க்கள் கவுன்சிலிங் அடிப்படையில், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.
மனைவியுடன் தகராறு; கணவர் விபரீதம்
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அடுத்த ஆலஹள்ளியை சேர்ந்தவர் மூக்கப்பா, 45; டிரைவர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் மூக்கப்பாவிடம் கோபித்துக் கொண்டு அவர் மனைவி, தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனமுடைந்த மூக்கப்பா கடந்த, 30ல், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
யானைகளால் பயிர்கள் நாசம்
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனுார் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, 7 யானைகள் நேற்று முன்தினம் இரவு மாரச்சந்திரம் கிராமத்துக்குள் புகுந்து, அப்பகுதி விவசாயிகளான ரமேஷ், 49, கோபால், 70 அப்பாசாமி ராவ், 70, ஈரப்பா, 50 ஆகியோரின் மூன்று ஏக்கர் விவசாய தோட்டங்களில் பயிரிட்டிருந்த தக்காளி, சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. நேற்று காலை தங்கள் தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் சேதமான பயிர்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
750 கிலோ குட்கா பறிமுதல்
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை பொன்னேரி பகுதியில், சாலையோர மரத்தடியில் நேற்று முன்தினம் கார் ஒன்று கேட்பாரற்று நின்றிருந்தது. தகவலின்படி நெடுஞ்சாலை துறை ரோந்து போலீசார், சம்பவ இடம் சென்று காரை சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக குட்கா இருந்தது தெரிந்தது. இதுகுறித்து அவர்கள் காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார், 750 கிலோ குட்காவை பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்தி வரப்பட்டதை அறிந்து, குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவர் மற்றும் குட்கா கடத்தியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உலக அமைதி தின நிகழ்ச்சி
தர்மபுரி, செப். 2-
உலக அமைதி தினத்தையொட்டி, தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி, மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜீவா பேசினார். பின், வெள்ளைக்கொடியை கையில் ஏந்தியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அமைதி நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. மேலும், உலகில் எந்த இடத்திலும் போர் வேண்டாம் என்றும் இதில் வலியுறுத்தினர். மாநில செயலாளர் நாகராசன், பொருளாளர் ஜெயக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
கே.ஈச்சம்பாடி தடுப்பணைக்கு
மழை குறைந்ததால் நீர்வரத்து சரிவு
கம்பைநல்லுார், செப். 2-
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கே.ஈச்சம்பாடியில், தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. தென்பெண்ணையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால், நேற்று முன்தினம் மாலை தடுப்பணைக்கு, 11 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் மழை குறைந்ததால் நேற்று காலை நீர்வரத்து, 8,830 கன அடியாக குறைந்தது. இருந்த போதிலும், தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தடுப்பணைக்கு பொதுமக்கள் செல்ல, பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், இருமத்துார் முதல், டி.அம்மாபேட்டை வரையுள்ள தென்பெண்ணையாற்று கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வு செவிலியரை தாக்கி தங்கச்சங்கிலி பறித்தவர் கைது
கிருஷ்ணகிரி, செப். 2-
பர்கூர் அடுத்த மல்லப்பாடியை சேர்ந்தவர் பானுமதி, 65; ஓய்வுபெற்ற செவிலியர். இவரது கணவர் ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகள் திருமணமாகி பெங்களூருவில் வசிக்கிறார். பானுமதி வீட்டில் தனியாக உள்ளார். அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் யாஸ்மின். இவரது தம்பி மசூத்கான், 35; ஆட்டோ டிரைவரான இவர், பெங்களூருவில் வசிக்கிறார். கடந்த, ஆக., 31ல் மசூத்கான், மல்லப்பாடியிலுள்ள யாஸ்மின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் பானுமதி வீட்டிற்கு சென்ற மசூத்கான், கத்தியை காட்டி மிரட்டி, பானுமதியை பலமாக தாக்கியுள்ளார். அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்.
படுகாயமடைந்த பானுமதி, பர்கூர் அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டார். அவருக்கு கழுத்தில், 24 தையல்கள் போடப்பட்டு மேல்சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசுக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பானுமதி புகார்படி, பர்கூர் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய மசூத்கானை நேற்று கைது செய்தனர்.
ஊத்தங்கரையில் 40க்கும்
மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்
ஊத்தங்கரை, செப். 2-
ஊத்தங்கரை நேரு நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆறுமுகம் என்பவரின் வீடு கிரகப்பிர வேசம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங் கேற்று சாப்பிட்ட, 40க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், 20 பேர் அனுமதிக்கப்பட்டனர். பின் மேல் சிகிச்சைக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட வெளியூரை சேர்ந்த பலரும் பாதித்துள்ளனர். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவ ருமே லேசான மயக்கத்துடன் உள்ளதால் அனைவ ரும் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து, ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிந்து, உணவு சமைத்த சமையலர், தண்ணீர் கேன் போட்ட சப்ளையர், உணவு, தண்ணீர் போன்றவற்றின் சேம்பிள்களை சேகரித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.