வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, மின் கட்டணங்களை அடுத்த சில தினங்களில் உயர்த்துவதற்கான பணிகளில்,தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழக மின் வாரியம், மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தி தர கோரிய மனுக்களை, ஆணையத்திடம் ஜூலை 18ல் சமர்ப்பித்தது.
அம்மனுக்கள் தொடர்பாக ஆணையம், ஆக., 16ல் கோவை; 18ல் மதுரை; 22ல் சென்னையில் மக்கள் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியது.அதில் பங்கேற்றவர்கள் மின் கட்டணங்களை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்தனர். மின் கட்டண மனுக்கள் தொடர்பாக ஆக., 24 வரை, 4,500 பேர் கருத்துகள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கு மின் வாரியம் சார்பில் பதில்கள் அளிக்கப்பட்டதுடன், அந்த விபரம் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
![]()
|
இந்த சூழலில், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்காதது தொடர்பாக, சில தொழிற்சாலை நிர்வாகங்கள் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மின் கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால், ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, இம்மாதம் 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால், நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் ஆணையம் மேல்முறையீடு செய்தன.இதை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, மின் கட்டண உயர்வு குறித்து முடிவு எடுக்க விதித்த தடையை விலக்கியது. இதைத் தொடர்ந்து, மின் கட்டணங்களை உயர்த்துவது தொடர்பாக, ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். இதனால், அடுத்த சில தினங்களில் மின் கட்டணங்கள் உயர்த்தப்படுவது உறுதியாகி உள்ளது.