வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : பதிவுத்துறை இணையதளத்தில், சொத்துக்களின் வில்லங்க சான்று விபரங்களை, பொதுமக்கள் இலவசமாக பார்க்கும் வசதி திடீரென முடக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சொத்து வாங்குபவர், விற்பவர், சொத்தின் முந்தைய பரிமாற்றங்களை அறிய, வில்லங்கச் சான்று பெற வேண்டும்.வில்லங்கச் சான்று விபரங்களை, 'ஆன்லைன்' முறையில் இலவசமாக அறியும் வசதியை, 2013ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இந்நிலையில், ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்தி, வில்லங்கச் சான்று பெறும் வசதி, 2019 ஜன., 2ல், அமலுக்கு வந்தது. அப்போது, இலவச ஆன்லைன் சேவை நிறுத்தப்படாது என அறிவிக்கப்பட்டது.ஆனால், பதிவுத்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள சில உயரதிகாரிகள், இந்த சேவையை நிறுத்த அவ்வப்போது முயன்றனர். பதிவுத்துறை ஐ.ஜி.,யாக இருந்தவர்கள் தலையீட்டால், இந்த சேவை காப்பாற்றப்பட்டு வந்தது.இந்நிலையில், சில நாட்களாக பதிவுத்துறை இணையதளத்தில், இலவசமாக வில்லங்க சான்று பெறும் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:
|
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், பதிவுத்துறைக்கு வந்த புதிய அமைச்சர், செயலர், ஐ.ஜி., ஆகியோர் மக்களுக்கான சேவைகள் முறையாக செயல்பட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஆனால், ஐ.ஜி., அலுவலகத்தில் உள்ள சில உயரதிகாரிகள், வில்லங்க விபரங்களை இலவசமாக பார்க்கும் சேவையை, திட்டமிட்டு முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மோசடி விவகாரத்தில் சமீபத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட கூடுதல் ஐ.ஜி.,யின் ஆதரவாளர்கள், தற்போதைய ஐ.ஜி.,க்கும், செயலருக்கும் அவப்பெயர் ஏற்படுத்த, 'சர்வர்' பிரச்னை எனக்கூறி, இலவசசேவையை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.இதனால், புதிதாக சொத்து வாங்குவோர், அது தொடர்பான வில்லங்க விபரங்களை சரிபார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தலையிட்டு, மக்களுக்கான சேவையை மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.