மீஞ்சூர் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை பணிகள் இழுபறி! நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்| Dinamalar

மீஞ்சூர் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை பணிகள் இழுபறி! நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்

Updated : செப் 03, 2022 | Added : செப் 03, 2022 | கருத்துகள் (1) | |
மீஞ்சூர் : நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி நீடிப்பதால், மீஞ்சூர் ரயில்வே மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, 2016ல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், 55 கோடி
  மீஞ்சூர் ரயில்வே மேம்பால இணைப்பு சாலை பணிகள் இழுபறி! நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல்


மீஞ்சூர் : நிலம் கையகப்படுத்துவதில் இழுபறி நீடிப்பதால், மீஞ்சூர் ரயில்வே மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே, 2016ல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், 55 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.இதில், ரயில்வே எல்லையில் பாலம் அமைக்கும் பணிகளை அதன் நிர்வாகம் மேற்கொண்டது. நீண்ட இழுபறிக்கு பின், பாலத்திற்கான பணிகள், 2021ல் முடிந்தன.பாலப் பணிகள் முடிந்த நிலையில், இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் இழுபறி நீடித்து வருகிறது.


latest tamil newsஇணைப்பு சாலை அமையும் பகுதியில், இடையூறாக உள்ள வீடு மற்றும் கடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி அவை அகற்றப்படவேண்டும். அளவீடு பணிகள் செய்ததுடன் இணைப்பு சாலை அமைப்பதற்கான எந்த பணிகளும் அங்கு நடைபெறவில்லை.


70 கிராம மக்கள் தவிப்பு


மீஞ்சூர்- - காட்டூர் சாலையில் உள்ள, 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கல்வி, மருத்துவம், தொழில் என அத்தியாவசிய தேவைகளுக்கு மீஞ்சூர் வந்து செல்கின்றனர். இவர்கள், மூடிக் கிடக்கும் ரயில்வே கேட்டில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.அவசர பயணம் மேற்கொள்வோரும், மருத்துவமனைக்கு செல்வோரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஆபத்தை உணராமல், மூடியிருக்கும் ரயில்வே கேட் இடுக்குகளில் புகுந்து ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.சிலர், ரயில் வருவதைகூட பொருட்படுத்தாமல் செல்கின்றனர். இதனால் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.


அதிகரிக்கும் நெரிசல்


கடந்த பிப்ரவரி மாத கணக்கெடுப்பின்படி, தினமும், 12 ஆயிரம் வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்து சென்று வந்தன.தற்போது காட்டுப்பள்ளி- - மாமல்லபுரம் இடையே சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.முதல் கட்டமாக, காட்டுப்பள்ளி- - தச்சூர் இடையே, 25 கி.மீ.,க்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த பணிகள் நடைபெறும் இடங்களில் பெரும்பாலானவை மீஞ்சூர்- - காட்டூர் சாலையை சுற்றியுள்ள கிராமங்களாகும்.அங்கு நடைபெறும் பாலங்கள் மற்றும் கட்டுமான பணிகளுக்கு இரும்பு தளவாடங்கள், ஜல்லி, மணல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களும், அந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வாகனங்களும் இந்த ரயில்வே கேட்டை கடந்து சென்று வருகின்றன.


latest tamil newsஇதனால், ஆறு மாதங்களுக்கு முன் இருந்த போக்குவரத்தைவிட, மேற்கண்ட ரயில்வே கேட்டை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.வாகன ஓட்டிகளின் சிரமம் மற்றும் பாதுகாப்பு கருதி, மேற்கண்ட பாலத்திற்கான இணைப்பு சாலை பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:இணைப்பு சாலைக்காக, தனியாரிடம் இருந்து, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சில இடங்களில் கோவில் நிலங்கள் உள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். ஹிந்து சமய அறநிலையத் துறையினரிடம் கடிதம் வாயிலாக தெரிவித்து உள்ளோம். விரைவில் உரிய இழப்பீடு வழங்கி, நிலங்கள் கையகப்படுத்தப்படும்.அதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இரண்டு மாதங்களில் அப்பணிகளை முடித்து, இணைப்பு சாலைக்கான பணிகள் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அதிகாரிகள் மெத்தனம்

ரயில்வே மேம்பாலத்திற்கான பணிகள் தொடங்கும்போது, இணைப்பு சாலைக்கான இடங்கள் அளவீடு செய்யப்பட்டன. பாலப் பணிகள் முடிந்துவிட்டன. அதேசமயம், இணைப்பு சாலைக்கான நிலம் கையகப்படுத்தி, அங்கு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில், நெடுஞ்சாலைத் துறை மெத்தனம் காட்டுகிறது.நோட்டீஸ் வழங்கியதிலும் பெயர் விபரங்கள் குளறுபடியாக உள்ளன. சிலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. நில உரிமையாளர்கள் அலைக் கழிக்கப்பட்டு வருகின்றனர். அன்றாடம் அல்லல்படும் மக்களின் இன்னலை தீர்க்க, இதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி, இணைப்பு சாலை பணிகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- டி.ஷேக் அகமது,சமூக ஆர்வலர், மீஞ்சூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X