'பேடிஎம்' அலுவலகத்தில்அமலாக்கத் துறை சோதனை
புதுடில்லி-சீன நாட்டின் கடன் வழங்கும் 'மொபைல் போன்' செயலிகள் மீதான வழக்கு தொடர்பாக 'ரேஸர்பே, பேடிஎம், கேஷ் ப்ரீ' ஆகிய செயலிகளின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியது.

இது குறித்து, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள், மொபைல் போன் செயலி வாயிலாக நம் நாட்டில் உள்ளோருக்கு கடன் வழங்கி, அதிக வட்டி கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் பதிவாகியுள்ள வழக்குகள் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.
இந்த மோசடிகளுக்கு, பணப்பரிவர்த்தனை செயலிகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெங்களூரில் உள்ள ரேஸர்பே, பே டிஎம், கேஷ் ப்ரீ ஆகிய பணப்பரிவர்த்தனை செயலிகளின் அலுவலகங்களில் சோதனை நடத்தி, 17 கோடி ரூபாய் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்தியர்களின் அடையாள ஆவணங்களை போலியாக பயன்படுத்தி அவர்களை தங்கள் நிறுவன இயக்குனர்களாக போலியாக வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு தகவல்மதரசா ஆசிரியர் கைது
ஜம்மு-பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கு, பாதுகாப்பு தொடர்பான தகவல்களை அளித்து வந்ததாக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, மதரசா ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ரகசிய தகவல்களை அளித்து வருவதாக, உளவு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக, ஜம்மு - காஷ்மீர் போலீஸ், ராணுவ உளவு அமைப்பு, ஜம்மு - காஷ்மீர் உளவு அமைப்பு உள்ளிட்டவை இணைந்து விசாரித்து வந்தன.இந்நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் மதப் பள்ளியான மதரசாவில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கண்காணிக்கப்பட்டு வந்த அவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில், அவருடைய பெயர் குவரி அப்துல் வாஹித், 25, என்பதும், மனைவி மற்றும் ஏழு மாத குழந்தையுடன் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.பாகிஸ்தானில் இருந்து செயல்படும், கே.ஜே.எப்., எனப்படும் காஷ்மீர் ஜான்பான்ஸ் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன், சமூக வலைதளம் வாயிலாக இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த அமைப்புக்கு ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு கட்டமைப்புகள் தொடர்பாக தகவல்களை அளித்து வந்துள்ளார்.விசாரணையில் இது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
ரூ.200 கோடி மோசடி வழக்கு; பிரபல நடிகையிடம் விசாரணை
புதுடில்லி-இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் மோசடி குறித்த வழக்கில், பாலிவுட் நடிகை நோரா பதேஹியிடம், டில்லி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

அரசியல் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி, டில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி லீனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் டில்லி திஹார் சிறையில் இருந்தபோது, உடன் இருந்த தொழில் அதிபருக்கு ஜாமின் பெற்றுத் தருவதாகக் கூறி, அவரது மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த வழக்கிலும் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இது குறித்து, டில்லி பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பாலிவுட் நடிகையர் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்கு, சுகேஷ் சந்திரசேகர் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கியது தெரியவந்தது. இது குறித்து, ஜாக்குலின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றொரு நடிகையான நோரா பதேஹியிடம், டில்லி போலீசார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். நேற்றும் அந்த விசாரணை தொடர்ந்தது. சுகேஷ் சந்திரசேகர் விலை உயர்ந்த காரை நோரோ பதேஹிக்கு பரிசாக கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை பதேஹி மறுத்துள்ளார். இது குறித்துடில்லி போலீசார் கூறியதாவது:சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து விலை உயர்ந்த காரை நோரா பதேஹி பரிசாக பெற்றது தொடர்பாக விசாரித்தோம். இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக சேர்ப்பதா அல்லது சாட்சியாக சேர்ப்பதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக நிகழ்வுகள்
மது விற்ற மூதாட்டி கைது
பெண்ணாடம்,-டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் தீபன் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர்.முருகன்குடியில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி மாரியம்மாள், 62, என்பவரை கைது செய்து, 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தடுப்பு காவலில் சாராய வியாபாரிகள் இரண்டு பேர் கைது
கள்ளக்குறிச்சி-கல்வராயன்மலையைச் சேர்ந்த 2 சாராய வியாபாரிகள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி, கல்வராயன்மலைப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சாராயம் கடத்தி வந்த சேராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அஜித், 22; குரும்பாலுார் பூபதி, 32; ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400 லிட்டர் சாராயம் மற்றும் பொலிரோ கார், ேஹாண்டா யூனிகார்ன் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இவர்களது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, இருவரையும் தடுப்புக் காவலில் கைது செய்ய எஸ்.பி., பகலவன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், கலெக்டர் ஷ்ரவன்குமார், சாராயம் கடத்தலில் ஈடுபட்ட அஜித், பூபதி ஆகிய இருவரையும் தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து, கடலுார் மத்திய சிறையில் இருந்த இருவரிடமும் அதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.
பெண் தர மறுத்த தகராறு: 6 பேர் கைது
கள்ளக்குறிச்சி-வாணவரெட்டியில் பெண் தர மறுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரை கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த வாணவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை மனைவி வசந்தி, 42; சிறுமங்களத்தை சேர்ந்த மணிவேல் மகன் மாதேஸ்வரன். இவர், சில தினங்களுக்கு முன் வசந்தியின் பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக கேட்டுள்ளார்.வசந்தி மறுத்ததால், ஆத்திரமடைந்த மாதேஸ்வரன் உட்பட அவரது தரப்பினர் 6 பேர் சேர்ந்து, வசந்தியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். தட்டிக்கேட்ட அங்கமுத்து மகன்கள் சாமிதுரை, சுப்ரமணி, ஆறுமுகம் ஆகிய 3 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் சிறுமங்களத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன், நாராயணன் மகன் சின்ராசு, 25; மண்ணாங்கட்டி மகன் அஜீத், 24; ராமர் மகன் ராமச்சந்திரன், 21; மண்ணாங்கட்டி மகன் பெரியசாமி, ராமர் மகன் ராஜா ஆகிய 6 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, சின்ராசு, அஜீத், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி,-அம்மகளத்துாரில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த அம்மகளத்துாரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி தனலட்சுமி, 45; இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கடந்த 1ம் தேதி தனலட்சுமியை அவரது உறவினர் கந்தசாமி மனைவி தனபாக்கியம் என்பவர் ஆபாசமாக பேசியுள்ளார்.இது குறித்து கேட்டபோது ஏற்பட்ட தகராறில் தனபாக்கியம் மற்றும் அவரது கணவர், மகன் சேர்ந்து தனலட்சுமியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின் பேரில், கந்தசாமி, இவரது மனைவி தனபாக்கியம், மகன் பிரபாகரன், ஆகிய 3 பேர் மீதும் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தண்ணீர் பிடிப்பதில் தகராறு: எட்டு பேர் மீது வழக்கு பதிவு
அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எல்லை கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 38; இவரது மனைவி அன்பரசி. அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 34; இவரது தம்பி மனைவி சித்ரா. இவருக்கும், அன்பரசிக்கும் இடையே நேற்று முன்தினம் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.இதில், இரு தரப்பினரும் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், வெங்கடேசன், ஆனந்தராஜ், அஞ்சலை, ரமேஷ், தமிழரசி, சித்ரா, ராதாகிருஷ்ணன், குணாளன் ஆகிய 8 பேர் மீது எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.