செய்திகள் சில வரிகளில் சேலம்| Dinamalar

செய்திகள் சில வரிகளில் சேலம்

Added : செப் 04, 2022 | |
ஜருகுமலையில் குறை கேட்ட கலெக்டர்பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் ஊராட்சி, ஜருகுமலையில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 90க்கும் மேற்பட்ட மலைக்கிராம மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி, 1965ல் கட்டிய ஓட்டு கட்டடத்தில் செயல்படுகிறது. பழைய கட்டத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்ட, கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜருகுமலை மக்களிடம்

ஜருகுமலையில் குறை கேட்ட கலெக்டர்
பனமரத்துப்பட்டி: குரால்நத்தம் ஊராட்சி, ஜருகுமலையில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. 90க்கும் மேற்பட்ட மலைக்கிராம மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி, 1965ல் கட்டிய ஓட்டு கட்டடத்தில் செயல்படுகிறது. பழைய கட்டத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்ட, கலெக்டர் கார்மேகம் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து ஜருகுமலை மக்களிடம் குறைகளை கேட்டு மனு வாங்கினார். அரசு பள்ளிக்கு விரிவான அடுக்குமாடி கட்டடம் கட்ட, புறம்போக்கு நிலத்தையும் பார்வையிட்டார். பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராஜன், கமிஷனர் சீனிவாசன், பி.டி.ஓ., விஜயலட்சுமி உடனிருந்தனர்.
2 அடுக்கு பஸ் ஸ்டாண்ட் பணி ஆய்வு
சேலம்: அம்மாபேட்டை மண்டலம், 43வது வார்டு, எருமாபாளையம், கிச்சிப்பாளையம், கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு, சுப்ரமணியம் நகர், நல்லா கவுண்டர் காடு, வ.உ.சி., நகர், மூவேந்தர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், வீதி வீதியாக சென்று, மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதி குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, சீர்மிகு நகர திட்டத்தில், பழைய பஸ் ஸ்டாண்டில் நடந்து வரும் இரண்டடுக்கு பஸ் ஸ்டாண்ட், அதற்கு வரும் வழியில் திருமணிமுத்தாற்றின் மீது கட்டப்படும் மேம்பால பணியை பார்வையிட்டார். அப்பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார்.
நீலவேந்தன் நினைவேந்தல்
சேலம்: ஆதித்தமிழர் பேரவை முன்னாள் செயலர் நீலவேந்தன் நினைவேந்தல் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், நிறுவன தலைவர் அதியமான் கூறுகையில், ''தி.மு.க., ஆட்சி குறித்து எதையாவது சொல்லி கலவரத்தை மூட்ட, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சதுர்த்தியை வைத்து அரசியல் செய்கிறார். நிலுவையில் உள்ள, ஜி.எஸ்.டி., தொகையை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும். இல்லையெனில் மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசால் எப்படி செயல்படுத்த முடியும்,'' என்றார்.
மஞ்சள் இருப்பு விபரம் சரிபார்ப்பு
சேலம்: சென்னை, வேளாண் விற்பனை, வணிகத்துறை இயக்குனர் நடராஜன், சேலம் மாவட்டத்தில் அத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். அதன்படி, வாழப்பாடி, துக்கியாம்பாளையத்தில் அமைக்கப்படும் காய்கறி பதனிடும் நிலையத்தை பார்வையிட்டார். தொடர்ந்து ஆத்துார் உழவர் சந்தையில் காய்கறி வரத்து, விலை விபரங்களை, விவசாயி
களிடம் கேட்டறிந்தார். அம்மம்பாளையத்தில் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை பார்வையிட்டார். பின் சேமிப்பு கிடங்கில் உள்ள நெல், மஞ்சள் இருப்பு விபரங்களை சரிபார்த்தார். சேலம் விற்பனை குழு முதுநிலை மேலாளர் கண்ணன், வேளாண் துணை இயக்குனர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு
சேலம்: கன்னங்குறிச்சி, ஆறுமுக ஐயர் தெருவில் பொதுக்கிணறு உள்ளது. அங்கு, 30 முதல், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் உடல் மீட்கப்பட்டது. அவர் யார், தற்கொலை செய்து கொண்டாரா, கொலையா என, கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
கர்ப்பிணிகளுக்கு வினாடி வினா
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாதம் நேற்று கொண்டாப்பட்டது. மாவட்ட திட்ட அலுவலர் பரிமளாதேவி தலைமை வகித்தார். இணையதளம் மூலம், 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து அவசியம் குறித்து, வினாடி, வினா போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற, 5 கர்ப்பிணிக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், கர்ப்பிணி, பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யபிரபா, டவுன் பஞ்சாயத்து தலைவர் பரமேஸ்வரி, பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாய குழும நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு
ஏற்காடு: ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, ஏற்காட்டில் சமூக நலன், மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. வட்டார திட்ட உதவியாளர் சதாம் உசேன் தலைமை வகித்தார். ஏற்காடு போலீஸ் ஸ்டேஷன், சிறப்பு எஸ்.ஐ., குணசேகரன் தொடங்கிவைத்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் பணிபுரியும், 50க்கும் மேற்பட்டோர், ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி, படகு இல்லம், சந்தைப்பேட்டை, ஒண்டிக்கடை ரவுண்டானா வழியே சென்று, மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவு செய்தனர்.
அங்கன்வாடி கட்டுமானப்பணி ஆய்வு
வீரபாண்டி: பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி, பெருமாள் கோவில் பகுதியில், 9.11 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் பேவர் பிளாக் சாலை பணி, வேம்படிதாளத்தில், 10.15 லட்சம் ரூபாயில் கட்டப்படும் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணி அதே பகுதியில் நுண்ணுயிர் உரக்கூடத்தை, சேலம் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், நேற்று ஆய்வு செய்தார். வீரபாண்டி பி.டி.ஓ.,க்கள் அன்புராஜன், சுந்தர்ராஜன் உடனிருந்தனர்.
ரூ.75 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
இடைப்பாடி, செப். 4-
கொங்கணாபுரத்தில் உள்ள, திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. பி.டி., ரகம், 100 கிலோ மூட்டை, 8,750 முதல், 10 ஆயிரத்து, 389 ரூபாய்; கொட்டு ரக மூட்டை, 4,300 முதல், 7,200 ரூபாய் வரை விலைபோனது. 2,500 பருத்தி மூட்டைகள் மூலம், 75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
சுகவனேஸ்வரர் கோவிலில்
இன்று முதல்கால யாக பூஜை
சேலம், செப். 4--
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், வரும், 7ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. நேற்று அங்குரார்பணம், திசா ஹோமம், யாகசாலை நிர்மாணம், பரிவார கலா கர்ஷணம், பரிவார கும்பஸ்தாபனம் உள்ளிட்டவை நடந்தது.
யாகசாலை நிர்மானம் குறித்து சிவாச்சாரியார்கள் கூறுகையில், 'யாக சாலையில் காலபைரவர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு, 200 கலசங்கள் வைக்கப்பட்டன.
குறிப்பாக பரிவார மூலவர், உற்சவர்
கலசத்தில் பாலாலய சக்திகள், அதில் இறக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நாளை(இன்று) மாலை, 4:00 மணிக்கு மேல் முதல்கால யாக பூஜை தொடங்கும்' என்றனர்.
சேலத்தில் 27 பேருக்கு தொற்று
சேலம், செப். 4-
சேலத்தில் நேற்று, 27 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
அதன்படி சேலம் மாநகராட்சியில், 9 பேர், வீரபாண்டி, 2, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
ஒன்றியம், ஓமலுார், காடையாம்பட்டி தலா ஒருவர் என, சேலம் மாவட்டத்தினர், 16 பேர், நாமக்கல், 4, ஈரோடு, கிருஷ்ணகிரி தலா, 3, தர்மபுரி ஒருவர் என, பிற மாவட்டத்தினர், 11 பேருக்கு தொற்று உறுதியானது.
தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
சேலம், செப். 4-
சேலம், செவ்வாய்ப்பேட்டை, ஆச்சி ராமன் தெருவை சேர்ந்தவர் மோதிலால், 74. இவர், நான்கு ரோடு அருகே உள்ள இனிப்பு கடைக்கு, கடந்த, 2ல் சென்றார். அப்போது, அவர் வைத்திருந்த, 40 ஆயிரம் ரூபாயை தவறவிட்டார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
பொன்னம்மாபேட்டை, வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் சின்னசாமி, 33. சேலம் அரசு மருத்துவ கல்லுாரி யின், தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளரான இவர், குழந்தைகளுடன் அன்று மாலை, 5:00 மணிக்கு அதே இனிப்பு கடைக்கு சென்றார். அப்போது கீழே கிடந்த, 40 ஆயிரம் ரூபாயை எடுத்து, அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து ஸ்டேஷனுக்கு சென்று, பணத்தையும் ஒப்படைத்தார். பின் மோதிலாலுக்கு தகவல் தெரிவித்து, அவரிடம் நேற்று, 40 ஆயிரம் ரூபாயை போலீசார் ஒப்படைத்தனர். மேலும் சின்னசாமியின் நேர்மையை, போலீசார் பாராட்டினர்.
மொபைல் கோபுரம் மாயம்
விவசாயி குடும்பம் மீது வழக்கு
சேலம், செப். 4-
சென்னை அடுத்த கல்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழரசன். மொபைல் நிறுவனங்களுக்கு கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்கிறார். சேலம், மன்னார்பாளையத்தில், விவசாயி சுந்தர்ராஜன் நிலத்தை, மாதம், 3,000 ரூபாய் வாடகை பேசி, தனியார் நிறுவன கோபுரம் அமைத்துள்ளார். அதற்கான வாடகை சரிவர வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழரசன் கோபுரத்தை அகற்ற சென்றபோது, கோபுரம், ஜெனரேட்டர், பேட்டரி உள்ளிட்ட எதுவும் இல்லாதததால் அதிர்ச்சியடைந்தார். வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதில், 40 லட்ச ரூபாய் கோபுரத்தை காணவில்லை என, குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, விவசாயி, அவரது மகன்கள் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.
முறைகேடு புகார்:
மாவட்ட அலுவலர் குழு ஆய்வு
ஆத்துார், செப். 4-
தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு புகார் குறித்து, மாவட்ட அலுவலர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆத்துார், பைத்துார் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் மேற்கொள்ளும் விவசாய நிலங்களில் மண் கரை, கல் கரை அமைக்கும் பணிகளில் முறைகேடு நடப்பதாக, கடந்த மாதம், சேலம் கலெக்டர் கார்மேகத்துக்கு, அக்கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். இதையடுத்து, கலெக்டர் உத்தரவுப்படி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மாவட்ட மக்கள் குறைதீர் அலுவலர் காந்திமதி தலைமையில் குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதே திட்டத்தில் குட்டை சீரமைக்கும் பணி, வருகை பதிவு உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'முறைகேடு கண்டறிந்தால் அதன் அறிக்கை, கலெக்டரிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
பூங்கா திறப்பு
இடைப்பாடி, செப். 4-
இடைப்பாடி அருகே அரசிராமணி குள்ளம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் உள்ள பாரதி நகர், குஞ்சாம்
பாளையம் பகுதிகள், தேவூர், சந்தைப்பேட்டையில் சிறுவர் பூங்காக்கள் கட்டப்பட்டன. அந்த மூன்று பூங்காக்களையும், தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி நேற்று திறந்து வைத்தார். டவுன் பஞ்சாயத்து தலைவர் காவேரி, இடைப்பாடி நகராட்சி தலைவர் பாஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X