செய்திகள் சில வரிகளில் ஈரோடு

Added : செப் 04, 2022 | |
Advertisement
ரூ.௧.௩௭ கோடி மதிப்பில் பணிகளுக்கு பூஜை சத்தியமங்கலம், செப். 4-பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடம்பூர் மலை குத்தியாலத்துார் ஊராட்சியில், சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதி கேட்டு, எம்.எல்.ஏ., பண்ணாரியிடம், மக்கள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் இருட்டிபாளையம், ஏலஞ்சி, கரளியம் என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், 1.37 கோடி ரூபாய் மதிப்பில், சாலை வசதி மற்றும் வடிகால்


ரூ.௧.௩௭ கோடி மதிப்பில் பணிகளுக்கு பூஜை
சத்தியமங்கலம், செப். 4-
பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடம்பூர் மலை குத்தியாலத்துார் ஊராட்சியில், சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதி கேட்டு, எம்.எல்.ஏ., பண்ணாரியிடம், மக்கள் மனு அளித்திருந்தனர். இந்நிலையில் இருட்டிபாளையம், ஏலஞ்சி, கரளியம் என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில், 1.37 கோடி ரூபாய் மதிப்பில், சாலை வசதி மற்றும் வடிகால் அமைக்கும் பணியை, கோபி தொகுதி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். முன்னதாக தொன்போஸ்கோ மைதானத்தில், 50க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்தினருக்கு, அதிக சக்தி வாய்ந்த டார்ச் லைட்டுகளை, செங்கோட்டையன் வழங்கினார்.
இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
மொடக்குறிச்சி, செப். 4-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சி சார்பில், அரச்சலுார் சுற்றுவட்டார பகுதியில் வைக்க, 19 சிலைகள் தயார் செய்யப்பட்டன. ஆனால், புதிதாக சிலைகள் வைக்க அனுமதியில்லை என போலீசார் மறுத்து விட்டனர்.
இதனால் சிலைகளை அரச்சலுார், தலவுமலை, நாச்சிவலசு, வடபழனி, குமாரபாளையம் உள்ளிட்ட, 19 இடங்களில் மக்களிடம் கொடுத்து வைத்தனர். அரச்சலுார் போலீசார் சிலைகளை, நேற்று முன்தினம் இரவு எடுத்து எல்.பி.பி., வாய்க்காலில் கரைத்து விட்டதாக தெரிகிறது. இதை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில், அரச்சலுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் அருண்ராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.
சொத்து, வீட்டு வரியை
உயர்த்த எதிர்ப்பு
ஈரோடு, செப். 4-
வரி செலுத்துவோர் சங்க கூட்டம் ஈரோட்டில் நடந்தது. துணை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். பொருளாளர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, 100 சதவீதம் உயர்த்தியது மக்களை பாதிக்கும். தவிர மாநகராட்சி குப்பை வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் வரி, தொழில் வரி, லைசென்ஸ் கட்டணம் என பல வரிகளால் மேலும் பாரமாகிறது.
தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் அறிவித்ததை ஏற்று, ஐந்தாண்டுக்கு சொத்து வரி, வீட்டு வரியை ஒத்தி வைக்க வேண்டும். அல்லது வரி உயர்வு, 5 சதவீதத்துக்கு மேல் உயர்த்தக்கூடாது. வரி உயர்வு நோட்டீஸ் கொடுக்கும்போது எந்த அடிப்படையில் வரி விதிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தி, கணக்கீட்டை வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
பணியின்போது மது அருந்திய
போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
கொடுமுடி, செப். 4-
பணியின்போது மது போதையில் இருந்த, கொடுமுடி போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கொடுமுடி போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்தவர் நல்லசாமி. கோபி சரக பகுதியில் நடந்த, விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணிக்கு சென்றார். கொளப்பலுார் பகுதியில் சீருடையுடன் மது போதையில் இருந்துள்ளார். அப்பகுதி மக்கள் சிறுவலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தந்தனர். இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில், நல்லசாமியை சஸ்பெண்ட் செய்து, எஸ்.பி., சசிமோகன்
உத்தரவிட்டுள்ளார்.
தாளவாடியில்
12 மி.மீ., மழை
ஈரோடு, செப். 4-
தாளவாடியில் நேற்று முன்தினம் அதிகபட்ச மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக தாளவாடியில், ௧௨ மி.மீ., பெய்தது. இதேபோல் பவானிசாகரில், 1.80 மி.மீ., கொடுமுடியில், 8.20 மி.மீ., சென்னிமலையில், 3, மொடக்குறிச்சியில், 7 மி.மீ., பதிவானது.
கோபியில் பெண்
தற்கொலை
கோபி, செப். 4-
கோபியில் துாக்க மாத்திரை சாப்பிட்டு, பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோபி அருகே பெரிய கொடிவேரியை சேர்ந்தவர் சக்திவேல், 40; நான்கு ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக துாக்க மாத்திரை சாப்பிடுவாராம். இதனால் மன வேதனையில் இருந்த அவரின் மணிமேகலை, ௩௩; நேற்று முன்தினம் காலை, கணவர் சாப்பிட வேண்டிய துாக்க மாத்திரைகளை மொத்தமாக தின்றதில் மயங்கினார். சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். புகாரின்படி பங்களாப்புதுார் போலீசார்
விசாரிக்கின்றனர்.
லாரி மோதி விவசாயி பலி

கோபி, செப். 4-
கவுந்தப்பாடி அருகே லாரி மோதியதில், விவசாயி பலியானார்.
கவுந்தப்பாடி அருகே பெருமாபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 37, விவசாயி; ஹீரோ ேஹாண்டா ஸ்பிளெண்டர் பைக்கில், சிறுவலுார் சாலையில் நேற்று காலை சென்றார். முன்னால் சென்ற லாரி திடீரென நின்று பின்னோக்கி வந்ததில், அதன் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்தில் பலியானார். கவுந்தப்பாடி போலீசார் உடலை மீட்டு, கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
கருணாநிதி சிலைக்கு
அமைச்சர் மரியாதை
கோபி, செப். 4-
தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி சிலையை, கோபி அருகே கள்ளிப்பட்டியில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் அடங்கிய குழுவினர், சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது பலருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இனி வரும் நுாறு நாட்களுக்கு, தினமும் சிலைக்கு மாலை அணிவித்து, மக்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
25 பேருக்கு கொரோனா
ஈரோடு, செப். 4-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்து, 253 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று புதிதாக, 25 பேருக்கு தொற்று ஏற்பட்டது. சிகிச்சையில் இருந்த, 36 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 242 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சி.ஐ.டி.யு., ஆண்டு பேரவை கூட்டம்
ஈரோடு, செப். 4-
அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., ஆண்டு பேரவை கூட்டம், ஈரோட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார்.
தரமான உதிரி பாகங்கள் வாங்க வேண்டும். பி.எஸ்.4 ரக பேருந்துகளில் முகப்பு விளக்கு வெளிச்சம் குறைவாக உள்ளதால், தரமான விளக்குகள் பொருத்த வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும். அரசு பஸ்கள், 50 சதவீதம் மழைக்காலங்களில் ஒழுகுவதால், தரமாக சீரமைக்க வேண்டும். மிகைப்பணி ஊதியம் வழங்கும்போது ஒப்பந்தப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றனர். புதிய தலைவராக மாரப்பன், பொது செயலாளராக ஜான்சன் கென்னடி, பொருளாளராக அய்யாசாமி, துணை பொது செயலாளர்களாக பாலகிருஷ்ணன், இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டனர்.
அணைக்கு சரிந்தது நீர்வரத்து
புன்செய்புளியம்பட்டி, செப். 4-
பவானிசாகர் அணைக்கு நேற்று முன்தினம், 9,400 கன அடியாக இருந்த நீர்வரத்து, 5,000 கன அடியாக நேற்று குறைந்தது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டது. பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில், 1,500 கன அடி தண்ணீர், பவானி ஆற்றில் உபரி நீராக, 3,500 கன அடி தண்ணீர் வெ ளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் தொடர்ந்து, ௧௦௨ அடியில் நீடிக்கிறது.
வாழைத்தார், தேங்காய்
ரூ.12.17 லட்சத்துக்கு ஏலம்
கோபி, செப். 4-
கோபியில் வாழைத்தார் மற்றும் தேங்காய், 12.17 லட்சம் ரூபாய்க்கு நேற்று விற்பனையானது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 50 ரூபாய், நேந்திரன், 46 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 630, செவ்வாழை, 740, பச்சைநாடான், 430, ரொபஸ்டா, 350, மொந்தன், 500, ரஸ்த்தாளி, 640, தேன்வாழை, 690 ரூபாய்க்கும் விலைபோனது. வரத்தான, 5,143 வாழைத்தார்களும், 11.52 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், எட்டு ரூபாய் முதல், 15 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 5,848 தேங்காய்களும், 65 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
ரூ.3.௮௦ லட்சத்துக்கு
தேங்காய் விற்பனை
மொடக்குறிச்சி, செப். 4-
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 40 ஆயிரத்து, 391 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 22.90 ரூபாய் முதல், 25.65 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 16 ஆயிரத்து, 944 கிலோ எடையுள்ள தேங்காய், மூன்று லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்துத. மொத்தம், 1,186 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ, 50.50 ரூபாய் முதல், 80.50 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 79 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது.
ஓணம் பண்டிகை எதிரொலி
'நேந்திரன்' அறுவடை தீவிரம்
பவானிசாகர், செப். 4-
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நேந்திரன் ரக வாழை அறுவடை, தீவிரமாகியுள்ளது.
பவானிசாகர் மற்றும் சுற்று வட்டாரத்தில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி நடக்கிறது. இதில், 80 சதவீதம் நேந்திரன் ரகம் மற்றும் கதளி, ஜி-9 ரகம் பயிரிடப்படுகிறது. நேந்திரன் வாழை, கேரளா மார்க்கெட்டை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, நேந்திரன் வாழை அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாரத்துக்கு முன் கிலோ, 35 ரூபாய்க்கு விற்ற நேந்திரன், 45 முதல் 50 ரூபாய் வரை விற்பனை தற்போது செய்யப்படுகிறது. விலை உயர்வால் வாழை விவசாயிகள் உற்சாகம்
அடைந்துள்ளனர்.
பொது இடத்தில் குப்பை;
வீடுகளுக்கு நோட்டீஸ்
ஈரோடு, செப். 4-
ஈரோடு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தின் பின்புறம், மக்கும் குப்பை அதிகளவில் கிடந்தது. மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள், ௩௦ பேர் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சுகாதார ஆய்வாளர் பூபாலன் கூறியதாவது: என்.எம்.எஸ். காம்பவுண்ட் பகுதியில், வீடுகளில் சேகரமாகும் குப்பையை, பொது இடத்தில் மக்கள் கொட்டி செல்கின்றனர். பொது இடத்தில் குப்பை கொட்டும், 200 வீடுகளுக்கு விரைவில் மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நாட்டு சர்க்கரை விலை உயர்வு
ஈரோடு, செப். 4-
சித்தோடு சொசைட்டியில் நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் விலை, சிறிது உயர்ந்தது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு சொசைட்டியில், நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 1,600 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,330 ரூபாய் வரை ஏலம் போனது. இதேபோல் உருண்டை வெல்லம், 2,800 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,200 ரூபாய் முதல், 1,340 ரூபாய்; அச்சு வெல்லம், 700 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,150 ரூபாய் முதல், 1,310 ரூபாய் வரை
விற்பனையானது.
கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை வரத்து குறைந்தது. உருண்டை வெல்லம் விலையில் மாற்றமில்லை. அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 60 ரூபாய் விலை உயர்ந்ததாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
நிழற்கூடத்தில் விஷம்
குடித்து தற்கொலை
பவானி, செப். 4-
பவானி அருகே நிழற்கூடத்தில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டவரால், பரபரப்பு ஏற்பட்டது.
பவானி அருகே மைலம்பாடி ரங்கன் நகர் பஸ் நிறுத்த நிழற்கூடத்தில், ஒருவர் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக, மைலம்பாடி வி.ஏ.ஓ., ராமசாமிக்கு நேற்று தகவல் போனது. சம்பவ இடத்துக்கு சென்ற அவர் தகவலை உறுதி செய்து, பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், 48, என்பதும், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. அந்த இடத்தில் ஒரு பைக்கில் துணி மூட்டைகளும் இருந்தன. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X