ஸ்ரீபெரும்புதூர்: பாதயாத்திரை துவங்குவதற்காக, தமிழகம் வந்துள்ள காங்கிஸ் எம்.பி., ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தந்தை ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ராகுல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை , 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில், 150 நாட்கள், 3,570 கி.மீ., பாதயாத்திரையை இன்று துவக்குகிறார். இதற்காக நேற்று (செப்., 06) ராகுல் சென்னை வந்தார்.

யாத்திரையை துவங்குவதற்கு முன், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவகத்திற்கு இன்று காலை 6:45 மணிக்கு வந்த ராகுல், ராஜிவ் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தார். பின்னர் மவுன அஞ்சலி செலுத்தினார். நினைவகத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டார். ராகுலுடன், தமிழக காங்., தலைவர் அழகிரி, செல்வப்பெருந்தகை, கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் வந்தனர்.

பின், ராஜிவுடன் உயர்நீத்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து புகைப்படம் எடுத்து கொள்கிறார்.ஸ்ரீபெரும்புதுார் வந்த ராகுலுக்கு, காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நாட்டை இழக்க மாட்டேன்

இதன் பின்னர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: என் தந்தையை பிரிவினைவாத வெறுப்பு அரசியலுக்கு இழந்துவிட்டேன். என் நாட்டையும் அப்படி இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வீழ்த்தும். நம்பிக்கை அச்சத்தை தோற்கடிக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.