வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கன்னியாகுமரியில் பாத யாத்திரையை துவங்கும் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட சென்ற அர்ஜூன் சம்பத் கைது செய்வதை கண்டித்த பாஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா, 'எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது, பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் விட்டு, கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் செய்தது, ஆனால் ராகுலுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டச் சென்ற அர்ஜூன் சம்பத்தை கைது செய்தது கண்டிக்கத்தக்கது' என தெரவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இன்று (செப்.,7) பாத யாத்திரை துவக்குகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக கோவையிலிருந்து ரயில் மூலமாக புறப்பட்ட அர்ஜூன் சம்பத்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட போலீசார் நள்ளிரவு கைது செய்தனர். அவரை திண்டுக்கல் நகர வடக்கு போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துச் சென்றனர். அவரது உதவியாளர்கள் அரிகரன், பொன்னுசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டதாக திண்டுக்கல் போலீசார் தெரிவித்தனர்.
அர்ஜூன் சம்பத் கைதை கண்டித்து பா.ஜ., மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்ததாவது: எதிர்க்கட்சியாக இருந்த திமுக, பிரதமருக்கு எதிராக 'கோ பேக் மோடி' என்று கூறி கருப்பு பலூன் விட்டது. ராஜ்பவன் முன் கருப்புக் கொடி ஆர்பாட்டம் செய்தது. ஆனால் ராகுலுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட சென்ற அர்ஜூன் சம்பத்தை நள்ளிரவில் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.