வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் சதவீதம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுதும் ஜூலை 17ல் நடந்தது. அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. நாடு முழுதும் 497 நகரங்களில் 3,570 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின.
தேர்வு எழுதிய 17.64 லட்சம் பேரில், 9.93 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தில் 1.17 லட்சம் பேரும், மஹாராஷ்டிராவில் 1.13 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 82,548 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்த வரை 1,32,167 பேர் தேர்வு எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர். இதன் சதவீதம் 51.3 ஆகும். கடந்த 2020ம் ஆண்டு 57.44 % ஆக இருந்த தேர்ச்சி விகிதம் 2021ம் ஆண்டில் 54.4% ஆக குறைந்தது. இந்த ஆண்டு 51.3 % ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
இதனால், நீட் தேர்ச்சி பட்டியலில் கடந்த ஆண்டு 23வது இடத்தில் இருந்த தமிழகம், இந்த ஆண்டு 28 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
இது தொடர்பாக தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: கொரோனா பாதிப்புகளால் தான் நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு. மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த ஹைடெக் பயிற்சி வழங்குகிறோம் என்றார்.