செய்திகள் சில வரிகளில் தர்மபுரி

Added : செப் 09, 2022 | |
Advertisement
பள்ளியில் பயிற்சி முகாம்ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சண்முகம், பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் நாச்சி, வார்டு கவுன்சிலர் தேவராஜ், உதவி ஆசிரியர்கள்

பள்ளியில் பயிற்சி முகாம்
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சண்முகம், பயிற்சி முகாமை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் நாச்சி, வார்டு கவுன்சிலர் தேவராஜ், உதவி ஆசிரியர்கள் மஞ்சுநாதன், ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தடுப்பணை கட்ட கோரிக்கை
அரூர்: அரூர் அடுத்த நரிப்பள்ளி அருகே, காட்டாறு செல்கிறது. மழைக்காலங்களில் வனப்பகுதிகளில் இருந்து வரும் நீரால், இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது. இதை தடுக்க, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என, கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காட்டாற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டுவதன் மூலம், நரிப்பள்ளி, பெரியப்பட்டி ஆகிய இரண்டு பஞ்.,க்கு உட்பட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள, 1,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, காட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்த்தேக்க தொட்டிக்கு பூமி பூஜை
ஊத்தங்கரை: ஊத்தங்கரை டவுன் பஞ்.,கு உட்பட்ட, 2வது வார்டு, பாரதிபுரத்தில், 15வது நிதிக்குழு மானியத்தில், 8.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. ஊத்தங்கரை டவுன் பஞ்.,தலைவர் அமானுல்லா பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்.
கால்நடைகளுக்கு மலட்டு நீக்க சிகிச்சை
அரூர்: அரூர் அடுத்த ஜம்மணஹள்ளியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சிறப்பு மலட்டு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது. இதில், அல்ட்ரா ஸ்கேன் மெஷின் மூலம், 50 கறவை பசுக்களுக்கு சிறப்பு மலட்டு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், கன்று மேலாண்மை, மடிவீக்க சிகிச்சை மற்றும் மேலாண்மை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
ஏரி வாய்க்கால் துார்வாரல்
கம்பைநல்லுார்: கம்பைநல்லுார் சனத்குமார் நதியிலிருந்து, வகுரப்பம்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால் துார்வாரப்படாமல் இருந்தது. வகுரப்பம்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி ஆகிய இரண்டு கிராமமக்கள் இணைந்து பொக்லைன் மூலம், வாய்க்காலை துார்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, வகுரப்பம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து துவங்கியது.
பட்டதாரி பெண் மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சாமியாபுரம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் மகள் பவித்ரா, 23. இவர் பி.எஸ்.சி., பி.எட்., முடித்துள்ளார். நேற்று முன் தினம் காலை வீட்டிலிருந்து தன் சித்தி வீட்டுக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார்படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கடன் தொல்லையால் விபரீதம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த காமராஜர் நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பரணிதரன், 22. பி.எஸ்.சி., பட்டதாரி. பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சதீஷ்குமாருக்கு தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக பரணிதரன்,
5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். இதை கட்ட முடியாத மனஉளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் பிற்பகல் பெங்களூருவில் இருந்து வீட்டிற்கு வந்தார். மனஉளைச்சலில் இருந்த அவர் தன் அறையில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏ.பள்ளிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வி.சி., செயற்குழு கூட்டம்
அரூர்: தர்மபுரி கிழக்கு மாவட்ட, வி.சி., கட்சியின் செயற்குழு கூட்டம், அரூரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் ஜானகிராமன் தலைமை வகித்தார். இதில், வரும், 15ல் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தேன்கனிக்கோட்டையில் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் செல்வது உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
டவுன் பஞ்.,களில் கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் மற்றும் நாகோஜனஅள்ளி டவுன் பஞ்.,களில் நடக்கும் திட்டப்பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார். ஆய்வின்போது, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) குருராஜன், நாகோஜனஅள்ளி டவுன் பஞ்., தலைவர் தம்பிதுரை, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
ரூ.36 லட்சத்துக்கு கால்நடை விற்பனை
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த சந்தையூரில் நேற்று நடந்த கால்நடைகள் சந்தையில், 100க்கும் மேற்பட்ட ஆடு, பசுமாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. நேற்று மட்டும், 36 லட்சம் ரூபாய் அளவிற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று தேன்கனிக்கோட்டை - ஓசூர் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மேல்கோட்டை அருகே சென்ற மாருதி சென் காரை மடக்கி சோதனையிட்டதில், 2 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த மேல்கோட்டையை சேர்ந்த சையுபுல்லா, 22 என்பவரை கைது செய்து, ரேஷன் அரிசியுடன் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிறுமி உட்பட இருவர் மாயம்
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி, 20. இவர் கடந்த, 6ல் கிருஷ்ணகிரி, கிட்டம்பட்டியிலுள்ள தன் நண்பர் ராஜ்குமாரின் கால்நடை பண்ணைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
* சூளகிரியை சேர்ந்த, 17 வயது சிறுமி, கடந்த, 6ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் புகார்படி சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
கட்டட தொழிலாளி விபரீதம்
கிருஷ்ணகிரி: மத்திகிரி அடுத்த குசினிபாளையத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ், 30; கட்டட தொழிலாளி. குடிப்பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாத விரக்தியில் கடந்த, 7ல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
பழைய இறைச்சி விற்பனை ஜோர்
அரூர்: அரூரில், பஸ் ஸ்டாண்ட், வர்ணதீர்த்தம், திரு.வி.க., நகர், நான்கு ரோடு, பாட்சாபேட்டை, சந்தைமேடு உள்ளிட்ட இடங்களிலுள்ள கடைகளில், ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவைகளின் இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில், விற்பனையாகாத ஆடு, மீன் உள்ளிட்டவைகளின் இறைச்சிகளை பிரிட்ஜில் வைத்திருந்து, அடுத்த நாள் விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிலாளி மீது தாக்குதல்
கிருஷ்ணகிரி: ஓசூர், ஆவலப்பள்ளி சாலை பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார், 38; கூலித்தொழிலாளி. கடந்த, 6ல் இரவு, 8:00 மணியளவில் ஆவலப்பள்ளி சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரை, 3 நபர்கள் இரு ஸ்கூட்டர்களில் பின் தொடர்ந்து வந்து திடீரென வழிமறித்து, கைகளாலும் கற்களாலும் அவரை தாக்கிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த மகேஷ்குமார் கூறிய, அடையாளங்களை வைத்து, ஓசூர் ஹட்கோ போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாணவர்
'நீட்' தேர்வில் சாதனை
கிருஷ்ணகிரி, செப். 9-
'நீட்' தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர், தேசிய அளவில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி, பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரபாகர்; மாவட்ட சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சஞ்சய் கிருஷ், 17. இவர், பத்தாம் வகுப்பு வரை கிருஷ்ணகிரி தனியார் பள்ளியிலும், பிளஸ் 2 சென்னை தனியார் பள்ளியிலும் பயின்றார். நடந்து முடிந்த, 'நீட்' தேர்வில் பங்கேற்ற இவர், 720க்கு, 700 மதிப்பெண் பெற்று, தமிழகத்தில் மூன்றாம் இடமும், தேசிய அளவில், 72வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு, சி.இ.ஓ., மகேஸ்வரி மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர். சரக விளையாட்டு போட்டி: அரசு பள்ளி வெற்றி
பாப்பிரெட்டிப்பட்டி, செப். 9--
பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான குழு விளையாட்டு போட்டிகள், கடத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், 40-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பங்கேற்றன.
இதில், அதிகாரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் கேரம் போட்டியில், அனைத்து வயது பிரிவுகள் மற்றும் இரட்டையர் அனைத்து வயது பிரிவுகளிலும் முதலிடம் பிடித்தனர். ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய மூன்று பிரிவுகளில் பூப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து, தொடர்ந்து, 10 ஆண்டுகளாக அதிகாரப்பட்டி அரசு பள்ளி மாணவ, மாணவியர் சாதனை படைத்து வருகின்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியர் செல்வம், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் ஜேம்ஸ், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், ஆகியோர் வாழ்த்தினர்.
பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல், பிரபு, அருணாவதி, ஆகியோரை பாராட்டினர். கோவில் கும்பாபிஷேக விழா
தர்மபுரி, செப். 9-
தர்மபுரி அடுத்த, விருபாட்சிபுரம் குள்ளனுார் சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்களுக்கு அகண்டதீப மண்டல பூஜை நடக்க உள்ளது.
* பாலக்கோடு அடுத்த புலிகரையிலுள்ள மஹாமாரியம்மன் மற்றும் அக்குமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 6ல் கணபதி பூஜையுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை யாகசாலையில் யாகங்கள் நடந்தன.
பின், யாகசாலையிலிருந்து புனித நீர் கலசம் கோவில் கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பின் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X