செய்திகள் சில வரிகளில் ஈரோடு

Added : செப் 09, 2022 | |
Advertisement
3,113 பேருக்கு காலை சிற்றுண்டிஈரோடு, செப். 9-அரசு துவக்க பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடை நிற்றலை தவிர்க்க, காலை சிற்றுண்டி திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டம் வரும், 15ம் தேதி செயல்பாட்டுக்கு வரவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகரில், 26 பள்ளிகளை சேர்ந்த 2,445 பேர்; தாளவாடியில், 36 பள்ளிகளை


3,113 பேருக்கு காலை சிற்றுண்டி
ஈரோடு, செப். 9-
அரசு துவக்க பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடை நிற்றலை தவிர்க்க, காலை சிற்றுண்டி திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டம் வரும், 15ம் தேதி செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக மாநகரில், 26 பள்ளிகளை சேர்ந்த 2,445 பேர்; தாளவாடியில், 36 பள்ளிகளை சேர்ந்த, 668 பேர் என, 3,113 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எத்தனை மணிக்குள் வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் இருந்து எடுத்து வருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, ஈரோடு, தாளவாடி பகுதியில் ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். வேளாண் பட்டதாரிகளுக்கு தொழில் துவங்க யோசனை
ஈரோடு, செப். 9-
ஈரோடு மாவட்ட வேளாண் துறை மூலம் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 44 பஞ்.,கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இப்பகுதிகளை சேர்ந்த வேளாண் பட்டதாரிகள், அக்ரி கிளினிக், வேளாண் சார்ந்த தொழில் துவங்க அதிகபட்சம் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஆறு பேருக்கு ஆறு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும். பயன் பெற விரும்பும் பயனாளிகள் குறைந்தபட்சம், இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணி செய்பவராக இருக்கக்கூடாது. 21 முதல், 40 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களுடன் வரும், 20க்குள், ஈரோடு, திண்டல், வித்யா நகரில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதான குழாய் உடைப்பால்
குடிநீர் வினியோகம் பாதிப்பு
பவானிசாகர், செப். 9-
பவானிசாகர் அணையிலிருந்து தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில், பத்துக்கும் மேற்பட்ட பஞ்., மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் கீழ் பவானி வாய்க்கால் அருகே, பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக செல்கிறது. பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள்
கூறியதாவது:
பவானிசாகரில் இருந்து பதிக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாய் அடிக்கடி உடைகின்றன. தற்போது உடைந்து ஐந்து நாட்களுக்கு மேலாகியும் சரி செய்யவில்லை. இதனால் குடிநீர் வீணாக, மக்களோ தண்ணீருக்கு தவிக்கின்றனர். மெத்தனம் காட்டாமல் சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு மக்கள் கூறினர்.
குண்டேரிபள்ளத்தில்
௩௦ மி.மீ., மழை
ஈரோடு, செப். 9-
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணியுடன் முடிந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்):
கோபி-3, பவானிசாகர்-1.60, பவானி-2.40, கவுந்தப்பாடி-6, எலந்தகுட்டை மேடு-3.40, அம்மாபேட்டை-5.80, கொடிவேரி-2, வரட்டுபள்ளம்-11.6, குண்டேரிபள்ளம்-௩௦.
மொபைல் வழிப்பறி; 4 பேர் கைது
ஈரோடு, செப். 9-
வாலிபரிடம் மொபைல் போனை பறித்து சென்ற, நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, அசோகபுரம், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 25; மருந்து கடை ஊழியர். நெரிகல்மேடு பகுதியில் நடந்து சென்றபோது, நான்கு பேர் கும்பல், விக்னேஷை வழிமறித்து, 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை பறித்து சென்றனர். அவர் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார், கும்பலை தேடி வந்தனர்.
இது தொடர்பாக அசோகபுரம், பழைய கலைமகள் வீதி பத்மநாபன், 23, சசிகுமார், 24; அசோகபுரம், பவானி மெயின் ரோடு முரளி, 24; நெரிகல்மேடு, அதியமான் நகர் மணிகண்டன், 26, ஆகியோரை கைது செய்தனர். இதில் பத்மநாபன், முரளி, மணிகண்டன் ஆட்டோ டிரைவர்கள். சசி குமார் பெயின்ட் கம்பெனியில் வேலை செய்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.
அத்தப்பூ கோலமிட்டு
ஓணம் கொண்டாட்டம்
ஈரோடு, செப். 9-
ஓணம் பண்டிகையை, கேரள மக்கள் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில் கேரள மக்கள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். ஈரோடு மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான கேரள மக்கள், பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். ஈரோட்டில் இருக்கும் கேரள மக்கள் நேற்று ஓணம் கொண்டாடினர்.
கருங்கல்பாளையம் பகுதியில் வசிக்கும் மலையாளிகள், அதிகாலையிலேயே எழுந்து குளித்து, பாரம்பரிய உடை அணிந்தனர். மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில், தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் பண்டிகை கொண்டாடினர்.
4வது மாடியில் ஏறி மிரட்டிய
44 வயது பெண்ணால் 'பகீர்'
ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி.சாலை பகுதியை சேர்ந்த, 44 வயது பெண், தனியார் கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிகிறார். பெற்றோருடன் வசித்து வருகிறார். குடும்ப பிரச்னையால் நேற்று மாலை, 5:50 மணியளவில் வீட்டின் நான்காவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறினார். 50 அடி உயரத்தில் இருந்து குதிக்க போவதாக மிரட்டல் விடுத்தார். அப்பகுதி மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். பெண்ணிடம் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, பெண்ணை கீழே இறங்க செய்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்
விவசாயியை தாக்கிய
நால்வர் மீது வழக்கு
கோபி: கோபி அருகே அரசூரை சேர்ந்த விவசாயி முருகேசன், 53; இவரின் உறவினர் நாகராஜ், 40, வெள்ளியங்கிரி, 45, சுதா, 38, விஜயலட்சுமி, 38, ஆகியோர், முன் விரோதத்தால் முருகேசனை தகாத வார்த்தை பேசி தாக்கியுள்ளனர். அவர் புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிந்து, நால்வரையும் தேடி வருகின்றனர்.
கோவை டி.ஐ.ஜி., ஆய்வு
அம்மாபேட்டை: பவானி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில், கோவை டி.ஐ.ஜி.,முத்துசாமி, நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர். நிலுவை மனுக்கள் பற்றியும், உரிய விசாரணை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். பதிவான வழக்குகளில் விரைந்து விசாரணை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
22 பேருக்கு கொரோனா
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்து, 205 பேர் சிகிச்சையில் இருந்தனர். நேற்று, 22 பேர் புதிதாக கொரோனாவால் பாதித்தனர். சிகிச்சை பெற்று வந்த, 25 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 202 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மயங்கி கிடந்த முதியவர் மரணம்
ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில், மினி பஸ் ஸ்டாண்ட் அருகே, 65 வயது மதிக்கதக்க ஆண், சில நாட்களுக்கு முன், முகத்தில் அடிபட்டு மயக்க நிலையில் கிடந்தார். மக்கள் அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி பெண் பலி
கவுந்தப்பாடி: கவுந்தப்பாடி அருகே பாலப்பாளையத்தை சேர்ந்தவர் காந்திமதி, 47; நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு மின்சாரம் தாக்கியதில் வீட்டுக்குள் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காந்திமதி மகன் ஹரிபிரசாத், 24, புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
ரேஷன் கடை கட்ட பூஜை
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி முத்துக்கவுண்டன் வலசில், 12 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டும் பணியை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, துணைத்தலைவர் துரைசாமி, செயல் அலுவலர் திருமலைக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டூவீலர் களவாணி கைது
2 பைக்குகள் பறிமுதல்
கோபி, செப். 9-
கோபி அருகே இரு இடங்களில் பைக் களவாடியவரை, போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே யாகூப் வீதியை சேர்ந்தவர் ஜீவித், 32; இவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த ஸ்பிளெண்டர் பைக்கை, மர்ம ஆசாமி நேற்று காலை திருடி சென்றார். அப்பகுதியினர் ஆசாமியை பிடித்து, கோபி போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். விசாரணையில், நம்பியூரை சேர்ந்த சரவணன், 43, என தெரிந்தது. கோபி அருகே கலிங்கியத்தில் வினீத் என்பவரின், ஸ்பிளெண்டர் பைக்கை திருடியதும் தெரிய வந்தது. ஜீவித் மற்றும் வினீத் புகாரின்படி, சரவணனை போலீசார் கைது செய்து, இரு பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
கொடுமுடி யூனியனில்
கலெக்டர் திடீர் ஆய்வு
கொடுமுடி, செப். 9-
கொடுமுடி யூனியன் கொளத்துப்பாளையம் பஞ்.,ல், 4.03 லட்சம் ரூபாயில் வடிகால் பணி, வீடு கட்டும் திட்டத்தில், 7.20 லட்சம் ரூபாயில் கட்டப்படும் மூன்று வீடுகள், நுாலக சீரமைப்பு பணி, பஞ்., அலுவலக கட்டட பணிகளை, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று ஆய்வு
செய்தார்.
பின், இச்சிப்பாளையம் பஞ்., தாமரைப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டத்தில் மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினார். கருத்திப்பாளையம் முதல் தாமரைப்பாளையம் வரை, 36.30 லட்சம் ரூபாயில் நடக்கும் தார்ச்சாலை பணி உட்பட பல பணிகளை ஆய்வு செய்தார். பல்வேறு இடங்களில் மின்னணு ரேஷன் கார்டு உட்பட பல நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ரூ.4.57- லட்சத்துக்கு
நிலக்கடலை விற்பனை
அந்தியூர், செப். 9-
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்
கூடத்தில், காய்ந்த நிலக்கடலை, 129
மூட்டைகள் வரத்தாகி, கிலோ, 61.63 - 69.59 ரூபாய் என, 2.77 லட்சத்திற்கு
விற்பனையானது. பச்சை நிலக்கடலை, 116 மூட்டைகள் வரத்தாகி, கிலோ, 28.19 - 35 ரூபாய் என, 1.80 லட்சத்திற்கு விற்பனையானது. மொத்தம், 4.57 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
மண் புழு உரம்
தயாரிப்பு பயிற்சி
ஈரோடு, செப். 9-
ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தில், மண் புழு உற்பத்தி மற்றும் மண் புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுனர் சரவணகுமார் பயிற்சி அளித்து, பல்வேறு விளக்கங்கள் அளித்தார். மண் புழு உரம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X