தஞ்சாவூர்: நடுரோட்டில் வைத்திலிங்கமும்,சசிகலாவும் சந்தித்த நிலையில், வைத்திலிங்கத்துக்கு பிறந்தநாள் என அவரது ஆதரவாளர்கள் கூறி, அவருக்கு சாக்லெட் கொடுத்து சசிகலா வாழ்த்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, சசிகலா அ.தி.மு.க.,வை தன் வசம் கொண்டு வந்து முதல்வராக வேண்டும் என நினைத்தார். அப்போது, கட்சியினர் அவரை அ.தி.மு.க., பொது செயலாளராக அறிவித்தனர். ஆனால், இதற்கு பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சசிகலா ஆதரவுடன் பழனிசாமி முதல்வராக அறிவிக்கப்பட்டார். இதன் பிறகு சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு வெளியேற்றினால், மீண்டும் அ.தி.மு.க., இணைந்து செயல்படுவதாக அறிவித்து தர்மயுத்தம் நடத்தினர். பின்னர், பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் இணைந்த நிலையில், சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் அ.தி.மு.க.,வை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
தற்போது, கட்சியின் பொது செயலாளராக பழனிசாமி, வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், இதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக வைத்திலிங்கம் உள்ளார்.
இந்நிலையில், பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என சசிகலா, தினகரனை மீண்டும் அ.தி.மு.க.,விற்கு அழைப்பது தொடர்பாக பேசி வருவதால், விரைவில் சசிகலாவுடன் பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் இணைந்து செயல்பட உள்ளதாக பேசபட்டு வருகிறது.
இதை உறுதி செய்யும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவாரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக, வைத்திலிங்கம் சென்று விட்டு மீண்டும் ஒரத்தநாட்டிற்கு தனது காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி காரில் திரும்பி வந்துக்கொண்டிருந்த சசிகலாவும், ஓவல்குடி பகுதியில் இருவரும் சந்தித்து கொண்டனர்.
அப்போது வைத்திலிங்கம் ஆதரவாளர் ஒருவர் அண்ணனுக்கு இன்று பிறந்தநாள் என கூறியதும், சசிகலா தனது காரில் இருந்து சாக்லெட்டை எடுத்து வைத்திலிங்கத்திற்கு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், இருவரும் சுமார் பத்து நிமிடம் கட்சியில் நடப்பது தொடர்பாக பேசிக்கொண்டு இருந்து விட்டு இருவரும் புறப்பட்டு சென்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement