புதுடில்லி:உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின், நிபந்தனை 'ஜாமின்' அளிக்கப்பட்டுள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு 2020ல், ஹத்ரஸ் என்ற இடத்தில், ஒரு சிறுமி சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். கேரளாவைச் சேர்ந்த இணையதள பத்திரிகையாளர் சித்திக் கப்பன், இது குறித்து தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு வந்தார்.
![]()
|
இது தொடர்பாக செய்தி சேகரிக்க, அவர் ஹத்ரஸ் சென்றபோது, உ.பி., போலீசார் அவரை கைது செய்தனர். 'ஹத்ரசில் இரு சமூகத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சியில், சித்திக் கப்பன் ஈடுபட்டார். இதற்காகவே அவர் ஹத்ரஸ் செல்ல முயற்சித்தார். பயங்கரவாத அமைப்புடன் இவருக்கு தொடர்பு உள்ளது' என, போலீசார் தெரிவித்தனர். இவரது ஜாமின் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
இதையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, உ.பி., போலீசார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பத்திரிகையாளருக்கு ஜாமின் அளிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டபோது.
அவரிடமிருந்து வெடிபொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார்.எனவே, அவருக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்படுகிறது. ஆறு வாரங்களுக்கு, அவர் புதுடில்லியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.அதற்கு பின், கேரளாவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.