சென்னை:தமிழகத்தில் மின் கட்டணத்தை 34 சதவீதம் உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டணங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. கட்டண உயர்வால் மட்டும், மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு கூடுதலாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.

தமிழகத்தில் மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.
ரூ.65 ஆயிரம் கோடி
மின் கட்டணம், அரசு மானியம் வாயிலாக, மின் வாரியத்திற்கு ஆண்டுக்கு சராசரியாக, 65 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. மின் கொள்முதல், ஊழியர்கள் சம்பளம், வட்டி போன்றவற்றுக்கு, 77 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது.இதனால், ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்து இழப்பை சந்தித்து வரும் மின் வாரியம், புதிய திட்டங்களுக்காக மத்திய அரசின் நிதி நிறுவனங்கள், வங்கிகளிடம் கடன் வாங்குகிறது.
நிதி நெருக்கடி
ஆனால், தேர்தல் ஆதாயத்திற்காக பல ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அளவுக்கு அதிகமான நஷ்டத்தை தாங்க முடியாமல், ஒழுங்குமுறை ஆணையமே முன்வந்து, 2014ல், 15 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியது. அதன்பின், எந்த ஆட்சியிலும் கட்டணம் உயர்த்தப்படாததால், மின் வாரியத்தின் கடன் 1.59 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து, வாரியம் கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடியது.
எனவே, மின் பயன்பாடு மற்றும் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தக் கோரி, ஆணையத்திடம் ஜூலை 18ல் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இது தொடர்பாக, ஆக., 16ல் கோவை; 18ல் மதுரை; 22ல் சென்னை என, மூன்று இடங்களில் மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை, ஆணையம் நடத்தியது.

அறிவிப்பு
அதனடிப்படையில் ஆணையம், புதிய மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணம், நேற்று முதல் அமலுக்கு வந்து உள்ளது. வீடுகள், தொழிற்சாலைகளுக்கான மின் பயன்பாட்டு கட்டணம் மட்டுமின்றி, புதிய மின் இணைப்புக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், மின் வாரியத்திற்கு மாதம் கூடுதலாக சராசரியாக 1,250 கோடி ரூபாய் என, ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் என்ற நடைமுறை தொடரும்; அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.மேலும், வரும் 2026ம் ஆண்டு வரை, ஆண்டுக்கு தலா 6 சதவீதம் மின் கட்டணங்களை உயர்த்திக் கொள்ளலாம் என, மின் வாரியத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
தாழ்வழுத்த பிரிவில் எவ்வளவு?
தொழில் நிறுவனங்கள்
* தாழ்வழுத்த பிரிவில் வீடுகள், கடைகள், சிறிய தொழில் நிறுவனங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில், 'மோட்டார் பம்ப், லிப்ட்' போன்றவற்றை உள்ளடக்கிய பொது பயன்பாட்டிற்கு வீட்டுப் பிரிவில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஅதன்படி, 1 யூனிட்டிற்கு 8 ரூபாயும்; நிரந்தர கட்டணமாக மாதம் 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
* ரயில்வே குடியிருப்பு, போலீஸ் குடியிருப்பு போன்ற அரசு குடியிருப்புகளுக்கு யூனிட் 4.60 ரூபாயாக உள்ள கட்டணம், 8 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது
* தெரு விளக்கு, குடிநீர் சப்ளை செய்யும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு யூனிட் 6.35 ரூபாயாக இருந்த கட்டணம், 8 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
* பொது வழிபாட்டு தலங்களுக்கு பூஜ்ஜியம் முதல் 120 யூனிட் வரை, யூனிட்டிற்கு 5.75 ரூபாய் கட்டணம். அதில், 2.90 ரூபாய் அரசு மானியம்; மீதியை செலுத்த வேண்டும். 120க்கு மேல் யூனிட்டிற்கு 5.75 ரூபாய் கட்டணம் என இருந்தது. தற்போது, பூஜ்ஜியம் முதல் 120 யூனிட் வரை 5.75 ரூபாய். அதற்கு மேல் யூனிட்டிற்கு 7 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. 120 யூனிட் கீழ் வரை ஏற்கனவே வழங்கும் மானியம் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது
* குறு, சிறு, வேளாண் சார்ந்த தொழில்களுக்கு, 500 யூனிட் வரை யூனிட்டிற்கு 4 ரூபாயும்; 500 யூனிட்டிற்கு மேல் 4.60 ரூபாயும் கட்டணம் உள்ளது. தற்போது, 500 யூனிட் வரை 4.50 ரூபாய்; அதற்கு மேல் யூனிட்டிற்கு, 6.50 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது
* வணிக நிறுவனங்களுக்கு, 100 யூனிட் வரை 5 ரூபாயாகவும்; அதற்கு மேல் யூனிட், 8.05 ரூபாயாகவும் உள்ளது. தற்போது, 100 யூனிட் வரை 6 ரூபாய்; அதற்கு மேல் கிலோ வாட் அடிப்படையில், யூனிட் 9.50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஒவ்வொரு பிரிவிலும் மின் பயன்பாட்டு கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும் நிலைக் கட்டணங்களும், கிலோ வாட்டிற்கு ஏற்ப உயர்த்தப்பட்டு உள்ளன. வீடுகளுக்கு இது வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.***

புதிய கட்டணம்
பூஜ்ஜியம் முதல் 400 யூனிட் வரை - 1 யூனிட்டிற்கு 4.50 ரூபாய்
401 - 500 வரை - 1 யூனிட் 6 ரூபாய்
501 - 600 வரை - யூனிட் 8 ரூபாய்
601 - 800 வரை - யூனிட் 9 ரூபாய்
801 - 1,000 வரை - யூனிட் 10 ரூபாய்
1,001க்கு மேல் - யூனிட் 11 ரூபாய்
இதில், பூஜ்ஜியம் முதல் 400 யூனிட் வரையான பிரிவில் முதல் 100 யூனிட் இலவசம். 101 - 200 வரை அரசு மானியம் 2.25 ரூபாய். மீதி 1 யூனிட் 2.25 ரூபாய்; 501க்கு மேல் பிரிவில் 100 யூனிட் மட்டும் இலவசம்.
உயரழுத்த பிரிவிற்கு எவ்வளவு
உயரழுத்த பிரிவில் மிகப் பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ரயில்வே, அரசு கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்றவை இடம் பெறுகின்றன.
* வாகன தயாரிப்பு, ஜவுளி, தேயிலை தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றுக்கு, 1 யூனிட் மின் கட்டணம் 6.35 ரூபாய். இதனுடன், 'டிமாண்ட் சார்ஜ்' கட்டணம், 1 கிலோ வாட்டிற்கு மாதம் 350 ரூபாயாக உள்ளது. நேற்று முதல் இந்த கட்டணங்கள் முறையே யூனிட்டிற்கு 6.75 ரூபாய்; 550 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளன
* அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகள், ரயில்வேக்கு 1 யூனிட் 6.35 ரூபாயும்; டிமாண்ட் சார்ஜ், மாதம் 1 கிலோ வாட்டிற்கு 350 ரூபாயாகவும் உள்ளது. இனி யூனிட்டிற்கு 7 ரூபாயாகவும்; டிமாண்ட் சார்ஜ் 550 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன
* தனியார் கல்வி நிறுவனங்கள், விடுதிகளுக்கு 1 யூனிட் 6.35 ரூபாயும்; டிமாண்ட் சார்ஜ் 350 ரூபாயும் உள்ளது. தற்போது யூனிட் 7.50 ரூபாயாகவும்; டிமாண்ட் சார்ஜ் 550 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது
* வணிக வளாகம், பெரிய ஹோட்டல்கள் போன்றவற்றிற்கு, 1 யூனிட் 8 ரூபாயாகவும்; டிமாண்ட் சார்ஜ் 350 ரூபாயாகவும் உள்ளது. இந்த கட்டணங்கள் முறையே தற்போது 8.50 ரூபாய்; 550 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளன
* கட்டுமானம் உள்ளிட்ட தற்காலிக மின் இணைப்பிற்கு, 1 யூனிட் 11 ரூபாய்; டிமாண்ட் சார்ஜ் 350 ரூபாயாக உள்ளது. இந்த கட்டணங்கள் முறையே தற்போது 12 ரூபாய் மற்றும் 550 ரூபாயாக உயர்ந்துள்ளன.
வீட்டுப் பிரிவுக்கான பழைய கட்டணம்
*முதல் பிரிவில், பூஜ்ஜியம் முதல் 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தினால், 1 யூனிட்டுக்கு 2.50 ரூபாய். இந்த கட்டணத்தில், யூனிட்டுக்கு 1 ரூபாயை அரசு மானியமாக வழங்குகிறது. எனவே, முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். மீதியுள்ள 100 யூனிட்டிற்கு அரசு மானியம் போக, யூனிட்டிற்கு 1.50 ரூபாய் கட்டணம்
* இரண்டாவது பிரிவில், 200 முதல் 500 யூனிட் வரை. அதில், முதல் ௧௦௦ யூனிட் இலவசம். 101ல் இருந்து, 200 யூனிட் வரை யூனிட்டிற்கு 2.50 ரூபாய்; 201ல் இருந்து, 500 வரை யூனிட்டிற்கு 3 ரூபாய் கட்டணம். அதில், 101 - 200 வரை யூனிட்டிற்கு 50 காசு மட்டும் அரசு மானியம் தருகிறது
* மூன்றாவது பிரிவில், 500 யூனிட் மேல் பயன்படுத்தும் வீடுகள் அடங்கும். அதில், முதல் 100 யூனிட் இலவசம். 101 - 200 வரை யூனிட்டிற்கு 3.50 ரூபாய்; 201 - 500 வரை யூனிட்டிற்கு 4.60 ரூபாய். 500க்கு மேல் யூனிட்டிற்கு 6.60 ரூபாய்.
குடிசை, விவசாயம், கைத்தறி மின்சார மானியம் தொடரும்
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், நேற்று முதல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், மின் வாரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
* தமிழகத்தில் உள்ள 2.37 கோடி வீட்டு நுகர்வோரில், ஒரு கோடி பேருக்கு மின் கட்டண உயர்வு இல்லை
* அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரமும், குடிசை வீடுகளுக்கு முழு இலவச மின்சாரமும் வழங்கப்படும்
* குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பிரிவுகளுக்கு, மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
* இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின் கட்டணம் 55 ரூபாய் உயர்ந்துள்ளது. 300 யூனிட் வரை 145 ரூபாயும்; 400 யூனிட் வரை 295 ரூபாயும்; 500 யூனிட் வரை, 595 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது
* மக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், வணிக ரீதியில் இயங்காத நுாலகத்திற்கான மின் கட்டணத்தை, 30 சதவீதம் குறைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது

* விசைத்தறி நுகர்வோர்களுக்கு 750 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். அதற்கு மேல் யூனிட்டிற்கு, 70 காசு மட்டுமே உயர்ந்துஉள்ளது
* தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு 50 கிலோ வாட் வரை நிலைக் கட்டணம் மாதம்
ஒன்றுக்கு, 1 கிலோ வாட்டிற்கு 100 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது
* தமிழக அரசின் மானியம் ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது
டாக்டர்கள், வழக்கறிஞர் போன்றோர் தங்கள் வீட்டில் அமைத்துள்ள அலுவலகத்திற்கு, 200 சதுர அடி வரை மட்டும், வீட்டுப் பிரிவுக்கான மின் கட்டணம் வசூலிக்கப்படும்.