சி.எம்.டி.ஏ.,வில் 434 கோப்புகள் தேக்கத்தால் வருவாய்...பாதிப்பு!:ஒற்றைச் சாளர முறையால் முன்னேற்றம் இல்லை; ஒப்புதல் வழங்கும் அதிகாரம் மாற்றத்தால் சிக்கல்

Added : செப் 12, 2022 | |
Advertisement
சென்னை பெருநகரில், விரைவாக திட்ட அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறை துவங்கிய நிலையில், 434 திட்ட அனுமதி கோப்புகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், பல்வேறு பிரிவுகளில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக, நகரமைப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒற்றைச் சாளர முறை கட்டட அனுமதியில், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.கட்டட அனுமதி
 சி.எம்.டி.ஏ.,வில் 434 கோப்புகள் தேக்கத்தால் வருவாய்...பாதிப்பு!:ஒற்றைச் சாளர முறையால் முன்னேற்றம் இல்லை; ஒப்புதல் வழங்கும் அதிகாரம் மாற்றத்தால் சிக்கல்

சென்னை பெருநகரில், விரைவாக திட்ட அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறை துவங்கிய நிலையில், 434 திட்ட அனுமதி கோப்புகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், பல்வேறு பிரிவுகளில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக, நகரமைப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒற்றைச் சாளர முறை கட்டட அனுமதியில், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

கட்டட அனுமதி பணிகளில் சீரான அணுகுமுறை ஏற்பட, 2019ல் பொது கட்டட விதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த விதிகளின் அடிப்படையிலேயே புதிய கட்டுமான திட்டங்கள், மனைப் பிரிவு திட்டங்கள், நில வகைப்பாடு மாற்றங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்படும்.
பொது கட்டட விதிகள் அமலுக்கு வந்த பின்னும், கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், விண்ணப்பித்ததில் இருந்து, 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி வழங்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதற்காக, ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டத்தை, சி.எம்.டி.ஏ., உருவாக்கியது. இத்திட்டம், மே 10 முதல் அமலுக்கு வந்ததில் இருந்து தற்போது வரை, கட்டட அனுமதியில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.


கோப்பு தேக்கம்


ஒற்றைச் சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் துவங்கிய நிலையில், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் மீதான பரிசீலனையும் ஆன்லைன் முறையிலேயே மேற்கொள்ளப்படுகிறது. இதில், தற்போதைய நிலவரப்படி, அடுக்குமாடி கட்டடங்கள் தொடர்பாக, 309 கோப்புகள் தேக்கமடைந்துள்ளன. மனைப் பிரிவு அனுமதி தொடர்பாக, 125 கோப்புகள் தேக்கமடைந்துள்ளன.இதில், சி.எம்.டி.ஏ., நிர்வாக நடைமுறை காரணமாகவும், விண்ணப்பதாரர் தரப்பில் கூடுதல் விபரங்கள் தர வேண்டியதன் காரணமாகவும் கோப்புகள் தேக்கமடைந்துள்ளன.


வருவாய் பாதிப்பு


பொதுவாக புதிய கட்டுமான திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, பதிவு மற்றும் பரிசீலனை கட்டணங்கள் செலுத்தப்படும். பரிசீலனை முடிந்த நிலையில், என்னென்ன பிரிவுகளில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படும்.இதன் அடிப்படையிலேயே உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம், வளர்ச்சி கட்டணம், காப்புத் தொகை, எப்.எஸ்.ஐ., கட்டணம் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் செலுத்துவர். இக்கட்டணங்கள் அரசின் கணக்கில் வருவாயாக வரவு வைக்கப்பட வேண்டும்.
தற்போது நிலுவையில் உள்ள கோப்புகளில் ஒவ்வொன்றும், குறைந்தபட்சம் ௧ லட்சம் சதுர அடி அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுமான திட்டங்களாக உள்ளன.இவற்றுக்கு அனுமதி தாமதமாவதால், கட்டட அனுமதி தொடர்பாக அரசுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், இந்த திட்டங்களில் வீடு வாங்க முன்வந்துள்ள மக்களின் முதலீடும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


தீர்வு என்ன?

இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

தற்போது நிலுவையில் உள்ள 434 கோப்புகளில் பெரும்பாலானவை, ஒப்புதல் வழங்க ஏற்ற நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.முன்பு எப்போதும் இல்லாத வகையில், இத்திட்டங்கள் குறித்த விபரங்களை சி.எம்.டி.ஏ., தற்போது தான் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இருப்பினும், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் தனக்குள்ள அதிகாரத்தை சுதந்திரமாக
பயன்படுத்த முன்வந்தால், நிலுவையில் உள்ள கோப்புகள் உடனே 'பைசல்' ஆகும்.மேலும், உரிய இணைப்பு ஆவணங்கள் இல்லாத திட்டங்களின் விண்ணப்பங்களை, பதிவு நிலையிலேயே தவிர்க்க இணையதளத்தில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். அப்போது தான், இதற்கு தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


நடைமுறை சிக்கல் என்ன?


இது குறித்து கட்டுமானத் துறையினர் கூறியதாவது:சி.எம்.டி.ஏ.,வில் சில ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட அதிகார பகிர்வு அடிப்படையில், 10 ஆயிரத்து 763 சதுர அடி வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு, துணை திட்ட அதிகாரிகளே ஒப்புதல் வழங்கலாம். இதற்கு மேல், 53 ஆயிரத்து 819 சதுர அடி வரையிலான கட்டுமான திட்டங்களுக்கு, தலைமை திட்ட அதிகாரிகள் நிலையில் ஒப்புதல் வழங்கலாம்.
இதற்கு மேற்பட்ட பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு, உறுப்பினர் செயலர்
நிலையில் ஒப்புதல் வழங்கலாம் என, அதிகார மாற்றம் செய்யப்பட்டது.இதில், பெரிய
அளவிலான கட்டுமான திட்டங்களுக்கு அரசின் ஒப்புதல் வழங்கும் அதிகாரம், தற்போது சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.உலக வங்கி பிரதிநிதிகள் ஆய்வு


சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமைத் திட்டம் காலாவதியாகும் நிலையில், மூன்றாவது முழுமைத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதற்கான கலந்தாலோசகர் தேர்வு முடிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முழுமைத் திட்டத்தில் துறை வாரியாக என்னென்ன திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பாக கலந்தாலோசனை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் போக்குவரத்து சார்ந்த திட்டங்களை சேர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நடந்தது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக, மூன்றாவது முழுமைத் திட்டத்தில் இடம் பெற வேண்டிய விஷயங்கள் குறித்த கலந்தாலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.

இதில், உலக வங்கி பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் சபையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டமான யு.என்.இ.பி.,யின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இவர்கள் அளித்த பல்வேறு பரிந்துரைகள் அடிப்படையில், முழுமைத் திட்டத்தின் வடிவம் அமையும் என சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X