தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை பிறந்த நாள் ( செப்.,12)

Added : செப் 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை தமிழர்கள் தமது தொன்மைக்கான சான்றுகளாக எடுத்து முன்வைக்கும் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்து பதிப்பாக வெளியிட்ட பெருமை ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் ஆகியோரையே சாரும். இவர்களில், சி.வை.தாமோதரம் பிள்ளை 'பதிப்புத்துறையின் முன்னோடி' என்று புகழ்ந்துரைக்கப்பட்டார். தமிழ்ப்பதிப்புத்துறை
 தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை பிறந்த நாள் ( செப்.,12)

தமிழ்ப் பதிப்பு முன்னோடி சி.வை. தாமோதரம்பிள்ளை தமிழர்கள் தமது தொன்மைக்கான சான்றுகளாக எடுத்து முன்வைக்கும் இலக்கியங்களை அச்சுக்குக் கொண்டுவந்து பதிப்பாக வெளியிட்ட பெருமை ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் ஆகியோரையே சாரும். இவர்களில், சி.வை.தாமோதரம் பிள்ளை 'பதிப்புத்துறையின் முன்னோடி' என்று புகழ்ந்துரைக்கப்பட்டார்.

தமிழ்ப்பதிப்புத்துறை இன்றைய காலத்தில் பல காத தூரம் விரைவுப் பாய்ச்சலில் முன்னேறி இருக்கின்றது. ஆனாலும் பல தசாப்தங்களுக்கு முன்னர் நிலைமை அப்படியிருக்கவில்லை. சி.வை.தாமோதரம் பிள்ளை உள்ளிட்டோரால், முன்னெடுக்கப்பட்ட பதிப்பு முயற்சிகளால் தமிழ் கூறும் நல்லுலகம் தனது அரும் பெரும் செல்வங்களை மீண்டும் கண்டடைந்து கொண்டது.

யாழ்ப்பாணத்தில் சிறுப்பிட்டி என்ற ஊரில் 1832 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த சி.வை.தாமோதரம்பிள்ளை, வட்டுக்கோட்டை செமினறி பாடசாலையில் கல்வி கற்றார். அதேவேளை, சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயரிடம் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கண நூல்களை ஐயம் திரிபறக் கற்றுக் கொண்டார். இவருக்கு கணிதம், தத்துவம், வானவியல், அறிவியல் ஆகிய பாடங்களைக் கற்பித்த பெருமையை வட்டுக்கோட்டைக் கல்லூரி தனதாக்கிக் கொண்டது.
இந்த நிலையில், 1857 ஆம் ஆண்டு சென்னையில், மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

அன்றைய காலத்தில் கடல் கடந்து இந்தியா சென்ற சி.வை.தாமோதரம் பிள்ளை, அந்தப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இளங்கலைமானிப் பட்டப்படிப்பில் இணைந்ததோடு, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டதாரியானார். மேலும் சட்டக்கல்வியையும் பெற்று, வழக்கறிஞராகவும் ஆனார்.

ஆசிரியப் பணி, வழக்கறிஞர் பணி மற்றும் நீதிமன்றப்பணி ஆகிய கடமைகளை செவ்வனே ஆற்றிய சி.வை.தாமோதரம் பிள்ளை, 'உதய தாரகை', 'தினவர்த்தமானி' ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் இயங்கினார்.

நீதிநெறி விளக்கம், திருத்தணிகைப் புராணம், கலித்தொகை, சூளாமணி, ஆதியாகம கீர்த்தனம் முதலிய தமிழ் இலக்கிய நூல்கள் இவரால் பதிப்புப் பெற்றன. மேலும், தொல்காப்பியம் - சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, வீரசோழியம், இறையனார் அகப்பொருள், தொல்காப்பியம் - பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை, இலக்கண விளக்கம், தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியர் உரை முதலிய இலக்கண நூல்களையும், சி.வை.தாமோதரம் பிள்ளை ஆராய்ந்து பதிப்பித்தார்.

“தமிழ்நாடு முழுவதும் உள்ள தொல்காப்பியப் பிரதிகள் மிகச் சிலவே. அவை யாவும் நான் தேடிக் கண்டவரை சிதிமலடைந்து இருந்தது, இன்னும் சில ஆண்டுகளுக்குள் அழிந்துவிடுமென அஞ்சியே, பயனுடைய வகையில் அச்சிடலானேன்” என்று அவர் தனது பதிப்புப் பணி ஆரம்பித்தமை குறித்து தெரிவித்தார்.

முற்காலத்தில் இலக்கியங்கள் பனையோலைகளிலேயே எழுதப்பட்டு வந்தன. சி.வை.தாமோதரம் பிள்ளை அவற்றைத் தேடிக் கண்டெடுத்து, அவற்றை ஆராய்ச்சி செய்து செம்மையான பதிப்புகளை வெளியிடுவதற்கு பெரிதும் சிரமப்பட்டார். அதனை அவரது பின்வரும் வரிகள் தெரிவிக்கின்றன.

“ஏடு எடுக்கும் போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஒன்றைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலுந் தலையுமின்றி நாலா புறமும் சிதிலமடைந்து உள்ளது. பழைய சுவடிகள் யாவும் அழிந்து போகின்றன. எத்தனையோ அரிய நூல்கள் காலப்போக்கில் அழிகின்றன. சீமான்களே! இவ்வாறு இறந்தொழியும் நூல்களில் உங்களுக்கு சற்றாவது கிருபை பிறக்கவில்லையா? தமிழ் மாது நும் தாயல்லவா? இவள் அழிய நமக்கென்ன? என்று வாளாவிருக்கின்றீர்களே! தேசாபிமானம், பாஷாபிமானம் என்று இல்லாதவர் பெருமையும் பெருமையா? இதனைத் தயை கூர்ந்து சிந்திப்பீர்களாக!”

“சொத்தைச் சேர்த்துவிடலாம், எழுத்தைச் சேர்ப்பது எளிதல்ல.

மண்ணை அளந்து வரப்புகள் வகுத்துவிடலாம். பொன்னைப் போன்ற எழுத்துகளுக்கு அணைகட்டிப் பார்ப்பது முடியாத காரியம். கடுமையான உழைப்பு மட்டும் போதாது. ஆண்டவன் அருளும் இருந்தால் தான் அடுத்த ஓலை முன் ஓலைக்கு உண்மையாகவே அடுத்த ஓலையாக இருக்கும். இடம் பெயர்ந்து இருந்தால் இலக்கியம் உயிர் புரண்டு நிற்கும்”
தமிழ் மொழியும் இலக்கியமும் வாழ்வதற்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்து, தமிழியலாய்வில் பதிப்பு என்ற தனித் துறையையே தொடங்கி வைத்த பெருமை சி.வை.தாமோதரம் பிள்ளைக்கே உரியது.

தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதற்காக, தனது சொந்தப் பணத்தையும் அவர் செலவிட்டிருந்தார். பிறரிடம் கடன் வாங்கியும், பல தமிழ் நூல்களை அச்சேற்றிய கதைகளும் உண்டு.
தனது பதிப்பில் பிழை கண்டு பிடித்தவர்களைப் பாராட்டி, அவர்களுக்கு பரிசும் அளித்து ஊக்கப்படுத்திய சி.வை.தாமோதரம் பிள்ளை, அடுத்த திருத்திய பதிப்பில் அந்தப் பிழையை திருத்தியும் வெளியிட்டிருந்தார். தமிழ்ப்பதிப்புப் பணியின் பிதமகர் என்றே தாமோதரம் பிள்ளையைச் சொல்லி விடலாம். “இருபதாம் நூற்றாண்டின் தமிழிலக்கிய வரலாற்றில் உ.வே.சாமிநாதைய்யர், சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகிய இருவரும் போற்றப்படுவதற்கான காரணம் அவர்கள் பதிப்பித்த பழந்தமிழ் நூல்கள் அனைத்திந்திய வரலாற்றுப் பின்புலத்தில் முக்கியமானவையாக அமைவதேயாகும்” என காலஞ்சென்ற பேராசிரியர் கா. சிவத்தம்பி இவர் குறித்து, கருத்துரைத்தார்.

பல்கலைக்கழகங்களும் அரசாங்கமும் பலகாலமாக செய்ய வேண்டிய பெரும் தமிழ்ப்பணியை, தனியொரு மனிதராக நின்று செய்து முடித்தவர் சி.வை.தாமோதரம் பிள்ளை. 1901 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அவர் மறைந்த போதும், அவர் ஆரம்பித்து தமிழ்ப் பதிப்புப் பணி, தனித்துறையாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பல பழந்தமிழ் நூல்கள் இன்று பலராலும் கற்கப்படுவதற்கும் ஆராயப்படுவதற்கும் ஆதார நிலையாக நிற்பது, தாமோதரம் பிள்ளையின் தியாகம் நிறைந்த பணி என்றால் அது மிகையில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Emperor SR - Ooty,இந்தியா
15-செப்-202211:52:10 IST Report Abuse
Emperor SR அன்னாரது புகழையும் அரும்பணியையும் வெளிஉலகிற்கு எடுத்துக்காட்டிய இந்த கட்டுரைக்கு தினமலருக்கு மிக்க நன்றிகள். சி வை தாமோதரம் பிள்ளை, தமிழ் தாத்தா உ வே சா போன்ற சுயநலமற்ற பெரியோர்களால் அழியாமல் பாதுகாக்கப்பட்ட தமிழ் பொக்கிஷங்களை என்னமோ திருட்டு திராவிட கட்சி கொள்ளைக் கூட்டம் தாம் பாதுகாத்து வளர்த்தது போன்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும் இளைய சமுதாயத்திறனர்
Rate this:
Cancel
Lekshmi N. Pillai - Port Moresby,பாபா நியூ கினியா
12-செப்-202203:31:53 IST Report Abuse
Lekshmi N. Pillai பப்புவா நியூ கினி தமிழ் சங்கம் சார்பாக எங்கள் வணக்கத்தையும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம். பெரியவர் காலம் சென்ட சி வை தாமோதரன் பிள்ளை அவர்களின் பெயரும் புகழும் காலம் முழுவதும் நிலைக்க ஆண்டவனை வேண்டுகிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X