தமிழக காங்., தலைவர் அழகிரி பேட்டி: ராகுல் அணிந்துள்ள 'டி -ஷர்ட்' திருப்பூரில் 'கோல்டன் ஐஸ்' என்ற நிறுவனத்தில் தயாரிக்கப் பட்டது. மொத்தம், 20 ஆயிரம் டி -ஷர்ட்டுகள் தயாரித்தோம். கட்சியினர் அனைவரும் அந்த டி -ஷர்ட் தான் அணிகின்றனர். ராகுல் அணிந்துள்ள டி -ஷர்ட், 40 ஆயிரம் ரூபாயும் அல்ல; 4 லட்சம் ரூபாயும் அல்ல. மோடி தான், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'கோட்' அணிகிறார்.
கடைசி வரை, ராகுல் அணிந்த அந்த 'டி ஷர்ட்' விலை எவ்வளவு என்று சொல்லலையே நீங்க!
தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் பேச்சு: சட்டசபை தேர்தலின்போது, தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு... நான், தி.மு.க.,வின், 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு தான் வெற்றி பெற்றேன். அதற்காக, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற குரல் கொடுக்காமல் இருக்க முடியாது.
இப்படி எல்லாம் குரல் குடுத்தா, அடுத்த தேர்தல்ல இந்த ஒரு, 'சீட்'டைக் கூட உங்களுக்கு தராம கழற்றி விட்டுடுவாங்க!
புதுச்சேரி, காங்., முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி: மத்திய பா.ஜ., அரசு மதத்தின் பெயரால் மக்களை பிரித்து, அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. வட மாநிலங்களை மோடி ஏமாற்றலாம்; தமிழகம், கேரளாவை ஏமாற்ற முடியாது. 2024 லோக்சபா தேர்தலில் மாற்றம் ஏற்படும்.
மத மோதல் ஏற்படும் வகையில் பேசிய கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை, ராகுல் சந்தித்த போதே, மதத்தின் பெயரால் யார் அரசியல் லாபம் தேடுகிறார் என்பது அப்பட்டமாக தெரிந்து விட்டதே!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை: தி.மு.க., அரசு ஆண்டு தோறும் 6 சதவீத அளவுக்கு, மின் கட்டணத்தை உயர்த்தும் வகையில், அனுமதி பெற்று இருப்பதாக வரும் செய்திகள், தமிழக மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மின் கட்டண உயர்வை, தி.மு.க., அரசு திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற மக்கள் விரோத போக்கை ஆட்சியாளர்கள் கைவிட்டு, தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பேணிக் காக்க, ஏதாவது ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மின் கட்டணத்தை உயர்த்தாம, மின் வாரியம் லாபத்தில் ஓட, வழி ஏதாவது வச்சிருந்தால் சொல்லுங்களேன்!
அ.தி.மு.க., மதுரை கிழக்கு மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான ராஜன் செல்லப்பா பேட்டி: பன்னீர்செல்வம் இனி எந்த தவறான வழிக்கும் செல்ல மாட்டார் என, நினைக்கிறேன். அவருடன் இருப்பவர்கள் அவரை தவறான வழிக்கு அழைத்து செல்கின்றனர். பன்னீர்செல்வம், தி.மு.க.,வுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால், அ.தி.மு.க.,வில் சேரலாம். அ.தி.மு.க.,வுக்கு இனி புதிய தலைவர்கள் தேவையில்லை.
இருக்கிற தலைவர்களுக்கு இடையில நடக்கிற பதவி பஞ்சாயத்தே போதும்னு நினைச்சிட்டீங்களோ?