செய்திகள் சில வரிகளில் நாமக்கல்

Added : செப் 13, 2022 | |
Advertisement
தார்ச்சாலை அமைக்க கோரிக்கைவெண்ணந்தூர், செப். 13-ராசிபுரம், வெண்ணந்துார் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதி, அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனந்தகவுண்டம்பாளையம் செல்லும் தார்ச்சாலை சேதமானது. இதனால் புதிய தார்ச்சாலை அமைக்க, ஜல்லி கொட்டப்பட்டு, இரண்டு மாதங்கள் ஆகியும், புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை. சாலைக்கு தார் போடாததால், ஜல்லி

தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
வெண்ணந்தூர், செப். 13-
ராசிபுரம், வெண்ணந்துார் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதி, அரசு ஆண்கள் மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனந்தகவுண்டம்பாளையம் செல்லும் தார்ச்சாலை சேதமானது. இதனால் புதிய தார்ச்சாலை அமைக்க, ஜல்லி கொட்டப்பட்டு, இரண்டு மாதங்கள் ஆகியும், புதிய தார்ச்சாலை அமைக்கவில்லை. சாலைக்கு தார் போடாததால், ஜல்லி கற்கள் பெயர்ந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவிகள், சைக்கிளில் செல்லும் போது கீழே விழுந்து காயப்படுகின்றனர். ஆகையால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், இங்கு விரைந்து தார்ச்சாலையை அமைக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டவுன் பஞ்., 'ஆர்ச்'
சீரமைப்பு துவக்கம்
நாமகிரிப்பேட்டை, செப். 13-
நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர். புதுப்பட்டி டவுன் பஞ்.,சில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த டவுன் பஞ்., எல்லையில், பயணிகளை வரவேற்கும் விதமாக, 'ஆர்ச்' வைக்கப்பட்டுள்ளது. குப்பையில்லா நகரம் என்ற வாசகத்துடன், 20 ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட இந்த வரவேற்பு 'ஆர்ச்', தற்போது துருப்பிடித்து, எழுத்துகள் அழிந்து உள்ளது. எனவே, 'ஆர்ச்'சை சீரமைத்து, புதிதாக பெயிண்ட் அடித்து, குப்பையில்லா நகரம் என்று எழுதும் பணி துவங்கி உள்ளது.
கடந்த, இரண்டு நாட்களாக சாரம் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது, ஆர்ச்சை சுத்தம் செய்து, பெயிண்ட் அடிக்கும் பணி துவங்கி
உள்ளது. 10 நாட்களில் பணிகள் முடிந்து, புதுப்பொலிவுடன் 'ஆர்ச்' தயாராகிவிடும் என, டவுன்
பஞ்., அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
நாமக்கல், செப். 13-
குஜராத் பா.ஜ., ஆட்சியை கண்டித்து, தமிழ் புலிகள் கட்சி சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். நகர செயலாளர் உமாமகேஸ்வரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் கோபி, வினோத் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனித மாண்புகளை சிதைத்து, குஜராத் கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானுவை, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்த குஜராத் பா.ஜ., அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
போர்வெல் குழாய்
சீரமைக்க கோரிக்கை
பள்ளிபாளையம், செப். 13-
ஆண்டிக்காடு பகுதியில் பயனில்லாத போர்வெல் குழாயை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிபாளையம் அடுத்த ஆண்டிக்காடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. தண்ணீர் தேவைக்கு, இப்பகுதியில் போர்வெல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சேதமடைந்த சில ஆண்டாக பயன்பாடு இல்லாமல், காட்சிப் பொருளாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. போர்வெல் குழாயை சீரமைத்தால், இதில் மீண்டும் தண்ணீர் வரும். அப்பகுதி மக்கள் பயனடைவர்கள். மேலும் கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள், போர்வெல் குழாயை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா
ப.வேலூர், செப். 13-
ப.வேலுார் அருகே நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள, மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை மாலை பூச்சூட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து, கருப்பண்ணசாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. நேற்று முன்தினம் சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடந்தது. பின் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும், குடிபாட்டு மக்களும் கலந்து கொண்டனர்.
கும்பாபிேஷகம்
ராசிபுரம், செப். 13-
ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபி ேஷக விழா நேற்று முன்தினம், யாக சாலையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் வந்தனர். நேற்று காலை சிறப்பு பூஜையுடன் யாக சாலையில் இருந்து, கலசம் எடுத்து சென்றனர். காலை கோபுரத்தில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.
தேர்திருவிழா
மல்லசமுத்திரம், செப். 13-
மல்லசமுத்திரம் டாக்டர் சுப்ராயன் சாலையில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், கடந்த, 7ம் தேதி மாலை, 5 மணிக்கு, பங்குதந்தை சங்ககிரி ஜான்ஆரோக்கியராஜ் தலைமையில், கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 8ம் தேதி காலை முதல், 10ம் தேதி மாலை வரை, திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு, அன்னை அலங்கார தேர் மந்திரிப்பு, முக்கிய வீதிகளின் வழியே தேர்பவனி நடந்தது. தேர்பவனி வரும்போது, மக்கள் பட்டாசு வெடித்தும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் பிரார்த்தனை செய்தனர். இரவு, 10 மணிக்கு, திருவிழா கொடியிறக்கம் செய்யப்பட்டது.
வாய்க்காலில் மேடை அகற்றம்
குமாரபாளையம், செப். 13--
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பஸ் நிறுத்தம் வாய்க்கால் பகுதியில், பாலத்தையொட்டி, படித்துறையில் இறங்கி வரும் பொதுமக்களுக்கு இடையூறாக, இரும்பு ஆங்கிள் மற்றும் பலகையால் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. இதை யார் அமைத்தனர் என்று பொதுப்பணித்
துறையினர் விசாரித்தும் பலனில்லை. குழந்தைகள் இதன்மீது ஏறி விளையாடி வந்தனர். மதுப்பிரியர்கள் இந்த மேடை மீது அமர்ந்து, மது அருந்தி வந்தனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், மேடையை அகற்ற வலியுறுத்தி, காலைக்கதிர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, வாய்க்காலில் அமைக்கப்பட்ட மேடையை, பொதுப்பணித்துறை பணியாளர்கள் அகற்றினர்.
சாலைப்பணி மந்தம்: பொதுமக்கள் அவதி
ராசிபுரம், செப். 13-
ராசிபுரத்தில் இருந்து ஆண்டகலுார் கேட் செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி, கடந்த ஒரு மாதத்துக்கு முன் துவங்கியது. சாலையின், இரண்டு பக்கமும், 3 அடிக்கு சாலை அகலப்படுத்தப்படுகிறது.
இதற்காக சாலையை தோண்டி ஜல்லி கற்கள், கான்கிரீட் கொட்டப்பட்டு, மேலே சாலை அமைக்கும் பணி நடக்கிறது. காலை, மாலை அலுவலக நேரத்தில் இந்த பணியால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, விடுமுறை உள்ளிட்ட நேரங்களில், விரைவாக பணியை முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தற்போது இப்பணி மிகவும் மந்தமாக நடக்கிறது.ஒரு பக்கம் பாதையை தோண்டி, கான்கிரீட் போட்ட நிலையில், பணி முடிவடையாமல் உள்ளதால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவ்வழியாகத்தான் பள்ளி, கல்லுாரி வாகனங்களும் செல்வதால், பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஓய்வு அதிகாரி வீட்டில்
5 பவுன் நகை திருட்டு
எருமப்பட்டி, செப். 13-
எருமப்பட்டியில், ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி வீட்டில், 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
எருமப்பட்டி கணேசர் தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல், 60. ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரியான இவர். 11ம் தேதி, தனது உறவினர் திருமணத்துக்கு, பழனிக்கு குடும்பத்துடன் சென்றார். பின், அன்று இரவு, 9 மணிக்கு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே வைத்திருந்த, 5 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மின்கம்பி அறுந்து தீ விபத்து
ப.வேலுார், செப். 13-
நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே குப்பிச்சிபாளையம் செட்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராசப்பன், 50. இவர், அப்பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து நார் தயாரிக்கும் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு, 10 மணிக்கு, மின்சாரம் கம்பி அறுந்து தேங்காய் நார் மேல் விழுந்து, திடீரென தீப்பிடிக்க ஆரம்பித்தது. உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்புத்துறை தகவல் கொடுத்ததன் பேரில், அவர்கள் சம்பவ இடம் வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து ப.வேலுார் விசாரிக்கின்றனர்.
கணவர் கொலைக்கு முக்கிய சாட்சி
பாதுகாப்பு கேட்டு மனைவி கதறல்
நாமக்கல், செப். 13-
'என் கணவரை கொலை செய்ததற்கு, நான் முக்கிய சாட்சியாக இருப்பதால், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அதனால், எனக்கும், என் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, கொல்லிமலை செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பேபி என்ற பெண், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என் கணவர் செல்வராஜை, கடந்த, 22ல், கொல்லி மலையை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் சிலர், சொத்துக்காக கொலை செய்துவிட்டனர். என் கணவரின் கொலைக்கு நான்தான் முக்கியசாட்சி. அதனால், என் வீட்டுக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து, பொருட்களை அடித்து நொறுக்கி சேதம் செய்தனர். மேலும், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கும், என் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீடுதோறும் கொசு மருந்து அடிப்பு
பள்ளிபாளையம், செப். 13-
காலைக்கதிர் செய்தி
எதிரொலியாக, பள்ளிபாளை யத்தில் வீடுதோறும் கொசு மருந்து அடிக்கப்படுகிறது.
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. காலை, மாலை நேரங்களில் குடியிருப்பு பகுதியில் கொசு படையெடுத்து வருகிறது. கொசுக் கடியால் பெரியவர்கள், சிறுவர்கள் என, அனைத்த தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் வருவதற்கும் வாய்ப்புள்ளது என, கடந்த, 10ம் தேதி, காலைக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக,
நகராட்சி சார்பில் கடந்த 2 நாட்களாக வீடுதோறும் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொசு தொல்லை இல்லாமல் உள்ளது. அதேபோல், ஒன்றிய பகுதியிலும் கொசு மருந்து அடிக்க பி.டி.ஓ., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'பைபாஸ்' சாலையில்
போக்குவரத்து நெரிசல்
ப.வேலுார், செப். 13-
ப.வேலுார் பழைய பைபாஸ் சாலையில், வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்தி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ப.வேலுார் பைபாஸ் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், வங்கிகள் உள்ளன. இங்கு வருபவர்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களையும், கார்களையும் ரோட்டிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள், நிலை தடுமாறி விபத்துகளும் நடக்கின்றன. இதேபோல், பழைய பைபாஸ் சாலை, சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு எதிரே உள்ள பெரும்பாலான இடங்களில், வாகனங்கள் இரவு நேரத்தில் கூட சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்வதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
நான்கு சக்கர வாகன பழுதுபார்க்கும் நிறுவனங்கள் முன்பு, பல மாதங்களாக சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி
வைத்துள்ளனர்.
ஆகையால், ப.வேலுார் போக்குவரத்து போலீசார், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X